ஒரு வார்த்தை!
கதை நேரமிது! நாம்ப சின்ன வயசுல கேட்டதுதான்; ஆனாலும் ரொம்ப சத்தான, சாரமான கதைங்கிறதால, மனசுக்குள்ள பசேல்னு நிக்குது சகோதரீஸ்!
அது ஓர் அழகான சோளக்காடு; ஆள் உசரத்துக்கு சோளப் பயிரெல்லாம், ‘தளதள’ன்னு வளர்ந்து நிக்குது. சோளக் கதிருக்கு நடுவே கருங்குருவிக் குடும்பம் ஒன்று ஜாலியா வசித்து வந்தது.
ஒரு நாள் அந்தக் காட்டோட சொந்தக்காரன் வந்து பார்த்துட்டு, வேலையாளைக் கூப்பிட்டு, “தோ பாருப்பா… கதிரெல்லாம் நல்ல பக்குவமா இருக்கு; உடனே அறுவடையை ஆரம்பிச்சுடணும்’’ன்னாராம்.
“ஆகட்டும் சாமி; நல்ல நாளா பார்த்து அறுப்புக்கு ஆளைக் கூட்டியாரேன்’’ன்னான்.
அதைக் கேட்ட நாலு குருவிக் குஞ்சுகளும், ‘கீச்… கீச்…’னு அலறின. “அம்மா, நாம்ப உடனே இந்த இடத்தை விட்டுப் போயிடணும்’’னு பயந்துப் பதறின.
“பயப்படாதீங்க செல்லம்ஸ்… இன்னும் அதுக்கு வேளை வரலை’’ன்னு அம்மா குருவி அணைச்சுக்கிச்சாம்.
இரண்டு நாள் போச்சு; பண்ணையார் மகனோட வந்தாராம்.
“மகனே… கதிரெல்லாம் சாய ஆரம்பிச்சுடுச்சு. அறுவடை உடனே ஆரம்பிக்கணும்’’ன்னாராம், கவலை தோய்ந்த குரலில்.
“சரிப்பா… என் பொண்டாட்டி நாளைக்கு ஊருல இருந்து வந்ததும் ஆரம்பிச்சுடலாம்’’ன்னான்.
“அம்மா… இனியும் இங்க தங்குனா ஆபத்து. நாம்ப உடனே வேற கூடு கட்டிக்கணும்’’னு குட்டீஸ் அலறுச்சாம்.
“டோன்ட் வொர்ரி செல்லம்ஸ்… இன்னும் அதுக்கு வேளை வரலை… வெயிட்!’’னு சொல்லிச்சாம் அம்மா குருவி.
இன்னும் ஒரு மூணு நாள் கழிச்சு பண்ணையார் வந்து பார்த்தாராம்…
“இனி யாரை நம்பியும் பிரயோஜனமில்லை… மழை வந்தா கதிரெல்லாம் வீணாயிடும். மகனும் வேணாம், பண்ணை ஆளும் வேணாம்’’னு கதிரடிக்குற மிஷினுக்கு ஃபோனை போட்டு வரச் சொன்னாராம்.
அப்ப அம்மா குருவி, “கண்ணுங்களா… இதுதான் ரைட் டைம்! இனிமே இங்க தங்குனா ஆபத்துதான்!’’னு சொல்லி, கும்பலா கிளம்பி பறந்துப் போயிடுச்சாம்!!
“அம்மா, நாங்க சொன்னப்போ நீ கேட்கலை… இப்ப உடனே எப்படி முடிவெடுத்தே?’’
“கண்ணுங்களா… எப்பவுமே ஒரு வேலையை, வேலையாளை விட்டு செஞ்சா, அது அதமம். மகனை விட்டு செஞ்சா மத்யமம். தானே இறங்கி செய்யறதுதான் உத்தமம். எப்போ தன் சொந்த சக்தியையும், உழைப்பையும் நம்பி வயல்ல இறங்க தீர்மானிச்சாரோ, நிச்சயம் அவர் செஞ்சு முடிச்சுடுவாருன்னு தெரியும்! அதான் எஸ்கேப் ஆயிட்டோம்!’’னு தாய்க்குருவி சொன்னதாம்!
நம்மில் சிலர் எப்போதும், எல்லாவற்றுக்கும் யாரையாவது சார்ந்து வாழ்ந்தே பழகிவிட்டோம். அப்படிப்பட்டவர்கள், வாழ்வில் முன்னேறுவது கடினமே… ‘தன் கையே தனக்கு உதவி’னு இறங்கி முயற்சிப்பவர்களுக்கு எல்லா அதிர்ஷ்டக் கதவுகளும் தானாகத் திறந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன? இன்னொரு விஷயம்… தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்களுக்குதான் இறைவன் உதவுவான்!
விடியும் என்று விண்ணை நம்பு!
முடியும் என்று உன்னை நம்பு!
குட் சியர்ஸ்!
எங்களுக்கு அமுதசுரபியா அறிவு ஔியை அள்ளித்தந்தது “ஒரு வார்த்தை “யில் சாெ ல்லிய கதை. மனித வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை யே மூலஆதாரம் என்ற தத்துவத்தை இத் தீபாவளி சிறப்பிதழில் உதிர்த்த அனுஷா ம்மாவுக்கு பா ராட்டுகள் .
து.சே ரன்
ஆலங்குளம்
குறிப்பு : எப்படித்தான் சி….ந்…த..னை ….
வரு கிற தாே …. கற்பனைக் கடல் தானம்மா நீங்கள்… வாழ்க வாழ்த்துகள்.
தெரிந்த கதை தான் . அதில் சொல்லவந்த நீதி மிகவும் உத்தமம். தன் கையே தனக்குதவி என்பது நூற்றுக்கு நூறு உண்மை. யாரையாவது நம்பினால் நம் வேலை இழுத்தடிக்கப்படும். நாமே இறங்கி செய்தால் சடுதியில் முடிந்துவிடும். ஆசிரியரின் ‘ஒரு வார்த்தை’ எப்போதுமே அட்டகாசமாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கும்
அதமம், மத்யயம் , உத்தமம் விளக்கங்கள் படு ஜோர்