நான்கே நாளில் நடந்த 2வது சோக சம்பவம்! திருமண விழாவில் நடனமாடும்போது திடீரென உயிரிழந்த 19 வயது இளைஞர்!
தெலுங்கானாவில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் ஆடும்போதே உயிரிழந்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிஉள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரும் வந்திருந்தார்.
திருமண நிகழ்வு என்பதால், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில், நடனமாடிக் கொண்டு அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில், பிரபல பாடலுக்கு தன்னையே மறந்து நடனமாடிக்கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென அந்த இளைஞர் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவனது இந்த நிலையைக் கண்டதும், உடனடியாக பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்தது.
கடந்த நான்கு நாட்களில் தெலுங்கானாவில் இது இரண்டாவது சம்பவமாகும். முன்னதாக, பிப்ரவரி 22 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பால் இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.