அமெரிக்காவின் கிராமி விருது மேடையில் ஜொலித்த நம் பாரம்பரிய காஞ்சிப் பட்டுப்புடவை!

அமெரிக்காவின் கிராமி விருது மேடையில் ஜொலித்த நம் பாரம்பரிய காஞ்சிப் பட்டுப்புடவை!

அமெரிக்காவில் இயங்கி வரும் பெர்க்லீ இசைக்கல்லூரியின் நிறுவனரான அனெட் ப்லிப் இணையம் வாயிலாக இன்று தமிழர்களிடையே சிறந்த பேசுபொருளாகி இருக்கிறார்.

அப்படி என்ன செய்தார் அனெட் பிலிப்?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்வில் பட்டுக்குப் பேர் போன நமது காஞ்சிபுரத்து கைத்தறிப் பட்டைக் கட்டிச் சென்று விழாவில் ஜொலித்தார் அனெட்.

மெலிதான பச்சை நிறத்தில் அகலமான அடர் சிவப்புக் கரையிட்ட அந்தப் பட்டுப்புடவையின் சரிகை முழுதும் தங்க நிறத்தில் ஜொலித்தது. புடவைக்குப் பொருத்தமாக அடர் சிவப்பு ரவிக்கை அதை அணிந்திருந்தவருக்கு மேலும் அதிக மெருகு சேர்த்தது.

கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாஸ் இசைக் கலைஞரான அனெட் பிலிப் இந்தியாவின் சிறந்த பாடகர்களைக் கொண்டு ஸூரூத் எனும் பெயரில் இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருந்தார். அதில் சங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாஹிர் ஹுஷைன், விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் என நமக்கு நன்கு அறிமுகமான இசைக்கலைஞர்களும் உண்டு. இவர்களைக் கொண்டு உருவான ஆல்பம் 65 ஆவது கிராமி விருது விழாவின் உலகின் சிறந்த ஆல்பம் பிரிவின் கீழ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அனெட்டுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் அவர் அணிந்து சென்றிருந்த காஞ்சிப் பட்டுப்புடவையால் அன்றைய விழாவில் ஷோ டாப்பர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

கிராமி விருது விழாவின் ரெட் கார்பெட்டில் நின்று கொண்டு தம்மிடம் அனெட்டின் ஆடை குறித்து கேள்வி எழுப்பிய வர்ணனையாளருக்கு அனெட் அளித்த பதில் இன்று தமிழர்களை உச்சி குளிர வைத்திருக்கிறது.

தமிழர்கள் மட்டுமல்ல அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் காஞ்சிப் பட்டின் மகிமை அறிந்த அத்தனை பேருக்குமே இது ஒரு மகிழ்வான தருணமே! ஏனெனில் அனெட்;

இந்த உடையின் பெயர். காஞ்சிபுரம் பட்டுப்புடவை. இது எங்கள் நாட்டில் எங்கள் நெசவாளர்கள் கைகளால் நெய்யப்படுகிறது. இந்த உடை எங்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. அதை இன்று இந்த விழாவில் அணிந்து வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.

- என்றார்.

இந்த பதில் அனெட்டுக்கு மட்டுமே பெருமை சேர்க்கவில்லை. கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது பற்று கொண்ட அனைவருக்குமே பெருமை சேர்த்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com