பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்!
ஓவியம்: பத்மவாசன்
சௌமியா சுப்ரமணியன்

பொன்னியின் செல்வன் கதையை வாசிக்க ஆரம்பித்த உடனேயே  வல்லவராயன் வந்தியத்தேவனின் குதிரை களைத்துப் போய் மெதுவாக நடக்க ஆரம்பித்த  அதே நேரம் என்னுடைய கற்பனை குதிரை வேகமாக ஓட ஆரம்பித்தது.

தஞ்சாவூரிலிருந்து திருச்சியில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கன்று ஐந்து வகையான உணவுகளையும் தயாரித்துக்கொண்டு நாங்கள் அனைவரும் குடும்பத்துடனும், உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் நண்பர்களுடனும்  சென்று காவிரி அம்மனுக்கு நன்றி கூறி, உணவுகளை நிவேதனம் செய்துவிட்டு  பகிர்ந்துண்டு வாழ்ந்த அந்தக் காலத்தை நினைவு கூறுகிறேன்.

காவிரி வெள்ளத்தின் ஓட்டத்தையும் பரந்து கிடக்கும் மணலையும் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து விளையாடி பிறரையும் மகிழ்வித்து நாங்களும் மகிழ்ந்தோம். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும் பொழுது, அந்த நாட்கள் என்றும் பசுமை மாறா நினைவாகவும், நமது கண்முன் திரை காட்சியாகவும் ஓடுகிறது என்றால் அது மிகையாகாது.

வல்லவரையன் வந்தியத்தேவன் கடம்பூர் மாளிகைக்குள் நுழைந்து அவனையும் அவனது குதிரையையும் காவலர்கள் சூழ பிடிபட்டபோது 'கந்தமாறா கந்தமாறா உன் ஆட்கள் என்னை கொல்கிறார்கள், என்ற அந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் மனதில் அலை மோதியது.

மேலும், குரவைக் கூத்து பாகம் படித்துவிட்டு, கண்ணுரங்கச் சென்றேன். ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலை பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சி என் மனத்திரையில் ஓடியது.  திடுக்கிட்டு எழுந்த நான், அது கனவு என்பதை வந்தியத்தேவன் போல புரிந்து கொண்டேன். கண்டது கனவானாலும் உடல் முழுவதும் வியர்த்து நனைந்து இருக்கக் கண்டேன். தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் உறங்கச் சென்ற போது மனம் சற்று அமைதி அடைந்தது.

ரணகள அரண்யத்தில், விஜயாலயனின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. முதுமையிலும் காயங்களுடன், கால்களை இழந்த பின்னும் போர்க்களத்தில் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து கடைசியில் வீரமரணம் அடைந்தது நெஞ்சை உலுக்கியது.

இதனைப் படிக்கும் போது நம்மாலும் வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்கொண்டு துணிந்து முன்னேறிச் செல்ல முடியும் என்பதை உணர முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com