ஓட்டு கேட்க வரும்போது மட்டும்தான் கும்பிடுவோம் - அமைச்சர் ஆர்.காந்தி

ஓட்டு கேட்க வரும்போது மட்டும்தான் கும்பிடுவோம் - அமைச்சர் ஆர்.காந்தி

தேர்தல் நேரத்தில் நாங்கள் ஓட்டு கேட்க வரும்போது  மட்டும்தான் பார்க்கிற எல்லாரையும் கும்பிடுவோம்,  காலில் விழுவோம்,  டீ கடையில் டீ போட்டு தருவோம். அதன் பிறகு எங்களுக்கு கண்ணே தெரியாது என அமைச்சர் ஆர். காந்தி பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சீனியர் அமைச்சரான  பொன்முடி ஒரு பொது நிகழ்ச்சியில்   பேருந்தில் இலவச பயணம் செல்லும் பெண்களை  ஓசி பயணம் எனக் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சேர்ந்த அரசு அதிகாரியை சமூகத்தின் பெயரைக் கூறி திட்டியது என இப்படி வரிசையாகக் கூறிக்கொண்டே போகலாம்.

 இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசியபோது “விடிந்தால் என்ன பிரச்சினை வருமோ என தூக்கம் கூட வர மாட்டேங்கிறது“ என உருக்கமாக தெரிவித்தார்.

தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் பொதுவெளியில் தவறாக பேசுவதும், அவற்றை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதையும் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், இனி வார்த்தைகளில் கவனம் தேவை, அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது அமைச்சர் காந்தியின் பேச்சும் சர்ச்சையாக அமைந்துவிட்டது.

அமைச்சர் காந்தி

கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் பயனாளிகளுக்கு 1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது . இந்த விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

 அதன் பின் விழாவில் பேசிய அமைச்சர் காந்தி, நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து கையெடுத்து கும்பிடுவோம். அப்புறம் எங்களுக்கு கண்ணே தெரியாது எனக் கூறியுள்ளார்.

வெற்றி பெற்றுவிட்டால் எங்களுக்கு கண்ணே தெரியாது. உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என மக்களாகிய நீங்கள்தான் யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என்றார்.

தேர்தல் வரும் சமயத்தில் மட்டும்தான் அரசியல்வாதிகள் தொகுதி பக்கம் வருவார்கள். வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அதற்கு பிறகு தொகுதி பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார்கள் .

இதை நிஜம் ஆக்கும் வகையில் அமைச்சர் காந்தி பேசியிருப்பது   மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com