அருணாச்சல பிரதேசம் முதல் அம்பாந்தோட்டை வரை - அதிகரிக்கும் சீனாவின் நெருக்கடி; என்னதான் திட்டம்?

அருணாச்சல பிரதேசம் முதல் அம்பாந்தோட்டை வரை - அதிகரிக்கும் சீனாவின் நெருக்கடி; என்னதான் திட்டம்?

அருணாசல பிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைக்கச் சென்றிருந்த அமித்ஷாவுக்கு சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டம் தெரிவித்துள்ளது.

சாங்னன் (அருணாச்சல பிரதேசத்தின் சீன பெயர்), சீனாவின் ஆளுகைக்கு உள்பட்டது. இப்பகுதியில் இந்திய அதிகாரிகள் வந்து செல்வது, சீனாவின் இறையாண்மையை மீறுவது. இதை சீனா கடுமையாக எதிர்ப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறது. கடந்த வாரம் எல்லையோர கிராமங்களின் பெயர்களையும் மாற்றி அறிவித்தது.

இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளில் மட்டுமல்ல இலங்கையில் இருந்தபடியே தன்னுடைய ஆட்டத்தை சீனா ஆரம்பித்து வைத்துள்ளது. இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ரேடார் தளத்தை அமைக்க இருப்பதாகவும், இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் முழுவதையும் கண்காணிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலை ஆக்ரமிப்பதும் அதன் மூலமாக ஐரோப்பிய நாடுகளை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு புதிய சில்க் பாதையை அமைப்பதும் சீனாவின் திட்டமாக இருந்து வருகிறது. இலங்கையின் பொருளாதார பின்னடைவை சீனா சரியாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை இலங்கையில் சீனா முதலீடு செய்து வருகிறது. இந்தியப் பெருங்கடலை நோக்கியபடி அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுக வளர்ச்சியில் சீனா, பெரும் கவனம் செலுத்தி வந்தது. சீனாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகை அமலில் இருக்கும். ஒரு தொழில்மண்டலத்தை உருவாக்குவதற்காக துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் தரப்பட்டுள்ளது.

இங்குதான் ஒரு ரேடார் தளத்தை அமைத்து, இந்தியாவை கண்காணிக்க சீனா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டையில் சீனா கப்பலை நிறுத்துவதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும் மற்ற பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினருக்கு சீனா போர் பயிற்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.

இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்து வருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பெருங்கடலை கண்காணிக்க முடியும். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க முடியும் என்கிறார்கள்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்தியக் கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் மூலமாக கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ரேடார் கண்காணிக்கக்கூடும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தொடங்கி இது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சீனா பி.எல்.ஏ. உளவுக் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்பியிருக்கிறது. இது குறித்து கடலோர காவல் படைகளும், இந்தியாவின் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மீது சீனா தாக்குதல் தொடுத்தால் அது அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் மட்டுமல்ல தென்னிந்தியா மூலமாகவும் நடப்பதற்கான ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com