உண்ண உணவில்லை; மிரட்ட ஆயுதம் வாங்கும் பாகிஸ்தான்!

உண்ண உணவில்லை; மிரட்ட ஆயுதம் வாங்கும் பாகிஸ்தான்!

‘குடிக்க தண்ணீர் இல்லை; கொப்பளிக்க பன்னீர் கேட்குதா’ என்பார்கள் நமது கிராமப்புறங்களில். அந்தக் கதையாகத்தான் உள்ளது பாகிஸ்தானின் இன்றைய நிலை. ஒரு பக்கம் வறட்சி, மறுபுறம் வெள்ள பாதிப்பால் அந்த நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கோதுமை மாவுக்காகவும், பருப்பு மற்றும் மருந்து பொருட்களை வாங்க பசியோடு நீண்ட நெடிய வரிசையில் கால் கடுக்கக் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களது ஆண்டு பொது பட்ஜெட்டில் பயங்கர ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளதாக ஆப்கான் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு ஊடகம் குற்றம் சுமத்தி இருக்கிறது.

இது மட்டுமின்றி, ‘பாகிஸ்தானில் நடைபெற்ற பல முக்கியமான தவறுகளுக்குக் காரணமாக இருக்கும் அந்நாட்டு ராணுவம், மக்களிடம் பறிக்கப்பட்டதைக் கொண்டு மிகவும் கொழுத்து விட்டிருக்கிறது’ என்றும் அந்த ஊடகம் மேற்கோள் காட்டுகிறது. ‘நாட்டில் தற்போது மிகவும் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய பாகிஸ்தான் ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை நாட்டுக்காக பகிர்ந்துகொள்ள மறுத்து விட்டது’ என்றும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர, பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிலம், வீடுகள் மற்றும் இதர அனைத்துச் சலுகைகளையும் ஒரு குறைவுமின்றி அந்நாடு செய்து கொண்டிருக்கும் நிலையில், அதற்காக அந்நாட்டு பட்ஜெட்டில் மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவ செலவாக 7.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ பராமரிப்பு ஒதுக்கீடு தொகை பாகிஸ்தான் நாட்டு மக்களின் மீது அதிகப்படியான வரிச்சுமையை செலுத்தவே வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், 2020ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்துக்காக 92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வாங்கி இருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு 263 மில்லியன் டாலர்களாக அது அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உண்ண உணவின்றி பசியால் வாடும் பாகிஸ்தான் மக்கள் ராணுவத்துக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி இருப்பதைக் கண்டு மனக் குமுறலில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com