AI துறை படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள். எதிர்காலம் இதுதானா?


AI துறை படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள். எதிர்காலம் இதுதானா?

செயற்கை நுண்ணறிவு அல்லது மெய்நிகர் அறிவு என்று தமிழில் குறிப்பிடப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ChatGPT, Bard போன்றவற்றின் வருகை, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது எனலாம். 

பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், தற்போது செல்போன் செயலிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், சட்டம், நிதி மேலாண்மை, மனிதவளம், தொலைத்தொடர்பு என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். 

தினந்தோறும் வளரும் தொழில்நுட்பத்தால், இந்தத் துறையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் போதிய வேலை வாய்ப்புகள் இருக்குமா என்ற கேள்வியையும் கல்வியாளர்கள் முன் வைக்கின்றனர். 2027இல் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் சவாலாக இருக்கும் என்றும், அதிக வேலை வாய்ப்புகள் பெருகி இருக்கும் என்றும் இருவேறு கருத்துக்களை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். 

பொதுத்தேர்வு முடிவு வெளியானதற்கு பின்பு, பல தனியார் கல்லூரிகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவில் சேர்வதற்கு, மாணவர்கள் போட்டிப் போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பாடத்திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் செயற்கை நுண்ணறிவு பாடத்தை தங்கள் முதல் விருப்பமாகத் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள், செயலிகள், தரவுகளின் தேவை அதிகரித்திருப்பதால், தொழில்நுட்பம், பொறியியல் சார்ந்த அனைத்து துறைகளும் இனி செயற்கை நுண்ணறிவின் உதவி இல்லாமல் இயங்காது என்ற நிலை விரைவில் எட்டப்படும் சூழல் நிலவுகிறது.

ஒரு காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்பது, ஏதோ ஒரு கல்லூரியில் அல்லது ஏதோ ஒரு தொழிற்சாலையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது AI துறையின் தாக்கம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே வர ஆரம்பித்து விட்டது. இதே போல எதிர்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் AI தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்காலமே செயற்கை நுண்ணறிவுதான் என்றான பிறகு, அவற்றில் போதிய வேலை வாய்ப்புகள் உருவானால் மட்டுமே அந்தத் துறைக்கான மதிப்பு பெருகும் என்பதே நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com