ரோபோக்களைக் கூட பணி நீக்கம் செய்த கூகுள்.

ரோபோக்களைக் கூட பணி நீக்கம் செய்த கூகுள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்பத் துறையானது அசுர வளர்ச்சியடைந்த நிலையில், தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலை காரணமாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் 12000 ஊழியர்கள் கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே ஐடி ஊழியர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி வருகிறார்கள். 

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய ஊழியர்களே. இந்தியாவில் மட்டும் 450-480 நபர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில், நேரடி மேலாளரின் கட்டுப்பாட்டில் பணியாற்றாத ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் பேக்ரவுண்ட் டெவலப்பர், கிளவுட் இன்ஜினியர், சாப்ட்வேர் டெவலப்பர், மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணியில் இருந்தவர்களை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். 

இதன் அடுத்த கட்டமாக, எவ்ரிடே ரோபாட்ஸ் (Everyday Robots) என்ற கூகுள் நிறுவனத்தின் பரிசோதனைத் துறை, தொடங்கிய ஓராண்டுக்கு பின் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த ரோபோக்கள் அனைத்தும் ஆல்பாபெட் நிறுவனத்தின் ஆய்வகத்தில் உருவாகியவை. இந்த ரோபோக்கள் கதவுகளைத் திறப்பது, உணவு மேஜைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், பயன்பாட்டில் இருந்து அல்பாபெட் நிறுவனம் இந்த ரோபோக்களை நிறுத்திவிட்டது. இதனால் மிகப்பெரிய செலவு குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதைப் பற்றி எவ்ரிடே ரோபாட்ஸ்-ன் தகவல் பரிமாற்ற பிரிவு இயக்குனர் டென்னிஸ் காம்போவா கூறுகையில், "இனி ஆல்பாபெட் திட்டத்தின் கீழ் எவரிடே ரோபாட்ஸ் இருக்காது, சில தொழில்நுட்பம் மற்றும் கூகுள் ரிசர்ச் சார்ந்த விஷயங்களில் இது ஒன்றிணைக்கப்படுகிறது" என தெரிவித்தார். 

கூகுள் நிறுவனமானது ஆட்குறைப்பு அறிவிப்புகளுக்குப் பின், செலவுகளைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட நிரந்தர சீட்கள், தற்போது சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. அதாவது தங்களுடைய அலுவலக மேஜைகளை பிற ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த மேஜை பகிர்வு திட்டம், கூகுள் க்ளவுட் சேவை பிரிவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும். மேலும், கூகுள் நிர்வாகம் இயங்கி வரும் சில கட்டிடங்களும் காலி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் செலவுகள் அதிக அளவில் மிச்சமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மட்டுமின்றி மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், ட்விட்டர் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மிகப்பெரிய காரணம் பொருளாதார மந்த நிலை மற்றும் சந்தையில் நிலவும் நிலையற்ற சூழலாகும். இதனால் உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்து வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com