52 அடி சுனாமி: பூமியை தாக்கிய ராட்சத விண்கல்.

52 அடி சுனாமி: பூமியை தாக்கிய ராட்சத விண்கல்.

துவரை பூமியை 190 விண்கற்கள் தாக்கியுள்ளது. அதில் பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் ஒன்றினால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

ஆஸ்ட்ராய்டுகள் எனப்படும் ஆயிரக்கணக்கான விண்கற்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இவை அடிக்கடி பூமிக்கு மிக அருகே கடந்து செல்வது வழக்கம். அப்படி கடந்து செல்லும் விண்கற்கள் சில நேரங்களில் பூமியிலும் மோதுவதுண்டு. கடந்த சில கோடி ஆண்டுகளில், சுமார் 190 எரி நட்சத்திரங்களும் விண்கற்களும் பூமியைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் 6.6 கோடி வருடங்களுக்கு முன்பு சுமார் 15 கிலோமீட்டர் அகலம் கொண்ட, பிரம்மாண்ட விண்கல் ஒன்று வினாடிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் மீது மோதியிருக்கிறது. 

வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவின் கடலோரப் பகுதியிலுள்ள ஓர் தீபகற்பத்தில் இந்த விண்கல் மோதியதால், 180 கிலோமீட்டர் அகலத்திற்கு பெரும் பள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவானது. 25 லட்சம் டன் எடை கொண்ட கிரானைட் பாறைகள், கற்கள் மற்றும் துகள்கள் வளிமண்டலத்தில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு வீசப்பட்டது. இவை பூமியில் திரும்பி விழும்போது காற்றுடன் உராய்வு ஏற்பட்டு, அதீத வெப்பமடைந்து பூமியின் பல இடங்களிலும் விழுந்து சிதறியது. 

இதனால் பூமியில் அன்று இருந்த காடுகளில் சுமார் 70% தீப்பற்றி எரிந்து நாசமானது. 52 அடி உயர சுனாமி அலைகள் உருவாகி, அமெரிக்க ஆப்பிரிக்க கண்டங்களைத் தாக்கி ஏராளமான உயிரினங்களை அழித்தன. காற்றில் சல்பர் மற்றும் ஜிப்சம் துகள்கள் பெரிய அளவில் கலந்து, உலகெங்கும் வெயிலின் அளவை குறைத்து, அதீத குளிரை சுமார் 10 ஆண்டுகளுக்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக டைனோசர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் அழிந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனால், பூமியில் வசித்த மொத்த உயிரினங்களில் சுமார் 75 சதவீத உயிரினங்கள் அழிந்ததாக கணக்கிடப் பட்டுள்ளது. தப்பிப்பிழைத்தவை பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு புதிய உயிரினங்களாக உருமாறின. மேலும், இதைவிட குறைந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்திய பல்வேறு விண்கற்கள் மோதல் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் உலகெங்கிலும் கண்டுபிடித்துள்ளனர். மணிக்கு 72 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் 350 அடி அகலம் கொண்ட, 2023GM என்ற சிறுகோல், பூமிக்கு 32 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சமீபத்தில் கடந்து சென்றது. இது பூமியில் மோதியிருந்தால் ஒரு  நகரத்தையே முற்றிலும் அழித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இந்த சம்பவங்கள் பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுவதால், எதிர்காலத்திலும் இத்தகைய மோதல் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com