நடைபயிற்சி சென்று தவறவிட்ட நாய்க்குட்டிடியின் 161 கி.மீ. சொகுசு பயணம்!

நடைபயிற்சி சென்று தவறவிட்ட நாய்க்குட்டிடியின் 161 கி.மீ. சொகுசு பயணம்!

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வரும் 3 வயது நாய், நடைபயிற்சியின் போது உரிமையாளரைப் பிரிந்து 161 கி.மீ. தொலைவுக்கு, விமானநிலையம் வரை டாக்ஸியில் ஜாலியாக சொகுசு பயணம் சென்றது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜார்ஜியா க்ரூ என்ற பெண்மணி ரால்ஃப் என்னும் 3 வயது நாய்க்குட்டியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அந்த நாய்க்குட்டியையும் உடன் அழைத்துச் செல்வார்.

கடந்த திங்கள்கிழமையன்றும் காலையில் வழக்கம்போல் நாய்க்குட்டியை நடைபயிற்சியின்போது அழைத்துச் சென்றார். வழியில் நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மற்றொரு நண்பரைச் சந்தித்தார். இருவரும் சுவாரஸ்மாக பேசிக் கொண்டிருந்தபோது 3 வயது ரால்ஃப் நாய்க்குட்டி காணாமல் போய்விட்டது.

நடைபாதையில் சென்ற நாய், திடீரென வீட்டை நோக்கி நடந்தது. சிறிது தூரம் சென்றதும் குளிர்தாங்காமல் அருகில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி அமர்ந்துவிட்டது. அந்த டாக்ஸி டிரைவர் விடுமுறையில் சுற்றுலா செல்லும் குடும்பத்தினரை மான்செஸ்டர் விமானநிலையத்தில் இறக்கிவிடுவதற்காக வந்திருந்தார். காரின் சீட்டில் நாய் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். அதன் உரிமையாளர்கள் யாராவது அருகில் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தார். ஆனால், ஒருவரும் தென்படவில்லை. வேறு வழியில்லாமல் அந்த செல்ல நாய்க்குட்டியையும் விமானநிலையத்துக்கு காரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

விமானநிலையத்தில் சுற்றுலா செல்லும் குடும்பத்தினரை இறக்கிவிட்ட பின், நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் யார் என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனிடையே நாய்க்குட்டியின் உரிமையாளர் முகநூலில், “ரால்ஃப் என்னும் பெயருடைய தன்னுடை செல்ல நாய்க்குட்டியை காணவில்லை, யாராவது எங்கேயாவது அதை பார்த்தால் தகவல் தெரிவிக்கவும்” என்று குறிப்பிட்டு நாயின் படத்தையும் வெளியிட்டிருந்தார்.

சமூக வலைத்தளத்தில் வெளிவந்த அந்த தகவலையும், நாயின் படத்தையும் பார்வையிட்ட டாக்ஸி டிரைவரின் நண்பர் ஒருவர், உடனடியாக ஜார்ஜியா க்ரூவை தொடர்பு கொண்டார். பெக்கி என்ற அந்த பெண், நாய் தனது நண்பரின் டாக்ஸியில் மான்செஸ்டர் விமானநிலையம் வரை 161 கி.மீ. சொகுசு பயணம் சென்றுவிட்டு வந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து ஜார்ஜியா க்ரூ, உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு டாக்ஸி டிரைவரின் வீட்டுக்குச் சென்று அன்றைய தினமே தனது செல்ல நாய்க்குட்டியை மீட்டுவந்தார்.

இப்படி நாய் திடீரென்று காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக நாயின் கழுத்தில் நாய் எங்கு உள்ளது என்று அறியும் லோகேஷன் அட்டை, ஒரு சிறிய பிளாஷ் லைட் மற்றும் நாயின் பெயர், முகவரி கொண்ட அடையாள அட்டையை பொருத்த முடிவு செய்துள்ளார் ஜார்ஜியா க்ரூ.

“ரால்ஃப் நாய்க்குட்டி ஒருபோதும் இப்படி செய்தது இல்லை. யாருக்கும் பயப்படாமல் எல்லோரிடமும் நன்றாக பழகும். ஏதோ ஒரு நினைவில் காரில் ஏறி அமர்ந்து கொண்டுவிட்டது. அந்த டாக்ஸி டிரைவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் விமானநிலையத்துக்கு சவாரி செல்ல வேண்டியிருந்ததால் நாய்க்குட்டியையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார். நாய்க்குட்டி எப்படியும் வழியை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்துவிடும். ஆனால், சாலையை கடக்கும்போது அதற்கு எந்த ஆபத்தும் நடந்துவிடக்கூடாது என்று கவலையுடன் இருந்தேன். ஆனால், நாய்க்குட்டி பாதுகாப்பாகவே இருந்தது. அந்த நாய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சிதான்” என்கிறார் ஜார்ஜியா க்ரூ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com