0,00 INR

No products in the cart.

பாசப் பண்டிகை பாய் தூஜ் !

பா.கண்ணன், புது தில்லி

டன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நல்வாழ்விற்காக வேண்டிக்கொண்டு உறவு, ஒற்றுமை வலுப்படவும், சகோதர பாசம் நிலைப்பெறவும் எடுக்கப்படும் விழாக்கள் நம் பாரம்பரியத்தில் முக்கியமாக மூன்று உள்ளன. அவை, கனுப் பொங்கல், ரக்ஷாபந்தன் மற்றும் பாய் தூஜ் ஆகியவையாகும். வட இந்திய மாநிலங்களில் தீபாவளி பண்டிகை,
தன திரயோதசி, நரக சதுர்தசி, தீபாவளி, அன்னகூட் எனும் கோவர்த்தன பூஜை, பாய் தூஜ் என்று ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்லபட்ச துவிதியை, ‘தூஜ்’ எனப்படுகிறது. பெண்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குவது இந்நாளைத்தான். தங்கள் சகோதரர்களைச் சந்தித்து ஆசி கூறவோ அல்லது ஆசி பெறவோ சகோதரிகள், பிறந்த வீட்டுக்கோ, உடன்பிறந்தோர் வசிக்கும் இடத்துக்கோ சென்று, அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நாளே இப்பண்டிகையாகும்.

ரக்ஷாபந்தனின்போது உடன்பிறந்த சகோதரன் தனது சகோதரிக்கு, ‘எப்போதும் உறுதுணையாய் இருந்து காப்பேன்’ என்று உறுதியளிக்கிறான். பாய் தூஜ் அன்று சகோதரி, அவனது நல்வாழ்வுக்காக வேண்டுகிறாள். கனுப்பிடி அன்றோ, வீட்டுப் பெண்கள் உடன்பிறந்தோருக்காக மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காக்கைக் கூட்டம் போல் ஒற்றுமையாய் இருக்க இறைவனை வேண்டுகிறார்கள்.

ந்த விழாவுக்குப் பின்னணியாக பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. புராணத்தின்படி, நரகாசுரனை வதம் செய்த பிறகு, பகவான் கிருஷ்ணர் தனது தங்கை சுபத்திரையை சந்திக்கச் செல்கிறார். அந்த வெற்றியைக் கொண்டாட அவள், தமையனை வீரத் திலகமிட்டு வரவேற்று உபசரிக்கிறாள். மற்றொன்று, யமியும், யமனும் சூரியத் தேவனுக்குப் பிறந்த இரட்டையர். எமதர்மனும், நதியாகிய யமுனையும். தங்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவே இயலவில்லை. பிரிவாற்றாமையால் தவித்த யமன், ஐப்பசி மாதம், சரத் ருது சுக்லபட்ச துவிதியை அன்று தனது சகோதரி யமியை சந்திக்க மதுரா வந்ததாக ஐதீகம். வெகு நாட்களுக்குப் பிறகு யமனும் யமியும் சந்தித்து அளவளாவி, சகோதரன் சகோதரிக்கு வரமளித்த இடம், மதுரா யமுனைக்கரை 13வது படித்துறையிலுள்ள, ‘விஷ்ராம் காட்’ ஆகும். “ப்ராதா! செய்த பாபங்களுக்காக வருந்தி, என்னிடம் தஞ்சமடைபவர்கள் அமைதி பெற்றுக் கரையேற வழிவகை செய்யுங்கள். மேலும், இந்நன்னாளில் இங்கு வந்து புனித நீராடி நம்மை வணங்கும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், தாங்கள் பின்பு அவர்களுக்கு அளிக்கப்போகும் கடுந்தண்டனை, கடிந்துரைகளினின்று விடுவித்து அமைதி பெற உய்விப்பீராக!” என்ற பாசமிகு தங்கையின் மன விருப்பத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தான் யமன்.

இங்குள்ள, ‘பெஹன்பாய்’ இரட்டையர் ஆலயத்தில், ‘பாய் தூஜ்’ அன்று சகோதரிகள் தங்கள் சகோதரனுடன் வந்து, அவனது நல்வாழ்வுக்காக ஆராதித்து வேண்ட, யமிக்குக் கொடுத்த வாக்குப்படி, யமன் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ‘பாய் தூஜ்’ விழா சமயம் இளம் வயதினர் முதல் மூத்தோர் வரை சகோதரிகள் தங்கள் உடன்பிறந்தோருடன் இங்கு வந்து நீராடுவர். பின், விளக்கேற்றி யமதர்ம ராஜனையும், அவனது சகோதரி யமுனாவையும் பூஜை செய்து, சகோதரனின் நெற்றிப் புருவ மத்தியில் செந்நிற குங்குமத்தைத் தீட்டி, அதன் மேல் அட்சதையை வைத்து ஆரத்தி எடுப்பர். உடன் பிறந்தோர் நோய்நொடி எதுவுமில்லாமல் நீண்ட காலம் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து இனிப்பும், தேங்காயும் கொடுப்பார்கள். இரு தேவதைகளுக்கும் நிவேதனமாக, சீரக சாதம், பாயசம், கச்சோரி, கேரட் அல்வா போன்றவற்றை சமர்ப்பிப்பர்.

சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த நாளும் இன்றுதான் என்று கூறப்படுகிறது. ராஜ்ஜிய பாரத்தைத் துறந்து மகாவீரர் வெளியேறிய சமயம், அவரது இளவல் நந்திவர்தன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானான். அப்போது அவனது சகோதரி சுதர்ஷணா அவனுக்கு ஆறுதலளித்து, பக்கபலமாக இருந்தாளாம். இதனாலும் பாய் தூஜ் விழா முக்கியத்துவம் பெறுகிறது.

இனி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இவ்விழா எப்படிக் கொண்டாடப்படுகிறது எனப் பார்ப்போம்.

பீகார், ஜார்க்கண்ட் : இந்த விழா இம்மாநிலங்களில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. சற்று முகம் சுளிக்கவும் வைத்து விடும். சகோதரனை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசினால் எங்கே அவனுக்கு, ‘கண்ணேறு’ பட்டுவிடுமோ என்ற (மூட) நம்பிக்கை இங்குள்ள ஆதிவாசி மக்களிடமும், பழங்குடியினரிடமும் வெகுவாக இருப்பதால், அன்றைய தினம் உடன் பிறந்தோரை மன வருத்தத்துடன் ஏசி, திட்டித் தீர்ப்பார்கள். பின் பச்சாதாபப்பட்டு அதற்குத் தண்டனையாக தங்கள் நாக்கைக் கூரிய முள்ளால் கீறிக்கொண்டு தங்களை மன்னிக்குமாறு கோருவார்கள். அவனும் அவளுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுத்து மகிழ்விப்பான்.

மே.வங்காளம் : தீபாவளி காளி பூஜையின் முதல் அல்லது இரண்டாம் நாள் நிகழ்வது, ‘பாய் ஃபோட்டா’ என அழைக்கப்படும் பாய் தூஜ் பண்டிகையாகும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட உடன்பிறந்தோர் இதில் பங்கு பெறுவர். அன்று முழுவதும் சகோதரி விரதமிருப்பாள். சகோதரன் வந்தவுடன் அவன் நெற்றியில் நெய், சந்தனம், காஜல் கலந்த பொட்டு வைத்து, அவன் நீடூழி வாழ யமன், யமியிடம் வேண்டுவாள். பிறகு நடக்கும் விருந்தில் தேங்காய் லட்டு, பாயசம் முதலானவை பரிமாறப்படும்.

மகாராஷ்டிரா, கோவா, குஜராத், ஹரியானா : இங்கெல்லாம் இவ்விழா, ‘பாவ்(ய்) பீஜ்’ என்றழைக்கப்படுகிறது. மங்கல நீராடல் செய்து வரும் சகோதரனை கோலமிடப்பட்ட சதுரத்தில் நிற்க வைப்பர். காரடே எனும் வெள்ளரி இனத்தைச் சேர்ந்த காட்டுதும்மட்டி (பேய் தும்மட்டி, இந்திரவருணி என்றும் பெயருண்டு) பழத்தை இடது கால் கட்டை விரலாலோ அல்லது குதிகாலாலோ அழுத்தி மிதித்து, அதன் கசப்புச் சுவை கொண்ட சாறைப் பருகச் சொல்வர். பின் ஆரத்தி எடுத்து இறை வணக்கம் செய்வர். (கசப்பான பல சம்பவங்களுக்குக் காரணமானவனும், வெறுக்கத்தக்க குணங்களைக் கொண்டவனுமான நரகாசுரனை இப்பழத்துக்கு ஒப்பிடப்படுகிறது.)

ஸ்ரீ கிருஷ்ணர், அசுரனை தனது இடது குதிகாலால் அழுத்தி வதம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. நம்மிடமிருக்கும் துர்குணங்களை விலக்கி வைக்கவே இந்த மருத்துவ குணமுள்ள காரடே பழச்சாறை ருசிக்கச் சொல்கிறார்கள். இந்தப் பழத்தை காட்டு முயல்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இது குளிர்காலத்தில் நிறையக் கிடைக்கும். சகோதரன் இல்லாத பெண்கள் அன்று மூன்றாம் பிறைச் சந்திரனை தரிசித்து வழிபடுவர். சகோதரன் மனம் மகிழ, பாசுந்தி பூரி, பால் பாயசம் பூரி, ஸ்ரீகண்ட் பூரி என உணவு வகைகள் பரிமாறப்படும்.

நேபாளம் :பாய் டீக்கா’ என்ற பெயருடன் இது இங்குக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரன் எவ்வித நோய்நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் விளங்க யம தீபம் ஏற்றி, பிரபு தர்மராஜை போற்றித் தொழுவர். ஏழு வண்ணக் கலவையாலான பொடியைத் திலகமாக அவன் நெற்றியில் இடுவார்கள். மற்ற சடங்குகள் வழக்கம் போலவே நடந்தேறும். இந்நன்னாளில் மகான் ஸ்ரீ வல்லபாச்சாரியார் இயற்றிய, ‘யமுனாஷ்டகம்’ தோத்திரப் பாடல்களைப் படிப்பது நல்லது!

பாபங்களைக் களைவதும், தெய்வத்தின் பேரில் அளவற்ற பற்று உண்டாக்கச் செய்வதும், சகல ஸித்திகளையும் அளிக்கக்கூடியதுமான யமுனாஷ்டகத்தை, யம துவிதியை அன்று படித்து, சகோதர பாசத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...