ஆசிரியர்கள் போராட்டம் ஏன்? கண்டுகொள்ளுமா திமுக அரசு?

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்? கண்டுகொள்ளுமா திமுக அரசு?

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், ஐந்தாவது நாளாக தொடர்கிறது. டிசம்பர் 27 முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சென்னைக்கு வந்துள்ள 2000 ஆசிரியர்களின் போராட்டம், திடீரென்று அறிவிக்கப்பட்டதல்ல.

இதே ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் உறுதி கொடுத்திருந்தார். ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

என்னதான் கோரிக்கை? ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிதான். ஆனால் ஊதியம் மட்டும் வேறு. ஒருநாள் பணிக்கு தாமதமாக சென்றாலும் ஊதியக் குறைப்பு, ஒரே பணியை செய்பவர்களிடையே 3000 ரூபாய் வரை ஊதிய மாறுபாடு உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் ரூ.30,000 கோடிக்கு மேல் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 250 கோடி மட்டுமே செலவாகும் என்கிறார்கள். ஆனால், நிதிச்சுமையை காரணம் காட்டி தி.மு.க அரசு, ஊதிய உயர்வை தள்ளிப் போடுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

பள்ளி ஆசிரியர்கள் முதல் கல்லூரி ஆசிரியர்கள் பலருக்கும் மாதம் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், கல்வியாளர்களை அரசுகள் மதிக்கும் லட்சணம் இதுதான்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவிப்பதாக இருந்தது. பிரதமர் மோடியின் தாயார் மறைவால் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக பா.ஜ.கவின் பிரநிதிகள் போராட்டக்கார்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். இன்று நாம் தமிழர் இயக்கர் சார்பில் சீமான் நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்தார்.

அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் வரவிருப்பதால், அரசியல் ரீதியாக தி.மு.க அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் இறங்கிய தி.மு.கவினர், ஆட்சிக்கு வந்ததும் மாறிப்போய்விட்டார்கள் என்கிறது கமலாலயம் வட்டாரம்.

புத்தாண்டு நாளில் போராட்டத்திற்கு முடிவு வருமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com