பொன்னியின் செல்வன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா! சதய விழாவிற்கு அரசே நிதி ஒதுக்குமா?

 சதய விழா
சதய விழா

தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாளான சதய விழாவை , இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது பலதரப்பினரிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. பொது மக்கள் உட்பட பலரின் கோரிக்கையை ஏற்றே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முடிவினை வெளியிட்டிருக்கிறார்.

எனினும் இது குறித்து பொது மக்களிடையே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. ராஜராஜ சோழன் பிறந்த நாளான சதய விழாவை அரசு விழாவாக அறிவித்திருப்பதன் மூலம் விழாவிற்கு அரசே நிதி ஒதுக்குமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. அதே நேரத்தில் ராஜராஜ சோழன் சதய விழா இதுவரை அரசு சார்பில் தானே கொண்டாப்பட்டு வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராஜராஜசோழன்
ராஜராஜசோழன்

பொதுவாக அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த பெரிய கோயில் அறங்காவலரான பாபாஜி ராஜா பான்ஸ்லே ஒருங்கிணைப்பில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பில் சதய விழா நடத்தப்படுவது தான் வழக்கம். இந்த சதய விழாவிற்கு தேவையான நிதி அரண்மனை தேவஸ்தானத்தின் பெயரில் வசூல் செய்யப்படும். அந்த நிதியின் மூலம் விழா நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்பு அரசு சார்பில் இதற்காக தனியாக நிதி ஒதுக்குவது கிடையாது என சொல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்பட்டு அறநிலையத்துறை மேற்பார்வையில் விழா நடைபெறுவதால் அரசு விழாவாக நடத்தப்பட்டதாக பலரும் கருதினர். தற்போது விழா செலவை அரசு ஏற்குமா? என்பதில் நிறைய குழப்பம் நிலவி வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் வரும் நாளை ராஜராஜ சோழன் சதய விழாவாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் 1,037வது சதய விழா நேற்று தஞ்சாவூர் பெரியகோயிலில் மங்கள இசையுடன் தொடங்கியது.

இரண்டு நாள் நடைபெறும் சதய விழாவினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பார். பெரியகோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு முதலில் மாவட்ட ஆட்சியர் மாலை அணித்து மரியாதை செய்வார். மேலும் முக்கிய நிகழ்வான சதயவிழா தினத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com