தற்போது ஜாக்மா என்ன செய்கிறார் தெரியுமா?

தற்போது ஜாக்மா என்ன செய்கிறார் தெரியுமா?

டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக்மாவுக்கும் சீன அரசுக்கும் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் அவரைப் பற்றிய எந்த தகவல்களும் சில காலம் வெளியே தெரியவில்லை. தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நமது பக்கத்து நாடான சீனாவில் கம்யூனிச ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. மக்களாட்சி ஏற்படும் வகையில் அந்நாட்டில் எந்த ஒரு மாற்றமும் இதுவரை செய்யப் படவில்லை. அந்நாட்டின் அதிபரைத் தேர்வு செய்வதற்கு எவ்விதமான வாக்களிக்கும் முறைகளும் பின்பற்றப் படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாட்டின் மூலமாகவே அதிபர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். 

தற்போது சீன நாட்டின் அதிபராக ஜி ஜிம்பிங் இருந்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவருடைய ஆட்சிதான் அங்கு பலமாக நடந்து வருகிறது. அந்நாட்டில் எந்த ஒரு அதிபரும் இரண்டு முறைக்கு மேல் இருந்ததில்லை என்ற நிலையை மாற்றி, அதிபர்கள் பதவியில் தொடர்ந்து இருக்கும்படியாக சட்டத் திருத்தத்தை மேற்கொண்டார். மேலும் தனது ஆட்சிக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை உடனடியாக நசுக்கும் அளவுக்கு தயவு தாட்சண்யம் பாராமல் இருந்து வருகிறார். 

அப்படி இவருக்கு எதிராக பேசியவர்களில் ஜாக்மாவும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ஜாக்மா, அங்கே அலிபாபா என்ற நிறுவனத்தைத் தொடங்கி, உலகின் முன்னிலை பணக்காரர்களில் ஒருவராக மாறி இருந்தார். இதற்கு ஜி ஜிம்பிங் அரசும் ஆதரவாக இருந்தது. 

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக பல கருத்துக்களை அவர் முன் வைத்தார். சீன வங்கிகள் அடகு கடை போல் செயல்படுவதாகவும், சீனாவின் ஒழுங்குமுறை அமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு சீன அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர் எங்கே இருக்கிறார் என்பதே சில காலம் யாருக்கும் தெரியவில்லை. அவரது நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

இதுவரை ஜப்பானில் வசித்து வந்த ஜாக்மா, கடந்த மார்ச் மாதத்தில் தான் சீனாவுக்கு திரும்பி வந்துள்ளார். இதனிடையே தற்போது ஜப்பானிலுள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே அவர் மீண்டும் ஜப்பானுக்கு சென்றுவிடுவார் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com