0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வன் பாதையில்…

சென்ற வாரத் தொடர்ச்சி…
-சுசீலா மாணிக்கம்
திருவலஞ்சுழி

வெள்ளை விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பிரஹர் நாயகி ஸமேத
ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில். ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’- திருஞான சம்பந்த பெருமான் போற்றி பாடப்பெற்ற ஸ்தலம்.

இத்தலத்திற்கு வருவதற்கும் இத்தலத்து ஈசனை தரிசிப்பதற்கும் எண்ணற்ற புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதும் சம்பந்த பெருமானின் திருவாக்கு.

நன்றிகள்… எங்களுக்கும் அப்புண்ணியத்தை பெற்றுக் கொள்ள வழி தந்தமைக்கு. மனம் முழுவதும் நன்றிப் பெருக்கால் பொங்கி வழிகிறது. கல்கி அவர்களையும் கல்கி குழுமத்தையும் ஷணத்துக்கு ஷணம் நன்றியுடன் ஆன மனநிறைவை வெளிப்படுத்தும் சொற்களாகவே செயல்களாகவே இதயம் விரும்புகிறது. நன்றிகள்…

தஞ்சை பெருவுடையார் கோயில்

டுத்ததாய் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெருவுடையார்) கோயில். நம் நாட்டின் பெருமைகளுள் ஒன்று. நாங்கள் சென்றது ஒரு பிரதோஷ தினம். அன்று சிவன் கோயிலின் உள் பிரவேசிப்பதே பாக்கியம் அல்லவா?

வந்தியத்தேவனுக்கு எப்படி தஞ்சைக்குள் நுழைந்தபோது உள்ளம் பூரித்து பொங்கியதோ, காரணம் தெரியாத கர்வம் நிறைந்ததோ அதேபோல எங்கள் மனங்களும்.

குந்தவை, நந்தினி எனும் இரு நிலவுகள் மோதிக் கொண்ட அதே தஞ்சை.

தஞ்சாவூர் கோட்டை வாசல் இல்லை. வாசலில் வேல் தாங்கிய காவல் இல்லை. எனவே வேளக்கார படையுடன் கலந்து ஒளிந்து செல்ல வேண்டியிருக்கவில்லை. சிரித்தபடி சந்தோஷமாய் கோயிலின் உள் நடந்தோம். பசும்புல் தரையின் குளிர்ச்சியை உள்ளங்கால்களில் உணர்ந்தபடி.

உயர்ந்த நந்திதேவனை பார்த்தபடி அரை மணி நேரம். கோயில் கோபுரத்தின் பிரமாண்டத்தையும், கம்பீரத்தையும் வியந்தபடி அரை மணி நேரம்.

‘ஆ’- வென்று ஆனந்தமாய் மனம் முழுவதும் மகிழ்ச்சியையும், அமைதியையுமே நிரப்பிக்கொண்டு கோயிலின் விஸ்தார அழகையும் கோபுர கம்பீரத்தையும் ரசித்தபடி நாங்கள்…

திருவையாறு

திருவையாறு. வந்தியத்தேவனின் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் எங்கள் மனதிலும். அன்று அவர் நேரில் அனைத்தும் பார்த்தார். நாங்கள் எங்கள் மனக்கண்களில் இந்த வரிகளை ஓடவிட்டுக் கொண்டோம்.

“ஆகா… சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதைக் காட்டிலும் சிறந்த ரசிகர்! அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே! இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போக வேண்டும்!”

கோயில் வாயிலைக் கடந்து உள்ளே வந்தால் ஒரு பெரிய வெளி பிராகாரம். பிராகாரத்தின் தென்மூலையில் சூரிய தீர்த்தம். அதன் மேல்புறம் அப்பர் கண்ட கயிலை காட்சியின் ஞாபகமாக ஒரு கோயில். அதுவே தட்சின கைலாயம். இதைக் கட்டியவர் இராஜராஜ சோழன் மனைவியார் பஞ்சவன் மாதேவி. இதையடுத்து அப்பர் எழுந்த சமுத்திர தீர்த்த குளம் உள்ளது. தென் கைலாயத்தை உருவாக்கியவர்கள் ஓர் உத்திர கைலாயத்தையும் கட்டி முடிக்க மறக்கவில்லை. அது வடக்கு பிராகாரத்தில் உள்ளது.

