பொன்னியின் செல்வன் படிப்பதில் கிடைக்கும் அற்புத உணர்வு திரைப்படத்தில் கிடைக்காது.

பொன்னியின் செல்வன் படிப்பதில் கிடைக்கும் அற்புத உணர்வு திரைப்படத்தில் கிடைக்காது.
-விஜயலக்ஷ்மி, மதுரை

சிறு வயதிலிருந்தே கதை படிப்பதில் ஆர்வம் மிகுந்த எனக்கு, பொன்னியின் செல்வனை அறிமுகப்படுத்தியது என் அப்பாதான். தொடராக வந்த போதே, அவர் விடாமல் படித்து, ரசித்து சொல்வதை புரிந்து கொள்ளும் வயது வந்ததும் நானே படிக்க ஆரம்பித்தேன். என் அக்கா பெயர் நந்தினி. வீட்டில் எல்லோரும் விரும்பிப் படிக்கும்  பொன்னியின் செல்வன் ஒருவகையில் எங்கள் குடும்ப உறுப்பினராகவே  ஆகி விட்டது.

முதல் அத்தியாயத்திலேயே வந்தியத்தேவன் நம் மனதில் கடை விரித்து விடுவார். ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் ஒரு டிவிஸ்ட் வைத்து, ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றையொன்று முந்தி வந்தியத் தேவன் குதிரை போல பறக்கும்.  நான் பொன்னியின் செல்வனை வாசித்தேன் என்பதற்கு பதிலாக நான் அதில் வாழ்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையான வரலாற்று சம்பவங்களோடு புனைவைக் கலந்து ,நம்மை காலத்தைக் கடந்து செல்லும் இயந்திரத்தில் ஏற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அழைத்துச் சென்று விட்டார் கல்கி. தமது கற்பனை வளத்தால் நம் பழந்தமிழ் நாட்டு வளம், நம் முன்னோர் சாதித்த அரும்பெரும் செயல்கள் எல்லாவற்றையும் நம் கண்முன்னே நிறுத்தி நம்மை பெருமிதம் கொள்ளச் செய்து விட்டார். சோழநாடு மட்டுமல்ல, இலங்கைத் தீவுக்குள்ளும் நாம் இருக்கும் அனுபவத்தைத் தந்திருக்கும் கல்கி அவர்களின் திறமைக்கு எல்லை ஏது…?

ஒவ்வொரு கதாபாத்திரமும்  அவற்றிற்கான சிறப்பான, குழப்பமில்லா  பாத்திர  வடிவமைப்புகளுடன் நம்மை அசத்தினாலும், என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் நந்தினிதான். தமது கற்பனை பாத்திரமான நந்தினியை இறுதி வரை மர்மப் பெண்ணாகவே படைத்து விட்டார் கல்கி.

டம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலன் மரணத்திற்கு முன் அவர்கள் இருவரும் பேசுவதை எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்…!  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று திகிலும், எதிர்பார்ப்புமாக படித்த கணங்கள்… ஒவ்வொரு தடவையும் இந்த நாவலைப் படிக்கும் போதும் அதே அனுபவம்தான். கடல்  போன்று பரந்த நாவலின் சிறப்பை ஒரு துளியாவது நம்மால் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.

சிறு வயதிலிருந்தே பொன்னியின் செல்வனுடன் பயணித்த எனக்கும், என் சகோதரிகளுக்கும், 2015 ல் கல்கி இதழ் நடத்திய பொன்னியின் செல்வன் மெகா போட்டியில் வெற்றி கிடைத்து, அதன் பரிசாக நான்கு மறக்க முடியாத நாட்கள் சோழ தேசப் பயணம் கிடைத்தது, எங்களுக்கு பொன்னியின் செல்வன் அளித்த பொக்கிஷம்.

பொன்னியின் செல்வன் நாவல் கதாபாத்திரங்களின் கால் பட்ட சோழ மண்டலத்துப் பயணம், காலச் சக்கரத்தில் பின்னோக்கி பத்தாம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று விட்டது.  நாங்கள் தரிசித்த பல கோவில்கள், எங்கள் சரித்திரப் பயணத்தை ஆன்மீகப் பயணமாகவும் ஆக்கி விட்டது.

ல்கியின் உயிரோட்டமான வர்ணனையில் நான் கற்பனை செய்து வைத்திருந்த கோட்டைகள், கொத்தளங்கள், நிலவறைகள், பள்ளிப் படைகள், லதா மண்டபங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் சிதிலமடைந்து உருமாறிப் போயிருந்தாலும், என் கண்களுக்கு மட்டும் சிறப்பாக மிளிர்ந்ததற்கு காரணம் என் கண்களா அல்லது மனமா என்றே தெரியவில்லை. நான்கு நாட்கள் சீக்கிரமே ஓடி விட, நம் கதாபாத்திரங்கள் கால் பட்ட இலங்கைக்கு செல்லும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப் பெட்டகம். எத்தனை கோடி செலவு செய்து இதைத் திரைப்படமாக எடுத்தாலும், படிப்பதில் கிடைக்கும் ஒரு அற்புத உணர்வு நமக்கு கிடைக்காது என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com