தீவு வாங்கலையோ தீவு..........!

தீவு வாங்கலையோ தீவு..........!

கொஞ்சம் வசதியிருந்தால், நல்ல வீடு வாங்கலாம். இன்னும் கொஞ்சம் வருமானம் கூடினால் வாகனங்கள் வாங்கலாம். இப்போது சில கோடிகளில் ஒரு தீவையே வாங்க முடியும்.

மத்திய அமெரிக்காவிலுள்ள, நிகரகுவா புளுஃபீல்டு கடற்கறையிலிருந்து 19.5 கி.மீ தூரமுள்ள, ' தி இகுவானா தீவு' என்ற எரிமலைத் தீவுதான் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. என்னடா இது ஒரு தீவே விற்பனைக்கு வருகிறதே, எக்கச்சக்கமான விலை இருக்குமோ என்று குழம்பித் தவிக்க வேண்டாம். இந்தத் தீவின் விலை வெறும் 3.76. கோடி மட்டுமே. இது குறித்த அறிவிப்பு ஒரு தனியார் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தீவு, 5 ஏக்கர் பரப்பளவில் முழுதும், தென்னை, வாழை, இன்னும் சில தாவரங்கள் சூழ்ந்து பச்சை பசேல் என்று இருக்கிறது. வெறும் தீவு மட்டுமல்லாது, சகல வசதிகளும் உள்ள வீடும் சேர்ந்துதான் விற்பனைக்கு வருகிறது. இந்த வீட்டில் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள், பெரிய டைனிங் ஹால், பார் மற்றும் நீச்சல் குளம் என கலக்கலான வசதிகளும் தற்கால நவீன கட்டிடக் கலையோடு கட்டியிருப்பது இருப்பது சிறப்பு. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீவின் ஒருபுறம், குடியிருப்புகள் இருக்கின்றன.பொழுது போக்கிற்காக மீன்பிடி தளமும் உள்ளது.

இகுவான தீவு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில், வைஃபை, ஃபோன், தொலைக்காட்சி என்ற வசதிகளுடன் இருக்கிறது. பராமரிக்க மேலாளருடன் கூடிய பணியாளர்கள் குழுவும் உள்ளது.

நீலம்-பச்சை நீர் சூழ்ந்த இந்தத் தீவில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தையும் கண்டு மகிழலாம். ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், இதை விற்க இதன் உரிமையாளர், அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

உங்களுக்குத் தீவு வாங்கும் கனவு இருந்தால், இகுவானா தீவை வாங்க விண்ணப்பிக்கலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com