நந்தியம் பெருமான் அவதார திருத்தலம். அப்பருக்கு கயிலை காட்சி தந்த ஸ்தலம். நால்வரால் பாடப்பட்ட திருத்தலம்.

இசையால் இறையைக் கண்ட தியாகராஜ பெருமான் வசித்து முக்தி பெற்ற ஸ்தலம்.

திருமழப்பாடி:

டுத்ததாய் நாம் சென்றது அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில். திருமழப்பாடி.

மாலை நேரச் சூரியனும், கொள்ளிடத்தின் விஸ்தாரமும், தென்றல் காற்றும் மனதை கொள்ளை கொண்டன.

ஐயாரப்பர் அறம் வளர்த்த நாயகி உடனிருக்க நந்தியெம் பெருமானுக்கு திருமணம் செய்வித்த ஸ்தலம்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளை இறைவன் ஆட்கொண்டு அருள் செய்த திருத்தலம்.

கீழப்பழுவூர்

கீழப்பழுவூர். பழுவேட்டரையர்களின் கோட்டை. பழுவேட்டரையர்கள் பற்றி நமது கல்கி அவர்கள் இந் நாவலில் கூறுவார்.

“ஆஹா. சோழ சாம்ராஜ்யத்துக்கும் இவர்களுக்கும் உண்டான உறவுதான் எத்தகையது.

முத்தரையர் வசம் இருந்த தஞ்சை கோட்டைக்குள் முதலில் பிரவேசித்தது – ஒரு பழவேட்டரையர்.

திருப்புறம்பயம் போர்களத்தில் இரு காலும் இழந்த விஜயாலய சோழனின் அதிபராக்கிரம செயல்களுக்கு தோள் கொடுத்து தூக்கிச் சென்றது – ஒரு பழுவேட்டரையர்.

‘ராஷ்டிய படைகள் தோற்று ஓடுகின்றன’ என்ற செய்தியை, காயம்பட்ட இராஜாதித்யனை தேடி மடிமேல் போட்டுக் கொண்டு சொன்னது – ஒரு பழுவேட்டரையர்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்துள்ளதாம். வர்ணங்கள்கூட வாசம் மாறாமல் இருந்தாற்போல் உணர்ந்தோம்.

இங்குள்ள அம்மன் சன்னிதியின் கோபுரம் ஒரே கல்லால் ஆனது என்பது தனிச்சிறப்பு.

இங்கு இன்னோர் மகிழ்ச்சியை உணர்ந்தோம். அது ஓவியர் வேதா sir தொடர்புடையது.

கீழப்பழுவூர் கோயிலை வழிகாட்டி கூட்டிச் சென்றனர் சில இளைஞர்கள். மிக உற்சாகமாய்.

உள்ளே நம் வேதா sir. பொன்னியின் செல்வனுக்காய் கல்கி இதழில் வரைந்த பெரிய பழுவேட்டரையர் படத்தை மிகப் பெரிதாய் screen print செய்து வைத்திருந்தார்கள்.

இப்படத்தை வரைந்தது இவர்தான். வேதா sir என நாங்கள் கூறவும் அங்கிருந்தவர்களின் முகம் மலர்ந்து விரிந்ததைப் பார்க்க வேண்டுமே. தங்கள் கனவு நாயகனை நேரில் கண்டுவிட்ட களிப்பு – திடீர் சந்தோஷ அதிர்ச்சி தந்த திகைப்பு – இப்படியோர் VVIP-யை நாம் நேரில் சந்தித்துவிட்டோமா என்ற பரபரப்பு… என பல்வேறு உணர்வுகள் அவர்களுக்கு.

தான் வரைந்த ஓவியத்துடன் ஓவியர் வேதா

வேதா sir வரைந்த பழுவேட்டரையர் படத்தின் அருகிலேயே அவரை நிற்க வைத்து அருகருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் மகிழ்வதுமாய்…

தேநீர் அருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அன்புக்கட்டளை வேறு.

ஓட்டுனர் கார்த்திக் தம்பி வேதா sir- யை அங்கு வீற்றிருந்த நந்தியெம் பெருமானை வரைந்து தருமாறு பணிக்க –

வேதா sir-ன் விரல்களில் மீண்டுமாய் கலைத்தாயின் ஆளுமை. ஒர rubber கூட கைகளில் இல்லை. ஒரு paper ஒரு pencil மட்டுமே.
3 நிமிடங்களில் வைத்திருந்த தாளில் நந்தியின் திருவுருவம்.

