வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் அசத்தும் ஆசிரியர்!

– ஜிக்கன்னு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் வாட்டர் ஆப்பிள் பழ சாகுபடியை தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன் செய்து அசத்துகிறார்.

தர்மபுரியில் அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் சரவணன், வாட்டர் ஆப்பிள் செடிகள் வளர்ப்பது குறித்து பேசினார்.

''வழக்கமான விவசாயத்தை செய்வதற்கு பதில் மாற்று விவசாயத்தை ஏன் செய்யக்கூடாது என்ற ஆர்வத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு வாட்டர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்தேன். எங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில் இந்த வாட்டர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.

இரண்டே வருடங்களில் வாட்டர் ஆப்பிள் பழங்கள் அறுவடைக்கு வந்தன. வருடத்தில் மூன்று முறை விளைச்சல் கிடைக்கிறது, வியாபாரிகளும் பொதுமக்களும் இங்கே நேரிடையாக வந்து வாங்கி செல்வதால் விற்பனையும் நன்றாகவே இருக்கிறது, சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான வாட்டர் ஆப்பிள் வகைகளை என் தோட்டத்தில் நடவு செய்துள்ளேன்.'' என்கிறார் சரவணன்.

சராசரியாக ஒரு கிலோ வாட்டர் ஆப்பிளின் விலை ஐம்பது ரூபாய் என கணக்கிட்டால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம்.  மீதமுள்ள நிலத்தில் கொய்யா, மாதுளை, முள்சீத்தா, அத்தி போன்ற பழ வகைகளையும் பயிரிட்டுள்ளார் சரவணன். மேலும் வாட்டர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனையும் செய்கிறார்.

''இந்த பழத்தின் பெயர் வாட்டர் ஆப்பிள் என்றூ இருந்தாலும்,ஆப்பிளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த பழம், நீர்ச்சத்து நிரம்பி தாகத்தை தணிக்கக் கூடியது.'' என்கிறார் சரவணன்.

மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை தருமபுரி போன்ற சமநிலங்களிலும், இங்குள்ள பருவநிலையிலும் விளைவிக்கமுடியும் நிரூபித்திருக்கிறார் சரவணன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com