பொன்னியின் செல்வன் வாசிப்பு அனுபவம்!

பொன்னியின் செல்வன் வாசிப்பு அனுபவம்!
ஓவியங்கள்:  பத்மவாசன்

1973 ம் வருடம் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அருகில் உள்ள நூலகத்துக்குச் செல்வேன். அங்குள்ள "பொன்னியின் செல்வன் "புத்தகம் என் கவனத்தை ஈர்த்ததால், எடுத்துப் படித்தேன். மிகவும் தடிமனான புத்தகம். சரி.. கொஞ்சப் பக்கங்கள் படித்துப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். ஆஹா!! புத்தகத்தைக் கீழே வைக்கவே மனம் இல்லை. நேரம் போவது தெரியாமல் படித்த பிறகு, மறுநாள் வந்தும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலில்.. புத்தகத்தை மற்ற புத்தகங்களுக்கு இடையில் மறைத்து வைத்து விட்டு வருவேன். அந்த நூலகரும் என் ஆவலைப் பார்த்து, அந்தப் புத்தகத்தை எனக்காக தனியே எடுத்து வைத்து, நான் வந்ததும் என்னிடம் கொடுப்பார். ஐந்து பாகங்களையும் படித்து முடிக்க எனக்கு எட்டு, ஒன்பது மாதங்கள் ஆயிற்று. இன்னமும் என் நினைவில் பசு மரத்தாணி போல்… அந்தக் கதை பதிந்துள்ளது.

அந்தக் கதையின் கதாநாயகியருள் ஒருத்தியான பூங்குழலி தான் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். அவள் தியாகவிடங்க கரையரின் புதல்வி. படகு செலுத்துவதில் திறமைசாலி. தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை, மீனின் வால் கொண்டு தாக்கிக் கொன்றவள். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு மாபெரும் சேவை செய்தவள். நந்தினி மற்றும் மதுராந்தகனின் தாய்மாமன் மகள். சேந்தன் அமுதனின் உண்மைக் காதலைப் புரிந்து கொண்டு, அவன் கரம் பற்றியவள். இவள் பாடும் "அலைகடலும் ஓய்ந்திருக்க… எனத் தொடங்கும் கீதம், என்றும் என்னால் மறக்கவே முடியாது.

என்னுடைய தோழியின் பெயர் நந்தினி. பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு,அவள் பிறந்ததால், அவள் அப்பா நந்தினி என்று பெயர் வைத்ததாகக் கூறுவாள். இப்படி கல்கி அவர்கள் எழுதி "பொன்னியின் செல்வன் " என் மனதுக்குப் பிடித்த அருமையான நாவல் என்றே சொல்லுவேன்.
-ஜெயா சம்பத், சென்னை

****************************

பொன்னியின் செல்வன் பொன்னான அனுபவங்கள்

1970 காலக்கட்டத்தில் கல்கியில் பொன்னியின் செல்வர்  மீண்டுமொரு முறை பவனி வருகையில் ஏறத்தாழ 12 வயதினை எட்டியிருந்த எனக்கு அவ்வளவாக கதைகளை முழுவதுமாக  படித்துணருமளவிற்கு அறிவு முதிர்வில்லை! எனது அக்காவிடம் கதையை படித்து விளக்கி சொல்லுமாறு கேட்பேன். அக்கா கதையை விவரிக்க விவரிக்க என்னை வந்தியத் தேவனாகவே பாவித்து கற்பனையில் வெகுவாக பயணிப்பேன். பிற்பாடு பாகம் -2 ல்  இலங்கையில்  அருள்மொழிவர்மரையொட்டி நடக்கும் வீர சாகசங்கள்  மனதிலே  உள்வாங்கி பலமுறை அவருடனே ஒன்றிப் போய் இருக்கின்றேன்.

நந்தினி கதாபாத்திரம் ஆதித்தவர்மருடனான உறவெல்லாம் அப்போது சரிவர தெரியாது! ஆயினும் இறுதியில் இருவரின் கதாபாத்திரங்களின் சோக முடிவிற்காக அக்கா சொல்லக்கேட்டு  அழுதிருக்கின்றேன்!

