இரக்கமுள்ள மனசுக்காரன் இந்தியன் இல்லை - சமீபத்திய ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!
தமிழகம் கடையேழு வள்ளல்கள் பிறந்த இடம். இன்று பட்ஜெட் மாதவன் உலா வரும் இடமாகிவிட்டது. கொடுத்து சிவந்த கரங்களைக் கொண்டவர்கள் என்று சங்ககாலம் தொட்டு சமகாலம் வரை ஆயிரக்கணக்கானவர்களை பட்டியிலிடுவார்கள். இனி விரல் விட்டு எண்ணுவதே கஷ்டம்தான்.
அடுத்தவருக்கு அள்ளிக் கொடுக்கும் கொடையாளிகள், இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறார்கள். தஸ்ரா என்னும் பன்னாட்டு நிறுவனம் மேற்கொண்ட பிலாந்தரபி ஆய்வில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் உதவி செய்யும் நன்கொடையாளிகள் கணிசமாக குறைந்துவிட்டது என்கிறது ஆய்வு.
ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து உள்ள கோடீஸ்வரர்களை ஆய்வு செய்துள்ள தஸ்ரா நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் அவர்களது சொத்து மதிப்பு 9 சதவீதம் உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட கோடீஸ்வரர்கள் பிறருக்கு தரும் நன்கொடையின் அளவு 5 சதவீதத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது. கஜனா பெட்டியை இறுக்கி மூடிவைத்துவிட்டார்கள்.
இந்தியர்கள், சீனர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என அனைத்து கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பையும், நன்கொடை மதிப்பையும் வைத்து ஆய்வு செய்துள்ள நிறுவனம், கொடையாளிகள் பட்டியலில் இந்தியர்களை கடைசி இடத்தில் தள்ளியிருக்கிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது எட்ட முடியாத பின்னடைவை இந்தியர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
உலகிலேயே நிஜமான வள்ளல்கள் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். அதிகமாக நன்கொடை கொடுப்பவர்கள் அமெரிக்கர்கள்தான். அடுத்த இடத்தில் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் சீனர்கள். இந்தியர்களைப் பொறுத்தவரை வெகு குறைவு.
10 சீனர்களில் 3 பேர், நன்கொடை தரக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். பத்தில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே நன்கொடை தருவதற்கு தயாராக இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
எப்படிப்பார்த்தாலும் இந்தியர்களை விட குறைந்தபட்சம் எட்டு மடங்கு அதிகமான கொடையாளிகளாக சீனர்களும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். அரசர்களை புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற புலவர்களை சங்க காலத்தில் பார்க்க முடிந்தது. சமகாலத்தில் சிக்கனம், கஞ்சத்தனத்தில் மிஞ்சுவர்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.
இரக்கமுள்ள மனசுக்காரன்டா... ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா என்பதெல்லாம் இனி ஆட்டோ ஸ்டாண்டில் மட்டுமே கேட்க முடியும்!