சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு நன்கொடை: சர்ச்சையில் ஈரான் அறக்கட்டளை!

சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு நன்கொடை: சர்ச்சையில் ஈரான் அறக்கட்டளை!

பாரதத் திருநாட்டின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. கால மாற்ற நிமித்தமாக இவரது குடும்பம் பிரிட்டனுக்குக் குடி பெயர்ந்தது. பிரபலமான எழுத்தாளராக விளங்கிய சல்மான் ருஷ்டி, ‘மிட்நைட்ஸ் சில்ட்ரான்’ என்று தனது நூலுக்காக பெருமைமிகு புக்கர் பரிசைப் பெற்றார். அதோடு, 1988ம் ஆண்டு வெளிவந்த இவரது படைப்பான, ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ என்ற நூல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது. ஆனால், முஸ்லிம் மக்கள் அதிகattackமாக வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த நூல் இன்று வரை தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், சல்மான் ருஷ்டியின் தலைக்கும் விலையை நிர்ணயித்தது ஈரான் நாடு. இதன் காரணமாக நீண்ட நாட்களாகவே தலைமறைவாக வாழ்ந்து வந்தார் சல்மான் ருஷ்டி.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி மர்ம நபர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் அவரது கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு, ஒரு கண்ணின் பார்வையையும் அவர் இழக்க நேரிட்டது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 24 வயதான ஹாதி மட்டர் என்ற அமெரிக்க இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் இருந்து பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். மிகப் பெரிய தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த சல்மான் ருஷ்டி ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் வெளியுலக நபர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்த நிலையில், ஈரான் இமாம் கொமெய்னி ஃபத்வா அறக்கட்டளையின் செயலாளர் முகமது இஸ்மாயில், 'சல்மான் ருஷ்டியின் ஒரு கை மற்றும் கண்களை செயலிழக்கச் செய்து முஸ்லிம்களை மகிழ்வித்த அந்த அமெரிக்க இளைஞனுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ருஷ்டி வாழும்போதே இறந்துவிட்டார். இந்த துணிச்சலான செயலை கௌரவிக்கும் வகையில், சுமார் 1,000 சதுர மீட்டர் விவசாய நிலம் அந்த நபருக்கோ அல்லது அவரது சட்டபூர்வமான பிரதிநிதிகளுக்கோ நன்கொடையாக வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் இமாம் கொமெய்னி ஃபத்வா அறக்கட்டளையின் செயலாளர் முகமது இஸ்மாயிலின் இந்தப் பேச்சு, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்களிடையேயும் பெரும் சர்ச்சைப் பொருளாகப் பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com