சொகுசுக் கப்பலில் வீடு வாடகைக்கு ரெடி!

சொகுசு கப்பல்
சொகுசு கப்பல்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டோரிலைன்ஸ் என்கிற கப்பல் கட்டுமான நிறுவனம் பிரமாண்ட சொகுசுக் கப்பல் ஒன்றைத் தயாரித்து அதில் 547 வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அலிஸ்டர் புன்டன் மற்றும் ஷானோன் லீ ஆகியோர் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு ஸ்டோரிலைன்ஸ் என்ற கப்பல் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி, எம்.வி.நேரேட்டிவ் என்ற சொகுசு கப்பலை தயாரித்து வருகிறது.

குரோஷியா நாட்டில் வடிவமைக்கப்படும் சொகுசு கப்பல் 741 அடி நீளம், 98 அடி அகலம், 18 மாடிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் 547 வீடுகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் இந்த கப்பலில் பள்ளி, கல்லூரி, ஆன்லைன் கல்வி வசதி, மருத்துவமனை, வங்கி, சந்தை, திரையரங்கம், நூலகம், ஓட்டல், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

வரும் 2025-ம் ஆண்டில் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்க இருக்கிறது. உலகின் எந்த பகுதியில் சீரான வானிலை நிலவுகிறதோ அந்த பகுதியை நோக்கி கப்பல் பயணம் செய்யும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சொகுசு கப்பலில் உள்ள வீடுகளை 12 ஆண்டு,முதல் 60 ஆண்டுகள் வரை  குத்தகைக்கு விடப்படுவதாக அறிவித்ததையடுத்து, பலரும் முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த சொகுசு கப்பல் குறித்து அதன் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இந்த சொகுசுக் கப்பல் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 6 கண்டங்களுக்கும் எங்களது கப்பல் பயணம் செய்தபடி இருக்கும். ஒரு துறைமுகத்தில் 5 நாட்கள் வரை முகாமிடுவோம். சூரிய வெளிச்சம் எந்த பகுதியில் இருக்கிறதோ, அந்த திசை நோக்கி கப்பல் செல்லும். ஆண்டு முழுவதும் கப்பல் இயங்கிக் கொண்டே இருக்கும். கப்பலில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் கப்பலில் இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். கப்பலில் உள்ள வீடுகள் ரூ.8.28 கோடி முதல் ரூ.66.23 கோடி வரை குத்தகைக்கு விடப்படும். எங்களுடைய மிதக்கும் நகரத்தில் வீடுகளை முன்பதிவு செய்து மனைவி, பிள்ளைகளுடன் குடியேறலாம்.

 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com