0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

ரொம்ப வருஷம் கழிச்சு, என்னுடைய உறவினர் சுதா வீட்டுக்குப் போக நேர்ந்தது. அவர் எனக்கு அண்ணி முறை ஆகணும். போனால்… கால் வெக்க இடமில்லாம ஒரே களேபரம்!
ஐந்து வயது பேரன் கிக் ஸ்கூட்டரை, ‘டர்புர்’னு அபாயகரமாக ஓட்டிக் கொண்டிருந்தான். ஏழு வயது பேத்தி ஜன்னல் டு கட்டில், கட்டில் டு சோஃபா என தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தாள். இரண்டு வயசுப் பேரன், ‘ஓ’ என்று மூச்சு விடாமல் அழுது கொண்டிருந்தான்.
சுதா அண்ணி மூன்று பேருக்குமாக ட்ரைலத்தான் ஓடி ஓடி, இட்லி ஊட்டிக் கொண்டிருந்தார்.
மடிக்கப்படாத துணி மலை, சிங்க் நிறைய பாத்திரங்கள், வீடு நிறைய விளையாட்டுச் சாமான்கள், நோட்டுப் புத்தகங்கள்… தர்மசங்கடத்தின் உச்சத்தில் நான்!
அப்புறம் காட்சி மேலும் மூர்க்கமானது.
வாண்டுகள் இரண்டும் எதற்கோ சண்டையிட்டு, தரையில் உருண்டு புரண்டார்கள். பொடுசு இருக்கே… அதுவும் தன் பங்குக்கு, ‘மூச்சா’ போய் கெத்து காட்டியது.
சுதா அண்ணியோ, “வெளுத்துப்புடுவேன்… வந்தா துவைச்சுப்புடுவேன்!” என்று உதார் காட்டினாங்களே தவிர, பசங்க லூட்டி என்னவோ குறைவதாயில்லை.

“என்ன அண்ணி, உங்க மகள், மருமகள் எல்லாம் எங்க? குழந்தைகளை உங்கக்கிட்ட விட்டுட்டு எங்க போனாங்க?” தயக்கத்துடன் இரண்டே கேள்விதான் கேட்டேன்.
“அவங்கதான் ஆளுக்கொரு கைப்பிள்ளை, மடிப்பிள்ளையை வெச்சுக்கிட்டு அலையறாங்களே! சொந்தப் புள்ளைங்கள கவனிக்க ஏது நேரம்?” சட்னு பதில் வந்தது.


மடிப்பிள்ளை… ஓ… லேப்டாப்!
கைப்பிள்ளை… வேறு என்ன, செல்ஃபோன்!
அப்பதான் சாத்தியிருந்த ஏ.ஸி அறைகளைப் பார்த்தேன். ஓ… வர்க் ஃப்ரம் ஹோம்!
அண்ணியாரின் அங்கலாய்ப்பின் சுருக்கம் இதோ :
“மொதல்ல பிள்ளையோட பசங்கள பார்த்துக்குற ட்யூட்டி மட்டும்தான் இருந்தது. இப்ப பொண்ணும் கொண்டு வந்து விட்டுடறா… ஏதாவது எமர்ஜென்ஸின்னு கதவைத் தட்டினாகூட, “உஷ்… உஷ்… ‘கால்’ ‘கால்’ என்று சைகை காட்றாங்க. எனக்கும் 65 வயசாகுது. முட்டி வலி, தலை சுத்தல்னு நிறைய பிரச்னை இருக்கு. சொல்லவும் முடியல… மெல்லவும் முடியல. குழந்தைகளுக்கு ஸ்கூல் இல்ல… வீட்டுலயே கட்டிப்போட்ட மாதிரி இருக்கா? ஓவர் குறும்பு பண்றாங்க! என்னாலே சமாளிக்கவே முடியலை, ரோதனையா இருக்கு! ரெஸ்டே இல்ல!”
“ஆஃபீஸ் வேலை முடிஞ்சதும் தூங்கறாங்க… இல்லன்னா ஹாய்யா ஷாப்பிங், கல்யாணம்னு அவுட்டிங் போயிடறாங்க! ஒரு ஜுரம், வாந்தி, அடம்னா ‘பாட்டிக்கிட்ட போ’ன்னு குழந்தைகளை நைஸா என்கிட்ட அனுப்பிடறாங்க”ன்னு ஆதங்கப்பட்டார்.
டியர் யங் மதர்ஸ் அண்ட் ஃபாதர்ஸ்… இது ஏதோ ஒரு வீட்டின் கதையாக எனக்குத் தெரியலை.
அம்மாவோட (மாமியாரோட) டியூட்டியே தன் பசங்களைப் பார்த்துக்கிறதுதாங்கிற மனோபாவம் பல இளம் தம்பதிகிட்ட இருப்பதைப் பார்க்கிறேன். ஓவர் அட்வான்டேஜ் எடுப்பது சரியில்லை பெண்களே!
முதியோர்களின் பாசத்துக்கும், தியாகத்துக்கும், உழைப்புக்கும் எல்லையே இல்லையா? உறிஞ்சி எடுப்பதுதான் உங்க நோக்கமா?
உங்கள் குழந்தைகள் உங்கள் பொறுப்பு அல்லவா? பெற்றோருக்கும் கொஞ்சம் ஓய்வு தாருங்கள். பிள்ளைகளை நீங்கள் வளருங்கள். அதுதான் சரியான வளர்ப்புமுறை.
மடிப்பிள்ளை, கைப்பிள்ளைகளுடன் ஊடாடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, உயிர்ப் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துங்க!
அப்பதான் அம்மா – பிள்ளை பாசம் வளரும்! உறவு வலுப்படும்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும். அந்தப் பள்ளி, ஸாரி......

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...