கோடியக்கரை

கோடியக்கரை சரணாலயம் வாசல் நோக்கி நமது வாகனம் செல்லத் துவங்க, சாலையின் இருபுறங்களும் வெண்ணிற பற்கள் காட்டி சிரித்து நமை வரவேற்பது போன்ற உப்பளங்கள்.

வன உயிரினச் சரணாலயம். கோடியக்கரை. வந்தாகிவிட்டது. கோடியக்கரை கடற்கரை செல்லும் பாதையில் சென்றோம். கண்கள் அகல அகல பார்த்தோம். இரு விழிகளுக்குள் சிறை பிடித்துக் கொள்ள இயலாத பெரும் மணற்பரப்பு. ஆங்காங்கே புதர்கள். அந்த புதர்களின் பின்னால் மான்கள். அந்த மான்களின் மேல் எங்கள் கண்கள்.

நேரே கோடியக்கரை கடற்கரை. மனசு பரபரக்கிறது. கால்கள் துவள்கின்றன. முதலில் நம் சமுத்திரக் குமாரியின் கலங்கரை விளக்கம் காண ஒடினோம்.

சரித்திரத்தின் மிச்சமாய்– கால ஓட்டத்தின் மச்சமாய் – ஆனால் நம் மனக்கோட்டையில் உச்சமாய்… அந்த கலங்கரை விளக்கம் ஓர் 4,5 அடி செங்கல் சுவராய் மீந்திருக்கிறது.

அப்படியே அந்த கலங்கரை விளக்கம் மேல் தலை சாய்த்து அமர, மீதமிருக்கும் அந்த குட்டி சரித்திர சுவரை கட்டி அணைத்துக்கொண்டு மனதின் ஆழத்தில் பூங்குழலியின் இதயத்துள் கலக்க மனம் தவிக்கிறது.

கோடியக்கரை குழகர் கூடவே இருந்து விட வேண்டும் என அடம்பிடிக்கும் மனது–

பூங்குழலி இங்கு நடந்திருப்பாளோ? அங்கு துள்ளி ஓடி இருப்பாளோ? பொன்னியின் செல்வனை எதிர்பார்த்து இங்குதான் அமர்ந்திருப்பாளோ? – என கடற்கரை எங்கும் ஓடிவிட துடிக்கும் கால்கள்–

இளம் வெயிலும் கடற் காற்றுமாய் ’அலை கடலும் ஓய்ந்திருக்க’ பாடல் எங்கோ கேட்கிறதோ…?

கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி, செல்லும் இடமெல்லாம் பூங்குழலியை நினைத்தபடி –

கடற்கரையில் நின்றிருந்த கட்டு மரங்களை பார்த்தபடி –
திரும்ப மனமில்லாமல் நின்றிருந்தோம். திரும்பி விட வேண்டும் என்ற நியதிப்படி திரும்பினோம். மீண்டுமாய் சிற்றுந்துக்கு.

சென்றோம் கோடியக்கரை குழகர் வசம். ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டு சென்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று அந்த இறைமை கோடிக்கரை அமுத கடேஸ்வரர் அருட்பார்வை வரம் பெற்றதில் மகிழ்ந்தோம்.

கோயிலினுள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டோம்.

“அங்க பாருங்க. அந்த சுற்றுச் சுவர் மீதமர்ந்துதான் பூங்குழலி குழகர் கோயில் பட்டர் தந்த தேங்காய் பிரசாதத்தை சாப்பிடிருப்பாள்.”

“அப்ப கோயில் வேறு மாதிரி இருந்திருக்கும். இப்பவே இப்படி இருக்கேப்பா. அப்ப எப்படி இருந்திருக்கும்.”

– எங்களுக்குள் கலகலப்பான உரையாடல். குழகர் கோயிலிலேயே வெகுநேரம் அமர்ந்திருந்தோம்.

நிஜமாகவே அலைகடல் ஓய்ந்திருக்கிறது. எங்கள் அகக் கடலோ பொங்குகிறது. மீண்டும் இங்கு வர வேண்டும். வார்த்தைகளில் விளக்க இயலா இவ்வுணர்வை, மனநிறைவை மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என இறைமையை பிரார்த்தித்தபடியே திரும்பினோம்.

மனம் முழுவதும் மனநிறைவு

பொன்னியின் செல்வன் பாதையில் பயணித்த நாங்கள் எத்தனை எத்தனை அனுபவங்களையும், உணர்வுகளையும் பெற்றோம் தெரியுமா?

