0,00 INR

No products in the cart.

பொன்னியின் செல்வன் ஒரு மின்னல் வேக விமானம்!

-துடுப்பதி ரகுநாதன்

ஓவியம்: பத்மவாசன்

பொன்னியின் செல்வன் ஒரு புத்தகமல்ல! அது ராக்கெட் போன்றதொரு மின்னல் வேக விமானம்! அதில்  ஏறினால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த  ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்திற்கு  நம்மை அழைத்துப் போய்விடும்!

யார் ஒருவர்  பொன்னியின் செல்வன் என்ற நாவலை பிரிக்கிறார்களோ, அது, அவர்களை உடனே ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்திற்கு கொண்டு போய் விட்டு விடும். அவர்கள் சோழ நாட்டை சுற்றிப் பார்த்துவிட்டுத்  திரும்ப ஒரு மாதமாவது ஆகும்!

அப்படிபட்ட விமானத்தில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்!என் அனுபவமும் சரி, எனக்கு தெரிந்த பலருடைய அனுபவங்களும் சரி அப்படித்தான் இருக்கிறது!

எனக்கு 82 வயசாகிவிட்டது. என் படுக்கைக்கு அருகில்  திறந்த செல்ப் ஒன்று  இருக்கிறது. அதில் சுமார் இருநூறு புத்தகங்கள். நான் கை நீட்டி எடுத்து படிக்க வசதியாக எப்பொழுதும் அடுக்கி வைத்திருப்பேன். அதில் பொன்னியின் செல்வன் முதல் இடத்தில் இருக்கும்!

பேரன் பேத்தி  எடுத்த  எனக்கு தாங்க முடியாத பல சோதனைகள்  என் வாழ்நாளில் வந்து போயிருக்கின்றன. 

சோதனையான காலக் கட்டம் வரும்  பொழுது,  என் நண்பர்கள் பலர் கோயில் குளம்  என்று மனசை அமைதிபடுத்த போய் வருவார்கள். வசதி படைத்த நண்பர்கள் வெளிநாடு  கூட போய் வருவதுண்டு!

அது போன்ற சமயங்களில் நானும் ஒரு மாத சுற்றுப் பயணத்தை தொடங்குவேன். மற்ற எவருக்கும் இல்லாத வசதி எனக்கு உண்டு!

நான்  கிட்டத்தட்ட ஒரு படைப்பு கடவுள் மாதிரி! ராஜ ராஜசோழன் காலத்தில் தமிழ்நாடு, இலங்கை தீவு  எல்லாம் எப்படி வளமாக இருந்தது,  என்று நினைத்து பார்த்தவுடன்  அப்படியே  அந்தக் காலக் கட்டத்திற்கு போய்  விடுவேன்!

காரணம் என் கைகளில் பொன்னின் செல்வன் என்ற நாவல் இருப்பதுதான் அதை எடுத்துப் பிரித்தவுடன் அதுவே அந்த வேலையை செய்து விடும்!  

புத்தகத்தைப் பிரித்தவுடன்  நான்  வீரநாராயண ஏரிக்கரையில் நிற்பேன். என் வருகைக்காக  வீர நாராயணபுரி ஏரிக்கரையில் ஒரு குதிரையோடு  வந்தியதேவன்  காத்திருப்பார் . நான் உடனே அவரோடு சேர்ந்து ஒரு மாதம் சோழ நாடு, இலங்கை எல்லாம் சுற்றுப் பயணம் போய் பசுமையான சூழலில் பல நல்ல மனிதர்கள், வீரர்கள் நேர்மையானவர்களை எல்லாம் சந்தித்து சந்தோஷமாக இருந்து விட்டு,  புத்துணர்ச்சியோடு  வீடு திரும்பி வருவேன்.

என் வீட்டில் என்னைப் பார்ப்பவர்கள் கூட நான் ஏதோ புத்தகம் படிப்பதாகத்தான் நினைத்து கொண்டிருப்பார்கள்.  நான் வந்திய தேவனோடு இன்னொரு குதிரையில் கம்பீரமாக சோழ நாட்டில் சுற்று பயணத்தில் ஈடுபட்டிருப்பது  அவர்களின் ஊனக் கண்களுக்குத் தெரியாது!

பொன்னியின் செல்வன் நாவலை படித்த பல நண்பர்கள் அனுப வங்களும்  இது போல்  இருப்பதாகத்தான் என்னிடம் சொல்லியி ருக்கிறார்கள்! அவர்களும் நாவல் முடியும் வரை சோழ நாட்டு  சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருப்பதாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள்!  யாரும்  பொழுது போக்குக்காக ஒரு  நாவலைப் படித்ததாக என்னிடம் இதுவரை சொல்லவில்லை!

 சுமார் 72 வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டிற்கு மட்டும்தான் கல்கி பத்திரிகை வரும். 1950ல்  நான் ஐந்தாவது படிக்கும் பொழுதுதான் முதல்முதலாக பொன்னியின் செல்வன் தொடர்கதை கல்கியில் தொடங்கியது,

என் மனம் சோர்ந்த காலத்தில் என்னை புதுபித்துக் கொள்ள ஏழு எட்டு முறையாவது பொன்னியின் செல்வன் படித்திருப்பேன்.

