உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு !
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திடீர் பயணமாக இங்கிலாந்து சென்று அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ரூ வருடங்களை கடந்த பின்னும் இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை கேட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார் .அதன்படி இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டு அதிபர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் இந்த பயணத் திட்டத்தின் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் மூலம் இங்கிலாந்து சென்ற ஜெலன்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார்
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதாரம், ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஜெலன்ஸ்கி ஆயுத உதவி கோரியிருந்த நிலையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் மற்றும் நெடுந்தூரம் சென்று தாக்கும் டிரோன்களையும் வழங்குவதாக பிரிட்டன் உறுதி அளித்து இருந்தது. இந்த சந்திப்பின்போது ஆயுத உதவி தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர். பின்னர் நெடுந்தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், ட்ரோன்களை வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
ஏற்கனவே உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இங்கிலாந்து அரசின் வணிகங்களை நிறுத்தி இருந்தவர் ரிஷி.