தலைமுடி ஏன் நரைக்கிறது? அமெரிக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

தலைமுடி ஏன் நரைக்கிறது? அமெரிக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

லைமுடி ஏன் நரைக்கிறது என்பதற்கான உண்மையான காரணத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

தலைமுடியை எப்போதும் கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்களானது, அதன் முதிர்ச்சித் திறனை இழக்கும்போது, முடி நரைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செல்கள் முதிர்ச்சியடையும்போது மெலனோசைடாக வளர்ச்சி பெறுகிறது. இதுதான் முடியை அதன் இயற்கை நிறத்தில் வைத்திருக்கும். செல்கள் முதிர்ச்சியடையாத பட்சத்தில் மெலனோசைட் வளர்ச்சி தடைப்பட்டு நரைமுடி ஏற்படுகிறது. 

இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலியிடம் மேற்கொண்டனர். ஏனென்றால் எலிகளுக்கும் மனிதர்களைப் போலவே முடி வளர்ச்சிக்கு உதவும் அணுக்கள் உள்ளது. இந்த ஆய்வின் முடிவை கொண்டு, முடி நரைப்பதைக் தடுக்கும் ஆராய்ச்சியை மேற் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள். மேலும் இந்த மெலனோசைட் பற்றிய ஆராய்ச்சியானது சில புற்றுநோய் மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு சிகிச்சையைக் கண்டறிய உதவுமென BAD (பிரிட்டிஷ் அசோசியேசன் ஆஃப் டெர்மடாலஜிஸ்ட்) கூறுகிறது. 

நரைத்த முடி மீண்டும் கருமையாக மாறுமா? 

முடி நரைப்பதற்கு முதல் காரணமாகக் கூறப்படுவது ஊட்டச்சத்து குறைபாடுதான். அதே சமயம் மன அழுத்தம் காரணமாகவும் முடி நரைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டால், நரைமுடி ஏற்படுவதை சில காலத்திற்கு தள்ளி போடலாம். சிலருக்கு முடி நரைக்க, மரபணுவும் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 

ஆய்வு முடிவுகளின்படி, மெலனோசைட் செல்களை சரி செய்வதால் நரைத்த முடியை மீண்டும் கருப்பாக மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அந்த செல்களை சரி செய்வது அவ்வளவு எளிதான காரிய மில்லை. தற்போதுதான் அதன் முதல் படியில் விஞ்ஞானிகள் இருப்பதால், இது முழுமையடைய மேலும் சில பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த ஆய்வினால் தீவிர தோல் புற்றுநோயின் தன்மைகளைப் பற்றி புரிந்துகொள்ள முடியும் என்கின்றனர். மேலும் சருமத்தில் தோன்றும் வெண்புள்ளிகள் பற்றிய கூடுதல் விவரங்களையும் இந்த ஆய்வு மூலம் அறிய முடியும். 

எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, மயிர்கால்கள் மற்றும் முடியை கருமையாக வைத்திருக்கும் செல்கள் பற்றிய புரிதலை அதிகம் கொடுத்துள்ளது. இதுபோக, முடி உதிர்தல் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறை சாத்தியமாகுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த மெலனோசைட் செல்கள் பற்றிய ஆராய்ச்சியின் மூலம், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் உறுதிப்பட கூறுகிறார்கள். 

ஒரு காலத்தில் நரைமுடியை மக்கள் மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்த்தனர். ஆனால் தற்போதெல்லாம் அதை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது போல் தான் தெரிகிறது. இளவயதில் நரைமுடி ஏற்பட்டாலும் அதை Salt and Pepper Look என்று ஸ்டைலாக கெத்து காட்டுகிறார்கள். சிலர் விருப்பப்பட்டே தன் கருப்பு முடியை சில்வர், டைமண்ட் போன்ற நிறத்திற்கும் மாற்றிக் கொள்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது மக்கள் நரைமுடியை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com