நேர்காணல்: காயத்ரி.
தமிழ் படத்தின் பாடலான ஆட்டமா தேரோட்டமா.., நோட்டமா சதிராட்டமா” என்ற பாடல் மூலம்தான் சதிராட்டம் எனும் ஒருவகை நடனம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்ககூடும்.
‘’ஆனால் சதிராட்டம் என்பது பாரம்பரியமிக்க ஒரு ஆட்டக்கலை’’ என்கிறார் விராலிமலையை சேர்ந்த 83 வயதான முத்துக்கண்ணம்மாள். தமிழகத்தில் கோயில்களில் தேவதாசிகளால் உயிரோட்டமாக அரங்கேற்றப்பட்டு வந்த பாரம்பரிய ஆட்டக் கலையான சதிர் ஆட்டக் கலையின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்பவர் முத்து கண்ணம்மாள். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வசித்து வருகிறார்.
இவருக்கு தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது.இதனால் அவர் மட்டுமின்றி விராலிமலை பகுதி மக்களும்கூட பெருமகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். ஆனால் காலப்போக்கில் அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் உரியவர்களாக தேவதாசிகள் மாற்றப்பட்டனர். அதையடுத்து 1947-ம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவதாசிகள் பணியாற்றியுள்ளனர். இவர்களில் தற்போது எஞ்சியிருப்பவர்தான் 83 வயதான முத்துக்கண்ணம்மாள். இந்த வயதிலும் தன் குரல், நடன அசைவுகளில் இளமையை நினைவூட்டுகிறார்.
சதிராட்டம் குறித்தும் இக்கலைக்கு தான் வந்தது எப்படி என்றும் முத்துக் கண்ணம்மாள் சொல்லத் தொடங்கினார்.
“பாரம்பரிய கலையான சதிர் நடனத்துக்கு என் தந்தை ராமச்சந்திரன்தான் கடைசி நட்டுவனாராக (பயிற்சியாளர்) இருந்தார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் கடைசி தேவதாசிகளாக அரங்கேற்றப்பட்ட 32 பேரும்! அந்த அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல.. நடன. அசைவு, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சங்கராபரணம், தில்லானா, பதம், நோட்டீஸ்வரம் போன்று ஒவ்வொரு பிரிவுகளையும் திறம்படக் கற்று, அதில் கைதேர்ந்தவர்களையே கோயிலுக்கும், மன்னர்கள் முன்னிலையிலும் அரங்கேற்றுவார்கள்.
அப்படியாக நான் என் தந்தையிடமே அனைத்தையும் கற்ற பின்னரே நான் அரங்கேற்றப்பட்டேன். எனக்கு 30 வயதாகும் வரை கோயில் விழாக்களில் நடனமாடும் வழக்கம் இருந்தது. விராலிமலை சுப்பிரமணியர் கோயில் திருவிழாவின்போது எங்களின் ஆடலும், பாடலும் ஊர்மக்களைச் சுண்டி இழுத்து கோயிலை நோக்கி வரவழைக்கும்! பாடலில் உள்ள சொல்லாடலுக்கு ஏற்ப, தன் உடலையே மாற்றக்கூடிய வல்லமைதான் சதிராட்டத்தின் புலமை. விராலிமலை குறவஞ்சி என்ற நடன நிகழ்வுக்கு அப்போது மிகப் பெரிய மவுசு!
விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் தினமும் நடைபெறும் வழிபாட்டின்போது முருகனைப் பற்றி பாடல் பாடுவதும் சுவாமி வீதியுலாவின் போது நடனமாடுவதுமே எங்களின் பிரதானப் பணி. அதோடு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் கும்மி, கோலாட்டத்துடன் சதிர் ஆட்டம் களைகட்டும்.
தேவதாசி முறை 1947-க்குப் பிறகு ஒழிக்கப்பட்டதுடன் கோயிலுக்குச் சேவகம் செய்து வந்த தேவரடியார்களும் படிப்படியாக இறந்துவிட்டனர். தற்போது, நான் மட்டுமே எஞ்சியுள்ளேன். உள்ளூர் முருகன் கோயில் திருவிழாவில் ஒரு நாளும், பொள்ளாச்சியில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒருநாள் மட்டும் உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு சதிர் நடனம் ஆடுகிறேன்.
photo 4&5
5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சொர்ணமால்யா இந்த நடனத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியது ஆறுதலாக இருந்தது. மற்றபடி, பல தலைமுறைகளாக இருந்த இந்தக் கலையை கற்றுக்கொள்ள வேறு யாரும் முன்வரவில்லை. இந்தக் கலை தொடர்பாக எதையும் ஆவணப்படுத்தவும் இல்லை. ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப ஆடக்கூடிய பரத நாட்டியம் தமிழகமெங்கும் முக்கிய கலாச்சார நடனமாக ஆடப்பட்டு வரும் நிலையில், அதற்கு முந்தைய கலையான சதிர் நடனம் அழிவின் விளிம்பில் இருக்கிறதே என்பது எனக்கு வேதனை!
இந்தக் கலைக்கு, அந்தக் காலத்தில் கொடுத்த சம்பளம் அரையணாவும் கொஞம் விளை நிலம்தான். என் 83 வயதில் இப்போது இந்த கலையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் என்னோடு சதிராட்டக் கலை முடிந்து விடுமோ என்று ஏக்கமாகவும் இருக்கிரது. நான் கற்ற கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியவில்லையே என்று வருந்துகிறேன். இப்போதைக்கு என் பேத்திகள் உட்பட ஒரு சிலருக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். இந்த கலை அழிந்து விடாமல் காக்க அரசு உதவ வேண்டும்’’ என்கிறார் முத்துக் கண்ணம்மாள்.
முத்துக் கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் விராலிமலை ஊர் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
‘’சதிராட்டம் மூலம் பிறந்த பரதநாட்டியம் இன்று உலகம் முழுவதும் கொடி கட்டிப் பறக்கும் நிலையில் முத்துக் க்கண்ணாம்மாவிற்கு இந்தவிருது கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி.. அதேசமயம் இவரோடு இந்த கலை முடிந்து போகாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்”” என்கிறார்கள்.
கலை வளர்த்த தமிழ்நாட்டில் முத்துக்கண்ணம்மாவின் உயிர் மூச்சில், ஊசலாடிக் கொண்டிருக்கிறது சதிராட்டம் எனும் பாரம்பரியக் கலை. தேவதாசி முறை ஒழிக்கப்படும்போது, அவர்களால் நிகழ்த்தப்பட்ட கலைகளை அரசோ, அமைப்புகளோ பாதுகாத்து ஆவணப்படுத்தி வளர்த்திருக்க வேண்டும். இப்போதாவது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், சதிராட்டக் கலை காப்பாற்றப்படும் என்பது அனைவரின் கருத்து.