உயிரியல் ஆபத்தை ஏற்படுத்துமா சூடான் ராணுவ மோதல்?: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

உயிரியல் ஆபத்தை ஏற்படுத்துமா சூடான் ராணுவ மோதல்?: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

சூடான் நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையிலான மோதல் உலக அளவில் பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த இரு அதிகார மோதல்களுக்கு இடையில் இதுவரையில் 400க்கும் மேற்பட்டோர் உயிர் பலியாகி இருக்கின்றனர். மேலும், 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தாக்குதல் நடத்துபவர்களில் ஒரு தரப்பினர் அந்நாட்டு உயிரியல் ஆய்வகத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களின் தவறான அணுகுமுறையால் ஆய்வகத்திலிருந்து நுண்ணுயிரிகள் வெளியேறி மிகப்பெரும் அளவிலான உயிரியல் ஆபத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்து இருக்கிறது.

இது குறித்துப் பேசிய சூடானிலுள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத் அபிட், ’’மத்திய பொது சுகாதார ஆய்வகம் முற்றிலும் தற்போது சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் ஒரு தரப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அவர்கள், இந்த உயிரியல் ஆய்வகத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களையும் வெளியேற்றி இருக்கிறார்கள்.

இந்த உயிரியல் ஆய்வகத்தில் தட்டம்மை, போலியோ, காலரா உள்ளிட்ட நோய்களின் உயிரியல் மாதிரிகள் இருக்கின்றன. எனவே, இந்த ராணுவ ஆக்கிரமிப்பால் மிகப்பெரிய உயிரியல் ஆபத்து ஏற்படலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்கிறது. அதோடு, ரத்தப் பைகளின் இருப்பு குறைந்துவரும் சூழலில் மின்சாரம் இல்லாததால் மீதம் இருப்பவையும் கெட்டுப்போகும் அபாயம் நிலவுகிறது. மேலும், ஜெனரேட்டர்கள் செயல்பாட்டில் இல்லாததால் உயிரி-அபாய (bio-risk) ஆபத்தும் மிக அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது" என்றும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

சூடான் நாட்டின் இந்த ராணுவ, துணை ராணுவ மோதல் குறித்துப் பேசிய சூடான் நாட்டுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், ’’அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட, ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே காணப்படவில்லை" என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com