உஷார்! ஆன்லைன் மோசடியில் மெசேஜ் க்ளிக் செய்து பெருந்தொகை இழந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!

உஷார்! ஆன்லைன் மோசடியில் மெசேஜ் க்ளிக் செய்து பெருந்தொகை இழந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!

உங்கள் அக்கவுண்ட்டில் இவ்வளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை நீங்கள் சோதித்துக் கொள்ளலாம். இது நம்மில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி வரக்கூடிய ஃபேக் மெசேஜ்களில் ஒன்று. இப்படி மெசேஜ் வந்தால் அதை க்ளிக் செய்யக்கூடாது என்று எச்சரித்து செல்ஃபோன் நிறுவனங்களும், வங்கிகளும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் நமது ஜாதகங்களில் கெடுபலன் உச்சத்தில் இருந்தால் அந்த எச்சரிக்கை எல்லாம் ஞாபகத்தில் வராது போலும்.

இதோ இப்படி ஒரு அனர்த்தத்திற்கு சமீபத்தில் மீண்டும் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

இந்த வகைக் குற்றங்கள் ஸைபர் க்ரைம் வகையின் கீழ் வருகின்றன.

இதில் இப்போது பலியாகி இருப்பவர் கூட ஒரு பிரபலத்தின் சகோதரர் தான்.

நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் தான் இப்படி ஒரு ஆன்லைன் மோசடிக்கு தற்போது ஆளாகி உள்ளார்.

அவரது கூற்றுப்படி பார்த்தால், இப்படியான குற்றங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு அவருக்கு முன்பே இருந்திருக்கிறது, அப்படி இருந்தும் கூட ஏமாந்திருக்கிறார் என்றால் ஏமாற்றுக்காரர்களின் கிரிமினல் உத்தியையும், புத்தியையும் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் எத்தனை திறமையாக தங்களது ஏமாற்று வலையைப் பின்னி இருக்கிறார்கள் என்றால், அப்படியே ஒரிஜினல் வங்கி லோகோ போலவே செட் செய்து தங்களுக்கான ஃப்ராடு வலைத்தளத்தை அமைத்திருக்கிறார்கள். அவர்களால் அனுப்பப்படும் லிங்கை க்ளிக் செய்தால் அது உடனடியாக நம்மை இந்த தளத்திற்கு இட்டுச் செல்லும். இந்த தளத்தில் நாம் நமது அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையைச் சோதிக்கத் தொடங்கினோம் எனில் நமது தகவல்கள் அவர்களால் திருடப்பட்டு நமது வங்கிக் கணக்கு எண்ணிலிருந்து அவர்களால் பணத்தை திருட முடிகிறது. இதை தடுக்க எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் கூட சமயத்தில் நாம் நமது புத்தியை அடமானம் வைத்து விட்டு சூழலுக்கு இரையாகி சில செயல்களைச் செய்யுமாறு தூண்டப்பட்டு விடுகிறோம். அதனால் தான் பெரும் தொகையாகப் பணத்தை இழந்து அல்லாட வேண்டியதாகி விடுகிறது.

இமான் அண்ணாச்சியின் தம்பியும் அதைத்தான் சொல்கிறார். எப்போதுமே உஷாராக இருக்கக் கூடிய நான், அன்று ஏன் அந்த லிங்கை க்ளிக் செய்தேன் என்றால், சில ஆப்கள் ரிவார்டு பாயிண்டுகள் தரும் அல்லவா, அதில் நிறைய பாயிண்டுகள் மிச்சமாகி இருக்கின்றன. அதைப் பயன்படுத்த இன்றே கடைசி நாள் என்று மெசேஜ் வந்தது, அவர்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்ததும் அது வேறொரு தளத்தில் ஒரிஜினல் பேங்க் லோகோவுடன் திறந்தது. அதில் என்னுடைய அக்கவுண்ட் தகவல்களை நான் பதிவு செய்ததுமே நிலமை என் கட்டுப்பாட்டில் இல்லை. இத்தனைக்கும் நான் என் அண்ணன் மகனது உதவியுடன் தான் இதெல்லாம் செய்தேன். அவன் சொன்னபடி ஓ டி பி வராமல் அக்கவுண்டில் இருந்து பணம் போகாது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் போச்சு… கிட்டத்தட்ட 2,20, 000 ரூபாய்க்கும் மேலயே இழந்துட்டேன் என்கிறார். இத்தனைக்கும் தனது வங்கி எண்ணைப் பயன்படுத்தி ஏதோ குளறுபடி நடக்கிறது என்று இவர் உஷாரடைந்து வங்கியின் கஸ்டமர் கேர் பிரிவுக்கு இது குறித்து உடனடியாகத் தகவலும் கொடுத்திருக்கிறார். ஆனால், அங்கு ஆக்ஷன் எடுக்க சற்றே தாமதமானதில் பணம் பணால் ஆகி விட்டது.

இதில் ஆறுதலான விஷயம் ஒன்று உண்டு. செல்வகுமார் தனக்கு நடந்த இந்த ஆன்லைன் ஃபிராடு குறித்து உடனடியாக 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் பதிவு செய்திருக்கிறார். பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் இந்த எண்ணில் புகார் பதிவு செய்தால் வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வழி இருக்கிறது என்று காவல்துறை நண்பர் ஒருவர் சொல்லவே அதை உடனடியாகச் செய்து முடித்திருக்கிறார் செல்வகுமார். ஆகவே அவருக்கு இழந்த பணத்தை திரும்ப மீட்க வழி இருக்கிறது என்று நம்பலாம்.

இந்த செய்தியை வாசிப்பவர்களில் எவருக்கேனும் இப்படி ஒரு மோசமான அனுபவம் நேர்ந்திருந்தால் மறவாமல் உங்களது அனுபவத்தை இங்கே பதிவு செய்யுங்கள். ஏனெனில் கர்நாடக மாநில காவல்துறை சமீபத்தில் ஒரு செய்தியைப் பதிவு செய்திருந்தது. அதன்படி அம்மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டுமாக 530 கோடி ரூபாய்களுக்கு மேல் ஆன்லைன் மோசடியில் பொதுமக்களுக்கு பணம் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நெட் பேங்கிங் செய்யும் போதும், கூகுள் பே பயன்படுத்தும் போதும், இது போன்று வரும் ஃபேக் மெசேஜ்களை கையாளும் போதும் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருந்தாக வேண்டும் என்பது புரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com