என்னதான் நான் பொன்னியின் செல்வனை விரும்பி படித்திருந்தாலும் அதன் ஆசிரியர் மேல் எனக்கு  ஒரு அசாத்திய கோபம் உண்டு!

இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் கல்கி எழுதிய  அந்த நாவலில் குந்தவையும், வந்திய தேவனும் தனிமையில் சந்திப்பது நான்கு ஐந்து முறைகள்தான் இருக்கும்! குடந்தை சோதிடர் வீடு ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் அவர்கள் தனிமையில் சந்தித்துப் பேச ஒரு பத்து பக்கங்களைக் கூட கல்கி ஒதுக்கவில்லை. உடனே வந்தியதேவனை குந்தவையிடமிருந்து பிரித்து ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து வெகு தூரத்திற்கு அனுப்பி விடுவார். என் உள்ளம் கொதிக்கும்! அப்பொழுது எனக்கு  வரும் கோபத்திற்கு கல்கி  மட்டும்  என் கைகளில் சிக்கியிருந்தால் நான் சிறுவர் சிறைச்சாலைக்குப்  போயிருப்பேன்! கொஞ்ச நேரம் வந்தியதேவனும், குந்தவையும்  ஆசைத் தீரப் பார்த்துப் பேசிக்  கொள்ளக் கூடாதா?… எத்தனை போராட்டங்கள்,  எத்தனை எதிர்ப்புகள், எத்தனைத்  தூரப் பயணம், எத்தனை நாள் காத்திருப்பு எல்லாவற்றையும் கடந்து குந்தவையும் வந்திய தேவனும் சந்திப்பத்தே  மிக மிக அபூர்வம்! 

அப்படிபட்ட சந்திப்பு நிகழும் பொழுது அவர்கள் ஆசை தீர பார்த்துக் கொள்ள வேண்டும்…பேச வேண்டும் என்று அதிகமாக துடித்துப் போவது வந்திய தேவனை விட, நான்தான்!  

மற்ற சரித்திர நாவலாசிரியர்களுக்கும் கல்கிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு!

கல்கி அவர்களின் சரித்திர நாவல்களில் தோன்றும் எல்லா கதா பாத்திரங்களும் அந்த அந்த காலத்தில் உண்மையாக வாழ்ந்தவர்கள்! அவர்கள் வாழ்ந்த காலத்தில் எந்த மாதிரி குண நலன்களோடு  அவர்கள் வாழ்ந்தார்களோ அதை எல்லாம் அப்படியே சற்றும் மாற்றாமல்  தன் நாவல்களில் கொண்டு வந்திருப்பார் கல்கி!

பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை ஒரு முறை கூட படிக்காத தமிழ் வாசகர்கள் இருந்தால்,  அவர்கள் ஒரு வகையில் ஊனப் பிறவிகள் என்றே நான் கருதுகிறேன்!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அனைத்திற்குமான பிள்ளையார்சுழி – கல்கியும் பொன்னியின் செல்வனும்!!!

0
- ஹரிணீ முருகன், தேனி. கல்கி அவர்களின் எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு 1997ல் இருந்து ஆரம்பித்தது. கோகுலம் படித்துக் களித்துக் கொண்டிருந்த எனக்கு முதலில் அறிமுகமானது, இரண்டு தலைமுறைகளாக கல்கி வாசகர்களாக இருந்த என்...

பொன்னியின் செல்வன்…

0
ஓவியம்: பத்மவாசன் அன்புள்ள ஆசிரியருக்கு,  வணக்கம். நலம். நலம் நாட ஆவல். பொன்னியின் செல்வன் நாவலைப் பல முறை ரசித்துப்படித்து மகிழ்ந்த பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி என பெருமையோடு கூறிக்கொள்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை...

பொன்னியின் செல்வன் பாதையில்…

0
சென்ற வாரத் தொடர்ச்சி... -சுசீலா மாணிக்கம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பிரஹர் நாயகி ஸமேத ஸ்ரீ கபர்தீஸ்வர சுவாமி திருக்கோயில். ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே’- திருஞான சம்பந்த பெருமான் போற்றி பாடப்பெற்ற...

பொன்னியின் செல்வன் பாதையில்…

-சுசீலா மாணிக்கம் அறிமுகம்: நான் முதன்முதலில் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தது என் முதுகலை கல்லூரி காலத்தில். எனது வகுப்புத் தோழன் V. அரவிந்த கேசவன் (இன்று வாழ்க்கைத் துணைவன் (ர்) என்பது தனிக்கதை.), “சுசீலா கண்டிப்பா உன்னோட...

“பொன்னியின் செல்வன் ” உடன் எனது அனுபவங்கள் :-

-பி. லலிதா, திருச்சி. நான் பிறந்தது  நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர். என் பெயர் லலிதா. வயது 67. நான், கல்கி, மங்கையர் மலர் இதழ்களின் நீண்டநாள் வாசகி. என் தந்தை  சுதந்திரா கட்சியில் உறுப்பினராக இருந்தார்....