மக்கள் ஐடி
மக்கள் ஐடி

ஆதாரில் இல்லாத தகவல்கள் என்னென்ன மக்கள் ஐடியில் உள்ளது?

அடையாள அட்டைகளை பற்றி சிறுகுறிப்பு

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை என்பது எண்பதுகளில் உருவான கனவு. வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தரப்படவேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் எடுத்த முயற்சியால் வாக்காளர் அடையாள அட்டை சாத்தியமானது.

90கள் வரை வாக்காளர் அடையாள அட்டை பெறுவதே பெரிய சவாலான விஷயமாக இருந்தது. அதுவே அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

அடுத்த கட்டமாகத்தான் ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் கார்டு கட்டாயம் என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். கொரோனா காலகட்டத்தில் ஆதார் பயன்பாடு உச்சத்தில் இருந்தது.

ஆதார் எண் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை முதல் கொரோனா தடுப்பூசி வரை அனைத்தும் கிடைத்தன. நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அவசியம் என்கிற நிலை கொண்டு வரப்பட்டது.

இந்திய குடிமக்களில் எந்தவொரு தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண் முக்கியம். ஆதார் எண்ணைக் கொண்டே வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள் வாங்குதல், ஏன் ஒரு சிம் கார்டு வாங்குவதற்கும் கூட இந்த பன்னிரண்டு இலக்கம் கொண்ட ஆதார் எண்ணே அவசியம் என்பதை அறிவோம்.

இந்நிலையில்தான் தமிழக அரசு, இன்னொரு புதிய அடையாள அட்டையை அறிவித்திருக்கிறது. தமிழக மக்களுக்கென்று தனியாக ஒரு அடையாள எண் வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதுதான் தெரியவில்லை.

மக்கள் ஐடி, 10 முதல் 12 இலக்கங்கள் கொண்டிருக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டில் பிறந்தவரா, என்ன சாதியைச் சேர்ந்தவர் என்கிற தனி நபர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, இதில் இணைக்கப்படும் என்கிறார்கள். ஆக, ஆதாரில் இல்லாத தகவல்களை மக்கள் ஐடி கொண்டிருக்கும்.

ரேஷன் கார்டுதான், வறுமைக்கோட்டிற்கு கீழேயும் மேலேயும் உள்ள மக்களை அடையாளம் காட்டுகிறது. ரேஷன் கார்டு எண் இருக்கும்போது எதற்காக மக்கள் ஐடி என்கிற கேள்வி எழுகிறது.

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்வதற்காக உருவாக்கப்படுவதாக இருந்தால் அதற்கு ஆதார் கார்டு போதுமானது. அப்படியென்றால் ஆதார் கார்டுக்கு மாற்றாக மக்கள் ஐடி அமையப்போகிறதா?

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இணையத்தளம் உருவாக்கப்பட்டு மக்கள் ஐடிக்கான பணிகள் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பணிகள் ஆரம்பமாகும். மக்கள் ஐடிக்கு எத்தனை கோடி செலவு ஆகப்போகிறது, எங்கிருந்து நிதி பெறப்படப் போகிறது என்பது தெரியவில்லை. தமிழக மக்கள் என்ற அடையாளத்திற்குக் காத்திருப்போம். வேறு வழி?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com