‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ - திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்…

 ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’  - திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்…

“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்” என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் பாஜக அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், அங்கு இன்னும்  கட்டுமான பணிகள்  எதுவும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

முதலில் அங்கு இடம் கையகப்படுத்துவதில் பிரச்சினை என கூறப்பட்டது. பின்னர் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நேரத்தில், மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமலே இருக்கிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒற்றை செங்கலைக் காண்பித்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி இதுவரை தொடங்கவில்லை என்று கிண்டலடித்தார்.

இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில்,   ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’  என மதுரையில் மா.கம்யூ தலைமையில் திமுக கூட்டணி கட்சியின் போராட்டம் நடத்தினர். அவர்களின் கைகளில், எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வைத்துக்கொண்டு முழக்கம் எழுப்பினர்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று (ஜன.24) தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.

  ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி அகியோரும், தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. தளபதி, ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. பூமிநாதன் மற்றும் தோழமை கட்சியினர், தொழில் முனைவோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகளான தூத்துக்குடி இருவழி ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மதுரையில் துவங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுப்படுத்தி, குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com