வயது வந்த பிறகு பொன்னியின் செல்வரை பலமுறை படித்திருப்பேன்! சுவாரஸ்யம் என்றுமே குறைந்ததில்லை! எனது பொக்கிஷத்தில் பொன்னியின் செல்வருக்கு மட்டும்  எப்போதுமே லாக்கரில் தனியிடமே உண்டு! யாராவது இரவல் கேட்டால் கொடுப்பதில்லை! ஆசிரியர் கல்கி அவர்களின் உயிரோட்டமான கதையையும், மணியம் செல்வன் அவர்களின் பொற்சித்திரங்களையும் பிறருடைய கைகளினால் மாசுபடுத்த விரும்புவதில்லை!

ஆண்டுக்கொரு முறையாவது பொ.செ. முழுவதுமாக படித்து வருகின்றேன். தற்பொழுது வயது 65யை கடந்திடினும் நினைவுகள் கதைக்களம் நடக்கும் தஞ்சை,பழையறை,இலங்கையை சுற்றியே சென்று வருகிறது!

இருப்பினும் கல்கி அவர்களின் கதைக்கரு, நடை, வர்ணணை இன்றும் கூட என்னை இளம்பிராயத்திற்கே இழுத்துச் செல்கின்றது! அதுதான் பொன்னியின் செல்வரின் காந்த சக்தியென்பேன்! அந்த ஈர்ப்பு சக்தியே என்னை வாழ்நாளில் இறுதிமூச்சுவரை தொடர்ந்து கொண்டு செல்லட்டும்!
-ஆர். சங்கரன், நெல்லை

****************************

எத்தனை தடவை படித்தேன் என்பது தெரியாது.

1950ல் ‌கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்தபோது எனக்கு ஏழு வயது. என் அப்பா ஆந்திராவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நான் பள்ளியிலிருந்து வரும் வழியில் தபால் நிலையம் இருந்தது. வியாழனன்று வரும் கல்கியை நான் அங்கிருந்து பெற்று வருவேன். என் அப்பா என் வரவிற்காக ஆவலுடன் காத்திருப்பார். அவரைச் சுற்றி என் பாட்டி அம்மா அக்கா உட்கார்ந்திருப்பார்கள். நான் கல்கியைக் ‌கொடுத்ததும் அப்பா பொ.செ. படிக்க ஆரம்பித்துவிடுவார். ஆவலுடன் இவர்கள் செவிமடுப்பர். படித்து முடித்தவுடன் தொடர் பற்றியும் அடுத்த வாரம் எப்படி போகும் என்றும் விவாதிப்பார்கள். படிக்கப் படிக்க அந்த தொடர் மீது ஒருவெறியே வந்து விட திரும்பத் திரும்ப படிக்க ஆரம்பித்தேன் எத்தனை தடவை படித்தேன் என்பது தெரியாது.

பின்னாளில் கதை எழுத தொடங்கிய போது இந்த தொடரின் நாயகியான குந்தவையை புனைப்பெயராக்கிக் கொண்டேன்  பின்னாளில் குந்தவை 304 என்றே ஈமெயில் ஐடியாகவும் வைத்துகொண்டேன்!
-ராஜலக்ஷ்மி கெளரிசங்கர், சென்னை

****************************

நினைவலைகள்!

ந்தியதேவனும், இளவரசரும் கடல் அலையில் சிக்கியதை  படிக்கும் போது, இல்லை… இல்லை. பார்க்கும் போது (படம் அத்தனை தத்ரூபம்) எங்கள் பாட்டியின் வாழக்கையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் அம்மாவும், அப்பா பாட்டியும் திருச்செந்தூர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனராம் அப்பொழுது எதிர்பாரா வன்னம் ஒரு அலை வந்து பாட்டியை சுருட்டி இழுக்க. அம்மா சட்டென்று பாட்டியின் முடியை தன் பலம் கொண்டு மட்டும் இழுத்து விட்டாராம். பாட்டிக்கு மட்டும் முடி நீளமாக இல்லாதிருந்தால் அவரது ஆயுள் குட்டையாயிருக்கும். அன்றே முடிந்திருக்கும்.

ஒரு பிறந்த நாளுக்கு என்னவர் எனக்கு "பொன்னியின் செல்வன்" ஐந்து பாகமும் ஒன்றாய் இணைந்த புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்ததைப் பெருமையாக நினைக்கிறேன்.
-ஜானகி பரந்தாமன், கோவை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com