இந்த புத்தகக் காட்சியில் என்ன வாங்கலாம்? - பிரபல எழுத்தாளர்களின் பரிந்துரைகள்!

இந்த புத்தகக் காட்சியில் என்ன வாங்கலாம்? - பிரபல எழுத்தாளர்களின் பரிந்துரைகள்!

எழுத்தாளர் சோம.வள்ளியப்பன்: நிதி சார்ந்து தொடர்ந்து எழுதக்கூடியவர். பேச்சாளர், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர். சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, நிதி சார்ந்த முதலீடுகள், நேர மேலாண்மை, சுய ஆளுமை குறித்து பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்.

நிதிமேலாண்மை குறித்து தொடர்ந்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நிறைய பங்களிப்புகளை செய்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக்காட்சியில் சொல்லாததையும் செய், நேரத்தை உரமாக்கு என இவரது இரண்டு புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் மூலமாக வெளியாகியிருக்கின்றன.

இனி எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் பார்வையில் டாப் 3 பரிந்துரைகளை பார்ப்போம்,

  • என் சரித்திரம் (தமிழ்த் தாத்தா உ.வே.சா) - நற்றிணை பதிப்பகம்

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. தமிழின் முக்கியமான இலக்கியப் படைப்புகளை வாசிக்க காரணமாக இருந்தவர். இதுவரை நாம் இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தலைமுறைக்கு தந்தவர். அவருடைய அனுபவக்குறிப்புகள் புத்தகமாக வெளிவந்து கிளாஸிக் வரிசையில் தொடர்ந்து இருக்கிறது.

  • அசோகமித்திரன் சிறுகதைகள் - காலச்சுவடு பதிப்பகம்

அசோகமித்திரன், தமிழின் முக்கியமான எழுத்தாளர். எழுத்தாளர்களுக்கான எழுத்தாளர் என்று சொல்ல முடிமயும். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், அவரது சிறுகதைகள் இந்தியாவின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

  • சிந்தையில் ஆயிரம் - ஸ்ரீசெண்பகா பதிப்பகம்

கலக எழுத்தாளரான ஜெயகாந்தன், ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியவர். அவரது கட்டுரைகளும் செறிவானவை. அதிலும் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள் உண்டு. அவரது கட்டுரைகளின் முழுத்தொகுப்பு சிந்தையில் ஆயிரம் என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.

எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன்: பெங்களூரில் பணிபுரிகிறார். இது வரை 28 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அறிவியல், அரசியல், சினிமா, புனைகதை, கட்டுரை என்று நீண்ட பரப்பில் நீளும் பல்வேறு படைப்புகளை வெளியிட்டிருக்கிறார். இளம் எழுத்தாளருக்கான உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது பெற்றிருக்கிறார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த நூல் என்னும் பெருமை இவரது புத்தகத்திற்குக் கிடைத்திருக்கிறது.

இவரது சமீபத்திய வெளியிடான ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு, தமிழ் புத்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி சரவண கார்த்திகேயனின் பார்வையில் டாப் 3 பரிந்துரைகளை பார்ப்போம்,

  • சுந்தர ராமசாமி சிறுகதைகள்

சுந்தர ராமசாமி, தமிழின் மிகப்பெரிய எழுத்தாளர். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும். செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு சொல்லப்பட்ட கதைகள். தனி மனித சோகங்களையும், அவலங்களையும் கச்சிதமாக பதிவு செய்திருக்கின்றன.

  • பின்தொடரும் நிழலின் குரல் - தமிழினி பதிப்பகம்

ஜெயமோகனின் முக்கியமான நாவல். ஒரு இடதுசாரியின் பார்வையில் வரலாற்றையும் மானுட அறத்தை தேடும் தனி மனிதனின் தேடல்களையும் பதிவு செய்திருக்கிறது.

  • கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - உயிர்மை வெளியீடு

சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதியவற்றின் தொகுப்பு. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என பல்வேறு தரப்பில் விரிகின்றன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com