வேலைநேரத்தை வீணடித்தால் காட்டிக் கொடுக்கும் சாஃப்ட்வேர் - கம்பெனிக்கு 3 லட்சம் அபராதம் செலுத்தும் ஊழியர்!
வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்கும் வசதி (வொர்க் பிரம் ஹோம்) கொரோனா காலத்தில் அறிமுகமானது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பல நிறுவனங்களை இதை செயல்படுத்தின.
இப்போது கொரோனா தொற்று குறைந்து இயல்புநிலை திரும்பிவிட்டாலும் சில நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் வீட்டிலிருந்துகொண்டு வேலை செய்வதையே விரும்புகின்றனர்.
இதற்கு அலுவலகத்துக்குச் செல்லும் பயண நேரம் மிச்சம், அவ்வப்போது ஏற்படும் செலவுகளும் மிச்சம். வீட்டில் செளகரியப்படி வேலைப்பார்க்கலாம் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால், சிலர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறேன் என்று கூறிவிட்டு சிலர் நேரத்தை வீணடிப்பார்கள். இவர்கள் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பதற்காகவே சில நிறுவனங்கள் பணியாளர்களை மடிக்கணினியை (லேப்டாப்) ‘லாக்-இன்’ செய்யச் சொல்வார்கள்.
இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிலிருந்து வேலை செய்யும்போது அலுவலக வேலையை பார்க்காமல் நேரத்தை வீணடித்து உளவு சாஃப்ட்வேர் மூலம் மாட்டிக்கொண்டுள்ளார்.
கார்லி பெஸ்ஸி என்ற அந்த பெண், பிரிட்டிஷ் கொலம்பியா நிறுவனத்துக்காக வேலை செய்து வந்திருக்கிறார். இவரை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு வேலை நீக்கம் செய்த்து. காரணம் சொல்லமால் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தமக்கு அந்த நிறுவனம் 5,000 கனடிய டாலர் (இந்திய ரூபாயில் 3 லட்சம்) இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
விசாரணையின்போது அந்த நிறுவனம், அந்த பெண் 50 மணி நேரத்துக்கு மேலாக லாக் இன் செய்திருந்ததாகவும் ஆனால், அந்த நேரத்தில் வேலை பார்க்காமல் வீணடித்ததாகவும் கூறியது.
இது எப்படி தெரியவந்தது என்று பார்த்தபோது, அந்த நிறுவனம் அப்பெண்ணின் மடிக்கணினியில் அவர் வேலை செய்வதை கண்காணிக்க ஒரு புதிய சாஃப்ட்வேரை நிறுவியிருந்தது. இதன் மூலம் அவர் பணி நேரத்தை வீணடித்திருப்பது தெரியவந்தது. அவர் லாக் இன் செய்த நேரமும், அவர் செய்தவேலைகளும் டைம் ஷீட்டில் வெவ்வேறாக பதிவாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து பெஸ்ஸியின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம், முன்னாள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு, அவர் இழப்பீடாக கேட்ட அதே ரூ.3 லட்சத்தை தருமாறு உத்தரவிட்டது.