அன்பு – காதல் – அந்த பக்தி – மகிழ்ச்சி – ஆனந்தம் – பாசம் – நேசம் – விசேஷித்த தன்மை – நேர்மை – புகழ்ச்சி – தயாளம் – முக்கியத்துவம் – நம்பிக்கை – உன்னதம் – உண்மை – அமைதி – வந்தனம் – சாந்தி – தெய்வத்துவம் – கம்பீரம் – மங்கலம் – மரியாதை – புனிதம் – ஆன்மிகம் ஆசிகள் – நற்பண்புகள் – அர்ப்பணம் – ப்ரியம் – அடக்கம் – எளிமை – மாட்சிமை – உற்சாகம் – உயர்வு – ஜெயம் – களங்கமில்லா தன்மை – தரும சிந்தனை – சமர்ப்பணம்.

இப்படி இப்படி மனம் முழுவதும் மனநிறைவு.

ன்னும்… திகட்டத் திகட்ட கும்பகோணம் டிகிரி காபி –விரும்பிய உணவு வகைகள் – குளிர்சாதன சிற்றுந்து மற்றும் தங்கும் suits –  பொறுப்புக்களில்லா பயண அனுபவம். ராஜ உபசாரம் பெற்று மகிழ்ந்த தருணங்கள். வாசகர்கள் என்பதால் கல்கியிலும், கல்கி என்பதால் ஆலயங்களிலும்…

மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட நாட்கள் – இறைமையின் ஆளுமையை, ஆசிகளை உணர்ந்த ஷணங்கள்…

பொன்னியின் செல்வன் பயணக்குழுவினர்

மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பயணம் எங்களுக்கெல்லாம் கிடைத்த ஒரு நிறைவான வரம்.

பொன்னார் மேனியனே!

புலித்தோலை அரைக்கசைத்து

பின்னார் செஞ்சடை மேல்

மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே

மழப்பாடியுள் மாணிக்கமே!

என்னே உன்னையல்லால்

இனி யாரை நினைக்கேனே?

நன்றிகளுடனும், பிரார்த்தனைகளுடனும் நிறைவு செய்கிறேன்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

என் பெயர் வானதி!

0
ஓவியம்: பத்மவாசன் என் பெயர் வானதி, வயது 32. எங்க ஊர் திருவள்ளுர் அருகில் உள்ள திருவூர். பொன்னியின் செல்வன் நாவலை நான் 6 முறை படித்து இருக்கிறேன். எனது அம்மாவின் தாத்தா திரு...

பொன்னியின் செல்வன் நாவலில் கவர்ந்த கதாபாத்திரம்…

0
-சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஆழ்ந்து ரசித்துப் படித்தவர் களுக்கு மிகவும் சிக்கலான பணி,  இந்நாவலில் எந்தக் கதாபாத்திரம் சிறந்தது என்று தீர்ப்பு சொல்வது. காரணம் இதில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு...

பொன்னியின் செல்வன் வாசகர் பங்களிப்பு! 

0
-திருமாளம் எஸ். பழனிவேல் வீராணம் ஏரி! பொன்னியின் செல்வன் கதை ஆடிப்பெருக்கு  அன்று  'வீரநாராயண ஏரி' அருகே ஆரம்பமாகும். வடவாற்றின் வழியாக  தண்ணீர் வந்து அந்த ஏரியை பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது என்று கல்கி அவர்கள் எழுதியிருப்பார். அந்த ஏரியின்...

பொன்னியின் செல்வன்!

0
ஓவியம்: பத்மவாசன் - சௌமியா சுப்ரமணியன் பொன்னியின் செல்வன் கதையை வாசிக்க ஆரம்பித்த உடனேயே  வல்லவராயன் வந்தியத்தேவனின் குதிரை களைத்துப் போய் மெதுவாக நடக்க ஆரம்பித்த  அதே நேரம் என்னுடைய கற்பனை குதிரை வேகமாக ஓட...

நான்கு தலைமுறை நாவல் வாசிப்பு!

0
-காமகோடி வீழிநாதன் தமிழ் இலக்கியத்தில் தொடர் நாவல்களுக்கு இலக்கணம் வகுத்தவர் அமரர் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் எழுதிய தியாக பூமி, அலை ஓசை ஆகிய இரு நாவல்களையும் வாரம் தோறும் படிக்கமல் காலம் சென்ற...