அமெரிக்காவில் பட்டம் பெறுவதற்கு 10 நாட்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர மாணவர்!
அமெரிக்காவில் முதுகலைப் பட்டப் படிப்பு பயின்று வந்த ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், அங்கு அவர் பணிபுரியும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துரதிருஷ்டவசமாகச் சிக்கி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக அமெரிக்காவின் ஓஹியோ மாநில போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் சாயேஷ் வீரா என அடையாளம் காணப்பட்டதாகவும், இந்த சம்பவம் மாநிலத்தின் கொலம்பஸ் பிரிவில் வியாழக்கிழமை நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊடக அறிக்கையின்படி, வீரா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.
"ஏப்ரல் 20, 2023 அன்று, 12:50 AM மணிக்கு, கொலம்பஸ் போலீஸ் அதிகாரிகள் 1000 பிளாக் டபிள்யூ.பிராட் செயின்ட் மீது அறிவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஆந்திர மாணவர் சாயேஷ் வீரா, துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறை ஒரு அறிவிப்பில் கூறியது.
கொலம்பஸ் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிர்காக்கும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர் அதிகாலை 1.27 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
வீராவின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆன்லைன் நிதி திரட்டும் திட்டத்தை மேற்பார்வையிடும் ரோஹித் யலமஞ்சிலியின் கூற்றுப்படி, இறந்த இளைஞன் தனது முதுகலை படிப்பை முடிக்க இன்னும் மேற்கொண்டு 10 நாட்களே இருந்தன என்பதும், பட்டப்படிப்பை முடித்து அவர் H1B விசாவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட இருந்ததும் தெரிய வந்தது.
இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் தான் எழுத்தராகப் பணிபுரிந்த எரிபொருள் நிரப்பு நிலைய வேலையை விட்டுவிட இருந்தார் என்றும் கூட யலமஞ்சிலி மேலும் தெரிவித்தார்.
வீரா தனது குடும்பத்தின் மூத்த மகனாக, பல லட்சியங்களுடன் அமெரிக்காவுக்கு வந்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டதால் தனது
குடும்பத்தை உயர்த்த விரும்பி அவர் இங்கு வெகுவாகப் பாடுபட்டுப் படித்துக் கொண்டிருந்தார்.
அவர் எல்லா சூழ்நிலைகளிலும் மக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருந்தார். அத்துடன் இங்குள்ள கிரிக்கெட் களத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார்.
கொலம்பஸ் பகுதியில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நபருக்கும் அவரைத் தெரியும், அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த நண்பர்.
"சாயிஷ், அவரது தாயார், குடும்பத்தினர் மற்றும் அவரது ஆன்மாவால் தீண்டப்பட்ட நண்பர்கள் அத்தனை பேருக்கும் கடவுள் அமைதியைக் கொண்டுவருவார் என்று நான் நம்புகிறேன்" என்று யலமஞ்சிலி மேலும் கூறினார்.
ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கான கனவுகளுடன் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்று உயிரற்ற சடலமாக மீளவிருக்கும் 24 இளைஞர் சாயேஷ் வீராவின் மரணம் ஒட்டுமொத்த ஆந்திராவையும் கலங்க வைத்திருக்கிறது.