இலங்கையின் பவள விழா - அமலுக்கு வருமா 13வது திருத்தச் சட்டம்? எப்போது தெரியும்?

இலங்கையின் பவள விழா - அமலுக்கு வருமா 13வது திருத்தச் சட்டம்? எப்போது தெரியும்?

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த இருப்பதாக இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதியளித்திருக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிபர், இது பற்றி விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று பேசியிருக்கிறார்.

40 ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கை தற்போது நிறைவேறும் கட்டத்தில் இருக்கிறது. வடக்கில் மட்டுமல்ல தெற்குப் பகுதிகளிலும் கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள இலங்கை அதிலிருந்து மீண்டெழும் முயற்சியில் உள்ளபோது தமிழர்களுக்கான சம உரிமை வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் தருவது பற்றிய விஷயங்களும் பேசுபொருளாகியிருக்கின்றன.

13-வது திருத்தச் சட்டம் இனப் பிரச்னையை தீர்க்க இந்தியா முன்னெடுத்த விஷயம். 1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தானது. இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பி வைக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும் நமக்கு தெரிந்து விஷயம்தான்.

13-வது திருத்தச் சட்டத்தில், நிலம், நிதி, காவல்துறை என எந்த அதிகாரமும் மாகாண சபைக்குக் கிடையாது. அதிபரால் மாகாணத்துக்கு நியமிக்கப்படும் ஆளுநருக்கே அதிகாரங்கள் உண்டு. நாடாளுமன்றத்தால் மாகாணங்களுக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களை பறித்துக் கொள்ளவும் முடியும் என்கிறார்கள். மாகாண முதல்வர்கள் எல்லாவற்றிற்கும் ஆளுநர்களின் அனுமதியை பெற்றாக வேண்டும்.

இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாகாண கவுன்சில் என்றும், அது இந்தியாவைப் போன்ற மாநிலங்களின் கூட்டாட்சியாக இருக்கமுடியாது என்று 13-வது திருத்தத்தை முழுவதுமாக நிராகரிப்பவர்களும் உண்டு. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தரமுடியாது, ஆனால் தற்காலிக தீர்வாக இருக்க முடியும். முதலில் முழுமையாக நடைமுறைப் படுத்தட்டும் என்று நம்பிக்கையோடு இருப்பவர்கள் நிறைய பேர் உண்டு.

வரும் பிப்ரவரி 4 அன்று, இலங்கையின் சுதந்திர தினம். 75வது ஆண்டை, பவள விழாவாக கொண்டாடவிருக்கும் நேரத்தில் இலங்கை அதிபர், தமிழ் தேசிய கூட்டணியினருடன் தொடர்ந்து பேசி வருகிறார். இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் பத்து நாளில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com