என் பெயர் வானதி!

என் பெயர் வானதி!
ஓவியம்: பத்மவாசன்

ன் பெயர் வானதி, வயது 32. எங்க ஊர் திருவள்ளுர் அருகில் உள்ள திருவூர். பொன்னியின் செல்வன் நாவலை நான் 6 முறை படித்து இருக்கிறேன். எனது அம்மாவின் தாத்தா திரு நாராயண ரெட்டியார் அவர்கள்தான்  முதலில் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தார். அவர் முதல் என் வீட்டில் உள்ள அனைத்து நபர்களும் படித்து உள்ளனர். நானே 6 முறை படித்திருக்கிறேன் என்றால் மற்றவர்கள் எவ்வளவு  முறை படித்து  இருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை… எனது தாத்தா இந்த நாவல் மேல் உள்ள ஈர்ப்பால் அவரின் மகனுக்கு அருள்மொழி என்று பெயர் வைத்து உள்ளார். அவரின் மகள் வழி பெயர்த்தியான எனது சித்திக்கு நந்தினி என்ற பெயரும், அவர் மகள் வழி கொள்ளுபெயர்த்தியான எனக்கு வானதி என்ற பெயரும் வைத்துள்ளார். எங்கள் வீட்டில் எனது பெரியப்பா மகன் திரு. ராஜ்குமார் அவர்கள் கல்கியின் 'பொன்னியின் செல்வன் முதன் முதலில்
வாரா வாரம் வெளியிட்ட பகுதிகளை அத்தியாயம் அத்தியாயமாக சேமித்து அதனை பைண்டிங் செய்து வைத்து உள்ளார். அவர் அந்த நாவலின் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

அது எப்படி என்றால் எங்கள் உறவினர்களுக்குள் சிறு மனஸ்தாபம் வந்தபோது பேசாமல் இருந்தார்கள். அன்று ஒரு நாள் 'பொன்னியின் செல்வன்' நாவலை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தோம்…எங்க அண்ணன் அன்று வெளியில் உட்கார்ந்து இருந்தார். இங்க விவாதித்துக் கொண்டு இருந்தது அவர் காதில் விழ, கொஞ்ச நாள்  பேசாமல் இருக்கிறோம் என்பதையும் மறந்து எங்களுடன் உரையாட வந்து விட்டார். நாங்களும் பேச்சு ஆர்வத்தில் மறந்து விட்டோம். பேச்சு முடிந்த பின்புதான் ஞாபகம் வந்தது நாங்கள் மனஸ்தாபத்தில் இருந்தது. அதன்பின் எங்கள் மனஸ்தாபம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. 'பொன்னியின் செல்வன்' நாவலை பற்றி பேச்சு எங்கே வந்தாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தெரியாத  ஆட்களிடம்கூட பேச ஆரம்பித்து விடுவோம்.  அதில் ஒரு மற்றற்ற மகிழ்ச்சியுடன் சிரிப்பும் வந்துவிடும்.  அந்த பெரிய சைஸ் புத்தகம் வைத்து ரயிலில் போகும்போதும் வரும்போதும் படிக்கும்போது யாராவது என்ன படிக்கிறீங்கனு கேட்கும்போது வரும் பெருமையும் அதை விளக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் இன்று குறைந்து விட்டாலும் பலரும் இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எங்கள் வீட்டில் 10th பப்ளிக் எக்ஸாம் முடிந்தபிறகுதான் 'பொன்னியின் செல்வன்' நாவலை படிக்க விடுவார்கள். அதில் கண்டிப்புடன் நடந்துகொள்வார்கள். பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்தால் படிப்பில் ஆர்வம் போய் விடும் என்ற  நம்பிகை அவர்களுக்கு.  நானும் 10வது தேர்வு லீவில்தான் முதலில் படித்தேன். எங்க குடும்பத்தில் உள்ள சிறியவர்கள், வீட்டில் பெரியவர்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்டுக் கொள்வோம். அந்த ஆவலே 10வது தேர்வு முடிந்த அடுத்த நாளே படிக்க தூண்டிவிடும். எங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் 'பொன்னியின் செல்வன்' புத்தகம் இருக்கும்.

இப்பொழுது நீங்கள் வெளியிட்ட 'தினம் ஒரு கேள்வி'யில் நானும் எனைத் தொடர்ந்து எனது அக்காவும் வெற்றி பெற்றதை குடும்பமே கொண்டாடி மகிழ்ந்தனர். ஏன்னா 'பொன்னியன் செல்வன்' நாவலில் உள்ள ஆர்வம் அத்தகையது.

இப்படிக்கு

பொன்னியின் செல்வன் விசிறிகளான
டி.சி. நாராயண ரெட்டியார் குடும்பத்தினர்
திருவாரூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com