ChatGPT பயன்படுத்தி 1.65 லட்சம் சம்பாதித்த எழுத்தாளர்.

ChatGPT பயன்படுத்தி 1.65 லட்சம் சம்பாதித்த எழுத்தாளர்.

ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கும் அதிகமான அறிவியல் புனைக்கதைகளை எழுதி, எழுத்தாளர் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். 

தற்போது எதற்கெல்லாம் ChatGPT பயன்படுத்தலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நாள்தோறும் புதுப்புது செயல்களுக்காக  ChatGPT உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. OpenAi என்ற நிறுவனம் மூலமாக உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மிகப்பெரிய மைல் கல்லை எட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் தற்போது ChatGPTயை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் தலைசிறந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் வரை இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதைப் பயன்படுத்தி விதவிதமான யோசனைகள் மூலமாக பல பணம் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு ChatGPT சிறந்த உதாரணமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இதன் வரிசையில் பலர் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகங்களையும் எழுதத் தொடங்கியுள்ளனர். எழுதிய புத்தகங்களை இணையத்தில் விற்பனை செய்து லட்சங்களில் பணம் சம்பாதிக்கின்றனர். 

அப்படிதான் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ChatGPT-யைப் பயன்படுத்தி பல நூறு கதைகளை எழுதி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். அவரது பெயர் 'டிம் பவுச்சர்'. பல ஆண்டுகளாகவே அறிவியல் புனைக்கதை மற்றும் சிறுகதைகள் எழுதி புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வருகிறார். 

ஆனால் தற்போது இணையத்தில் புத்தகங்களை விற்பனை செய்வதே இவரின் முதன்மையான தொழிலாக இருக்கிறது. ChatGPT பயன்படுத்துவதற்கு முன்பு வரை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் மட்டுமே எழுதி வந்த நிலையில், தற்போது ஒரு நாளுக்கே பல புத்தகங்களை எழுதி முடிப்பதாகக் கூறுகிறார். இவர் கதை எழுதுவதற்கு ChatGPT மட்டுமல்லாமல் Anthropic's claude என்ற Chatbot-களையும் பயன்படுத்துகிறார். 

இவர் எழுதிய புத்தகங்கள் பலருக்கு பிடித்துப் போகவே ஒரே மாதத்தில் 500 புத்தகங்கள் வரை விற்றுத் தீர்ந்திருக்கிறது. இதன் மூலமாக அவருக்கு 2000 அமெரிக்க டாலர்கள் வருமானமாகக் கிடைத்திருக்கிறது. அவர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் 5000 வார்த்தைகளுக்கு குறையாமல் இருந்திருக்கிறது. அவற்றில் ஆங்காங்கே படங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தப் படங்கள் அனைத்தையுமே அவர் ஏஐ சாட்பாட் மூலமாகவே உருவாக்கியதாகக் கூறுகிறார். 

தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com