சீனாவில் 60% பேருக்கு கோவிட்: லட்சக்கணக்கில் பலியாகலாம் நிபுணர்கள் எச்சரிக்கை!

கோவிட்
கோவிட்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கோவிட்-19 தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு தொற்று பரவலாம் என அந்த நாட்டின் நோய்த்தொற்று ஆய்வாளர் எரிக் ஃபெகில்-டிங் எச்சரித்துள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் 60 சதவீதம் பேரும், உலகின் மற்ற பகுதியில் 10 சதவீதம் பேரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படலாம். பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

பெய்ஜிங்கில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் இடத்துக்கு உடல்கள் தினமும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

கோவிட் தொற்று காரணமாக எவரும் பலியாகவில்லை என்று சீனா முன்பு கூறிவந்தது. ஆனால், நவம்பர் 19 மற்றும் 23- ஆம் தேதிக்கு இடையில் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவித்தது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து எந்த தகவலும் இல்லை.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள டோங்ஜியாவோ தகன மையத்தில் உடலை தகனம் செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் உடலை தகனம் செய்ய நேரம் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

கோவிட் தொற்று மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உடலை தகனம் செய்யும் எங்களது பணிச்சுமை கூடியுள்ளது. கிட்டத்தட்ட 24 மணிநேரமும் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று தகனம் செய்யும் இடத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். நாங்கள் நள்ளிரவிலும், விடிவதற்கு முன்பும் தகனம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் 200 பேரின் உடல்கள் தகனத்துக்கு வருகின்றன. இதனால் எங்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதுடன், பலருக்கும் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றார். இன்னும் சில நாட்களில் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்கிறார் பெகில்-டிங்.

முக்கியமான நகரங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அது தொடர்பான தகவல்கள் குறைத்தே வெளியிடப்படுகின்றன. மருத்துவமனைகள், தகனம் செய்யும் இடங்களில் விசாரித்தால் உயிரிழப்பு பற்றிய உண்மைத் தகவல்கள் கிடைக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களாகவே சீனா, கோவிட் தொற்று விவகாரத்தில் உண்மைகளை மறைத்து வந்துள்ளது. பொது முடக்கத்தை விலக்கிக் கொண்டது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, நோய்த் தொற்று பாதித்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்துள்ளது.

நோய் இருப்பதை மக்கள் வெளிப்படுத்தாதது,  தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதது, மருத்துவச் செலவுகளை செய்ய முன்வராதது போன்றவை  பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளதற்கு காரணங்கள் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com