சர்வதேச மனித ஒற்றுமை தினம்...

20-12-2022
சர்வதேச மனித ஒற்றுமை தினம்...

சாதி மதம் இனம் மொழி அந்தஸ்து பாகுபாடின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் வறுமை வேலைவாய்ப்பின்மை தனி மனித உரிமைப் பிரச்னைகள் போன்றவைகளுக்கு தீர்வு காணலாம். இதைக் குறிப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ நா பொது சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் டிசம்பர் 20 ந்தேதி சர்வதேச மனித ஒற்றுமை தினமாக உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது.வேற்றுமையில் ஒற்றுமையை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தினத்தை ஐ நா சபை ஏற்படுத்தியது.

      ஆனால் நடப்பது என்ன? ஒரே நாட்டில் ஒரே ஊரில் அவ்வளவு ஏன் ஒரே வீட்டில் வசிப்பவர்களிடம் கூட தற்போதுள்ள வேகமான வாழ்க்கையின் காரணமாக ஒற்றுமை குறைந்து வருவதை அனைவரும் அறிவோம். தான் தனக்கு எனும் சுயநலத்துடன் பெரும்பாலோர் இருப்பதை பார்க்கிறோம். இப்படி இல்லாமல்  தான் மட்டுமின்றி  தன்னைச்சுற்றி உள்ளவர்களும் வளமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். அந்த எண்ணத்துடன் தன்னுடன் இணைந்து வருபவர்களை அரவணைத்துச் சென்று அவர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் ஒரு வெற்றியின் நிறைவு உள்ளது.

     உலக அளவில் வறுமையான நாடாக நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பிட்ட சதவீதம் மக்கள் அன்றாட உணவுக்கே வழியின்றித் பசியுடன் போராடும் நிலை அங்கு. இந்நிலை இந்தியாவிலும் சிறு சதவிகிதம் உண்டு. உலகில் சுமார் 170 கோடி மக்கள் வறுமையில் வாடுவதாகத் தகவல் .இதன்படி பார்த்தால் ஒன்பது பேருக்கு ஒருவர் பசிக்கு ஆளாகின்றனர். இதில் குறிப்படத்தக்க விஷயம் என்னவெனில் வயது மூப்பு விபத்து இன்ன பிற காரணங்களினால் அன்றி வறுமையினால் மட்டுமே பெரும்பாலான மரணங்கள் நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வறுமைக்கு அடித்தளமாக இருக்கிறது ஒற்றுமையின்மை என்பதுதான் இங்கே நாம் அறிய வேண்டியது. அது மட்டுமின்றி மக்களின் வறுமையான நிலை அவர்களை குற்றங்கள் செய்யவும் ஒழுக்கம் தவறவும் வைக்கிறது.  இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி மக்களின் வாழ்வாதாரம் அச்சத்துக்கு உரியதாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க வேண்டியது சக மக்களாகிய நம் கடமை. ஒரு மனிதனுக்குத் தேவை உண்ண மூன்று வேளை உணவு உடுக்க நான்கு உடைகள் இருக்க சிறு இடம். ஆனால் கல்வியறிவு பெருகி அனைவரும் நன்றாக சம்பாதிக்கத் துவங்கி விட்ட பின் இருவருக்கு பங்களா போன்ற வீடுகள், எண்ணற்ற ஆடம்பரங்கள், வீணடிக்கும் அறுசுவை உணவுகள் என வாழ்க்கை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் எனில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு வேளை உணவிற்கே வழியின்றிக் கையேந்தும் நிலை. நாம் செய்ய வேண்டியது நமது தேவைக்கு மிஞ்சியவற்றை வறியவர்களுக்கு ஒற்றுமையுடன் பகிர்ந்து அவர்களது பசியைத் தீர்க்க உதவலாம்.

குறிப்பாக இயன்றோர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர முன்வரவேண்டும். வீட்டிலும் நாட்டிலும் நாம் என்ற மனதுடன் செயல்களை செய்து வந்தால் வறுமையும் ஒழியும். வளங்களும் பெருகும். வெற்றிக்கும் அர்த்தம் வரும் .மனித ஒற்றுமை தினமான இன்று நாம் ஒற்றுமையுடன் வாழப் பழகுவோம். அதற்கான உறுதிமொழி எடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com