கேரளா கோவிலில் ரோபோ யானை.

கேரளா கோவிலில் ரோபோ யானை.

கேரளாவில் உள்ள கோயில்களில், சிறப்பு பூஜைகள் யானைகள் இன்றி நடைபெறாது. இதற்காக பயன்படுத்தப்படும் யானைகள் தன் காலில் பூட்டப் பட்டிருக்கும் சங்கிலியின் நீளம் வரை மட்டுமே நடக்க முடியும். என்னதான் இந்த யானைகளுக்கு ராஜ மரியாதை கிடைத்தாலும், சுதந்திரம் என்பது இவைகளுக்குக் கேள்விக்குறிதான். நாட்டின் சுமார் 2500 சிறை பிடிக்கப்பட்ட யானைகளில், ஐந்தில் ஒரு பங்கு கேரளாவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பல ஆண்டுகளாக விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றின் சிகிச்சைகள் குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தனர். 2018 மற்றும் 2023க்கு இடைப்பட்ட காலத்தில், கிட்டத்தட்ட 138 சிறை பிடிக்கப்பட்ட யானைகள் இறந்திருப்பதாகக் கூறி, யானைகளின் இறப்பு அதிகரிப்பு குறித்து கேரள மாநிலத்தின் முதல்வருக்கு விலங்கு உரிமை ஆராய்ச்சி மையம் கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தது. 

இந்நிலையில் கேரளாவில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளி கிருஷ்ணர் கோயிலுக்கு 'எந்திர யானை' ஒன்றை PETA அமைப்பினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இனிவரும் காலங்களில் பூஜைகளுக்கும் விழாக்களுக்கும் சேவை செய்ய இந்த யானை தான் பயன்படுத்தப்படும். 

11 அடி உயரம், 800 கிலோ எடையுடன் இரும்பு சட்டத்தைக் கொண்டு இந்த யானை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேற்புறத்தில் அச்சு அசல் பார்ப்பதற்கு யானை போலவே இருக்கும் படியாக ரப்பர் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதும் வால் மற்றும் காதுகளை ஆட்டிய வண்ணம் இருக்கும் இந்த யானை, அதன் இயக்கத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. "இரிஞ்சாடப்பிள்ளி ராமர்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த யானையின் மீது, ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். 5 லட்ச ரூபாய் செலவில் இரண்டே மாதத்தில் இந்த மெக்கானிக்கல் யானை செய்யப்பட்டுள்ளது. 

"கேரளாவில் உள்ள மற்ற கோவில்களுக்கும் ரோபோடிக் யானை மூலமாக சடங்குகளை செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்" என கோவில் பூசாரி ராஜ்குமார் நம்பூதிரி கூறியிருந்தார். 

இதுகுறித்து பீட்டா இந்தியா தனது ட்விட்டர் பதிவில், 

பார்ப்பதற்கு நிஜ யானை போலவே இருக்கும் இரிஞ்சாடப்பிள்ளி ராமரைச் சந்தியுங்கள். இவன் முழுவதும் இயந்திரத்தால் ஆனவன். கோயில் நிகழ்வுகளுக்காக சிறைபிடிக்கப்பட்ட யானைகள் அடிக்கப்பட்டு, சங்கிலியிடப்பட்டு தனிமைப் படுத்தப்படுகின்றன. இனி கேரளாவில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளி கிருஷ்ணர் கோயிலில் சடங்குகள் செய்ய, நிஜ யானை போலவே தோற்றமளிக்கும் இயந்திர யானைதான் பயன்படுத்தப்படும். 

யானைகள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் வாழ வேண்டிய ஓர் சமூக வாழ் உயிரினம். நாங்கள் நன்கொடையாக கொடுத்துள்ள இந்த ரோபோடிக் யானை மூலமாக, உண்மையான யானைகள் தன் குடும்பத்துடன் காட்டில் சுதந்திரமாக வாழ முடியும். இனி உங்கள் உள்ளூர் கோவில் நிகழ்வுகளிலும் ரோபோடிக் யானையை உபயோகிக்க ஊக்குவியுங்கள். இனி யானைகளை சங்கிலியின்றி சுதந்திரமாக சரணாலயத்திற்கு அனுப்பி வையுங்கள்" எனத் தெரிவித்துள்ளது. 

https://twitter.com/PetaIndia/status/1629855136175775745?s=20 

விலங்குகளின் துஷ்பிரயோகத்தை நிறுத்துவதற்கும், மேலும் அவை மரியாதைக்குரிய கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதிப்பதற்கும், இந்த ரோபோடிக் யானை பயன்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com