அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிய உளவு பலூன்... நிஜமான லிங்கா பட கிளைமாக்ஸ்!

அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிய உளவு பலூன்...  நிஜமான லிங்கா பட கிளைமாக்ஸ்!

அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் உள்ள ராணுவத் தளத்தின் மீது சீனாவின் பலூன் பறந்த விஷயம், அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் முழுமையான கண்காணிப்பில் உள்ள இடத்திற்கு அந்நிய நாட்டின் பலூன் வந்த விஷயம் அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

அமெரிக்காவின் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், நேற்று சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரபரப்பான அமெரிக்க அதிரடிப்படையினர், பலூனை தங்களது கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

உடனடியாக  மர்ம பலூனை சுட்டு வீழ்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பலூன் பறந்து கொண்டிருந்த இடம் மிகவும் ரிஸ்க்கான் இடம் என்பதால் முயற்சி கைவிடப்பட்டது. அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் அதனால் வரும் சேதம் அதிகம் என்பதால் பின்வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அரசியலில் பலூன் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மர்ம பலூன், சீனாவைச் சேர்ந்தது என்பதை உறுதி செய்திருப்பதோடு, வானிலை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த பலூன் எப்படியோ கட்டுப்பாட்டை இழந்து, அமெரிக்க எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும், பின்னணியில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கியிருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேவையில்லாத அசௌகரியம் ஏற்பட்டிருப்பதால்  தன்னுடைய கவனக்குறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சீனா தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே சீனாவை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும் உலக நாடுகள் மத்தியில் இதெல்லாம் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்றுதான் சொல்லவேண்டும்.

உளவு பார்க்க எத்தனையோ அதிநவீன தொழில்நுட்பங்கள், சாட்டிலைட் டெக்னாலஜி இருக்கும்போது லிங்கா படத்தின் கிளைமாக்ஸில் வருவதுபோல ஹீலியம் பலூன்களை பறக்க விட்டு கண்காணிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. பலூன் மூலம் கண்காணிப்பது ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம் என்றாலும் சாட்டிலைட் மூலம் கண்காணிப்பதை விட துல்லியமாக கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது மறைத்து வைக்கப்பட்ட குண்டுகளை கண்டுபிடிக்க, ஜப்பானிய ராணுவம் பலூன்களையே பெரிதும் நம்பியிருந்தது. அதற்குப் பின்னரே பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்தன. குறிப்பாக பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் உளவு பார்ப்பதற்கு பலூன்களையே அதிகம் பயன்படுத்தியிருக்கின்றன.

நவீன பலூன்களால் தரையிலிருந்து 80 ஆயிரம் அடி முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி வரை உயரத்தில் பறந்து கண்காணிக்க முடியும். தரையிலிருந்து பார்த்தால் பலூன்களை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ரேடார் தொழில்நுட்பத்தின் மூலமாக மட்டுமே பலூன்கள் பறப்பதை பார்க்க முடியுமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com