டேய் இதுக்கெல்லாமா தூக்குல போடுவீங்க?

டேய் இதுக்கெல்லாமா தூக்குல போடுவீங்க?

லகிலுள்ள பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளுக்கு மத்தியில், இன்றளவும் சர்வாதிகார நாடாக இருப்பது தான் வடகொரியா. அந்நாட்டு மக்கள் சமீபத்தில் அங்கே நடந்த ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டு பயத்தில் நடுங்கி வருகிறார்கள். 

சாதாரண விஷயங்களுக்கு கூடவா உச்சபட்ச தண்டனையாகக் கருதப்படும் மரண தண்டனை வழங்க வேண்டும்? என புலம்பும் வகையில், அங்கே ஒர் பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. அதிபர் 'கிம் ஜாங் உன்' தலைமையில் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசு என்ன கட்டளையிட்டாலும், அதை அந்நாட்டு மக்கள் மறுக்காமல், எதிர்க்கேள்வி எதுவும் கேட்காமல், அப்படியே கீழ்ப்படிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு எந்த பாரபட்சமும் பார்க்காமல் மரண தண்டனை பரிசாக வழங்கப்படும். 

அந்த நாட்டில் இணையதள வசதி கூட கிடையாது. வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இருந்தாலும் ஒரே ஒரு சேனல் மட்டுமே அதில் ஒளிபரப்பாகும். அந்த சேனலிலும் அதிபரின் உரையும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் சார்ந்த செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இதனால் வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது மர்மமாகவே வெளியுலகத்திற்கு தெரியாமலேயே இருக்கும். 

வடகொரியாவில் மக்கள் சிரிக்கக்கூடாது என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டால் நமக்கு சிரிப்பு தான் வரும். அங்கு நடக்கும் எல்லா விஷயங்களும் வித்தியாச மாகவும், கொடூரமாகவுமே இருக்கும். ஆண்டுதோறும் அதிபர் (கிம் ஜாங் உன்) தந்தையின் நினைவு தினம் 10 நாட்களுக்கு அனுசரிக்கப்படும். அந்த நாட்களில் வடகொரியா மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க வேண்டும் என்பது அதிபரின் உத்தரவு.

தெரியாமல் கூட சிரித்து விடக்கூடாது. உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ வெளியே செல்லக்கூடாது. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், அந்த பத்து நாளில் யாராவது இறந்து விட்டால் கூட குடும்பத்தினர் வாய்விட்டு அழக்கூடாது. இந்த விதிகளை ஒருவர் மீறினால், உடனடியாக சொர்க்கவாசல் செல்வதற்கான பயணச் சீட்டை கையில் கொடுத்து மேல் லோகம் அனுப்பி விடுவார்கள். 

"சரி, இவனுங்க பொழுது போக்குறதுக்கு என்னதான் பண்றானுங்க" என நினைத்துப் பார்த்தால், "அட போங்க தம்பி. நீங்க வேற காமெடி பண்ணிட்டு" என அந்நாட்டு மக்கள் "அப்படி எதுவுமே இல்லீங்கோ" என மனதிலேயே குமுறுகிறார்கள். 

மேலும் வடகொரியாவில், தென்கொரியாவில் இருந்து திருட்டு சிடிகள் கடத்துவார்களாம். இவ்வாறு கடத்தி வரப்படும் சிடிக்களை கமுக்கமாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே போட்டு பார்த்துவிட்டு, ஒன்றும் தெரியாத குழந்தை போல வாழ்ந்து வருகிறார்கள் சிலர். ஆனால் இந்த வழக்கில் சிக்கிக் கொண்டால் உடனடியாக தூக்குதான். சில மாதங்களுக்கு முன்பு, வெறும் 12 வயதான இரண்டு சிறுவர்களை திருட்டு சிடி வழக்கில், பொதுவெளியில் தூக்கில் போட்டுள்ளது வடகொரிய அரசு. 

வடகொரியாவில் இணையதள வசதி இல்லாத போதிலும் ராணுவத்தில் சில உயர் அதிகாரிகளுக்கு இணையதள வசதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என ஒரு குழு எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.  இந்நிலையில் வடகொரியாவின் உயரதிகாரி ஒருவர் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி கூகுளில் தேடி இருக்கிறார். 

இந்த விஷயத்தை கண்காணிப்புக் குழு அதிபரிடம் போட்டுக் கொடுக்கவே, அவருக்கு கோபம் கண்ணில் கனலாய் எரிந்து, என்ன பத்தி எப்படிடா தேடலாம்? என அந்த அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும்படி உத்தரவிட்டிருக்கிறார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். 

இந்தியாவில் நாம் சந்திக்கும், அனுபவிக்கும் பிரச்னைகள் எல்லாம் ஜூஜுபி! வடகொரியா பற்றி கேள்விப்படும் போது, நடுக்கம் ஏற்படுவது என்னவோ உண்மை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com