பாகிஸ்தானில் தொடரும் குண்டு வெடிப்புகள்: பெஷாவர் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 83 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடரும் குண்டு வெடிப்புகள்: பெஷாவர் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 83 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 83 பேர் பலியானார்கள். தவிர 150 பேர் காயமடைந்தனர்.

பெஷாவரில் பலத்த பாதுகாப்புள்ள போலீஸ் லைன் பகுதியில் உள்ள மசூதியில் வழக்கம்போல் மதிய வேளையில் தொழுகை நடந்து கொண்டிருந்தது.

அப்போது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர், உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 83 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்று மீட்புப் பணிக்குழுவைச் சேர்ந்த பிலால் அகமது ஃபைஸல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் 50-க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாகவும், பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் சிலர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழுகை தொடங்கிய சில நிமிடங்களில் குண்டுவெடித்ததாக ஷாஹித் அலி என்பவர் தெரிவித்தார். குண்டுவெடித்ததும் அந்தஇடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. நல்லவேளையாக நான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினேன் என்றார் அவர்.

பெஷாவரில் உள்ள போலீஸ் தலைமையகம் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலரும் இங்குள்ள குடியிருப்புகளில்தான் தங்கியிருக்கின்றனர். அருகில்தான் பிராந்திய தலைமையகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானிலுள்ள அனைத்து மாகாணங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாவித் அல் நஹ்யான் இஸ்லாமாபாத் வருகைதர இருந்த நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. எனினும் கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக அவரது வருகை ரத்தானது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் என்னும் தடை செய்ய்ப்பட்ட பயங்கரவாத அமைப்புதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் தங்கள் அமைப்பின் தலைவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்த செய்தி அறிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீரும் பெஷாவர் நகருக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.

இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் ஷாபா ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு படையினரிடம் அச்சத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கிறார்கள். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. இந்த தேசம் பயங்கரவாதிகளுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு இஸ்லாமாபாதில் மாரியட் ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு, கடந்த 2009 ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு மிக நெருக்கமானதாக அறியப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாத அமைப்பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெஷாவரில் ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 131 மாணவர்கள் உள்பட 150 பேர் உயிரிழந்தது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com