வருங்கால பிரிட்டிஷ் குயின் மகுடத்தில் ‘கோஹினூர் வைரம்’இடம் பெறப் போவதில்லை... ஏன்?

வருங்கால பிரிட்டிஷ் குயின் மகுடத்தில் ‘கோஹினூர் வைரம்’இடம் பெறப் போவதில்லை... ஏன்?

பிரிட்டிஷ் குயின் எலிஸபெத்தின் மறைவுக்குப் பின் அவரது மகனும் இளவரசருமான சார்லஸ் தற்போது பிரிட்டிஷ் அரசராகப் பதவி ஏற்கவிருக்கிறார். அவருக்கு இணையாக அவரது இரண்டாவது மனைவியான கமீலாவும் அரசியாகப் பதவியேற்கவிருக்கிறார். இவர்களது பதவியேற்பு விழா வைபவம் மே மாதம் நடக்கவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை பதவியேற்கவிருக்கும் ராணியின் மகுடத்தில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரம் இடம் பெறப்போவதில்லை எனவும் அரண்மனை வட்டாரத்தில் தகவல். இந்தியாவுடனான நல்லுறவைப் பேணிக் காக்கும் வகையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் டிப்ளமேடிக் நடவடிக்கையாக இதை அவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவின் கோஹினூர் வைரம் முகலாயர்களால் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று. இது முகலாய மன்னர் ஷாஜகானின் அரசவையை அலங்கரித்தது. இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது அது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அப்போதைய இந்தியப் பேரரசி விக்டோரியா ராணிக்குப் பரிசளிக்கப்பட்டிருந்தது. 105 கேரட் எடை கொண்டு உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்றாக விளங்கியது இந்த கோஹினூர் வைரம்.

நாடு சுதந்திரம் அடைந்ததின் பின் இந்தியாவின் பெருமை மிக்க அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் வலுத்து வந்தது. இந்திய அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை பிரிட்டனின் பரிசீலிப்பில் இருப்பதால் தற்போது அதை மகுடத்தில் அணிந்து கொள்வது தேவையற்ற விமர்சனங்களைக் கிளறி விடக்கூடும் என்று கருதுவதால் அரசியின் மகுடமேற்பு விழாவில் கோஹினூர் இல்லை என அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதற்கு பதிலாக கிங் சார்லஸின் பாட்டியான குயின் மேரி அணிந்திருந்த மகுடம் கமீலாவுக்குப் பொருத்தமாக மாற்றி அமைக்கப்பட இருக்கிறதாம். அந்த மகுடத்தில் பொருத்தப்பட என மறைந்த குயின் எலிஸபெத்தின் தனிப்பட்ட ஸ்பெஷல் கலெக்ஷன்களில் இருந்து விலை உயர்ந்த குல்லினன் |||, |V மற்றும் V ரகத்தைச் சேர்ந்த வைரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

இந்தியாவின் கோஹினூர் வைரத்தை கடைசியாக மகுடத்தில் அணிந்த பெருமை கிங் சார்லஸின் பாட்டி குயின் மேரிக்கு மட்டுமே உண்டு.

கோஹினூர் வைரத்தை இந்தியா மட்டும் உரிமை கொண்டாடவில்லை. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூட அது தங்களுக்குச் சொந்தமானது எனும் உரிமை கோரலை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டு இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com