பொன்னியின் செல்வன் வாசகர் பங்களிப்பு! 

பொன்னியின் செல்வன் வாசகர் பங்களிப்பு! 
-திருமாளம் எஸ். பழனிவேல்
வீராணம் ஏரி!

பொன்னியின் செல்வன் கதை ஆடிப்பெருக்கு  அன்று  'வீரநாராயண ஏரி' அருகே ஆரம்பமாகும். வடவாற்றின் வழியாக  தண்ணீர் வந்து அந்த ஏரியை பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது என்று கல்கி அவர்கள் எழுதியிருப்பார். அந்த ஏரியின் நீளம், அகலம், பிரம்மாண்டம் குறித்தும்… பல்லவ பேரரசர்கள் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளம் குட்டைகள் என்று சொல்லத் தோன்றும் என்றும்  வட காவிரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரை பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்த கடல் போன்ற ஏரியை உருவாக்கிய விதத்தைப் பற்றியும் அழகாக வர்ணித்து எழுதி நம்மை கதை நடந்த காலத்திற்கே அழைத்து சென்று வீராணம் ஏரியில் கால் பதிக்க வைத்திருப்பார்.

அந்த எரிக் கரையோரமாகவே வந்தியத்தேவன் தன் குதிரை மீது அமர்ந்து வந்து கொண்டு இருப்பதையும் ஆடிப் பெருக்கு விழா அக்காலத்தில் சோழ நாட்டில் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதையும் படிக்கும் போதே நாமும் அந்த மக்களோடு மக்களாக கலந்து சோழ நாட்டுக்கே சென்று விடுவோம்.

இந்த சிறப்பான வரலாற்று கதையில் முதலில் வரும் வீராணம் ஏரி வழியாக சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பயணித்தேன். அப்போது ஏரி முழுவதும் நிறைந்திருந்தது.  கதையில் சொன்னது போல பிரம்மாண்டமாக கடல் போன்று காட்சியளித்தது. நான் பயணித்த காரிலிருந்து இறங்கி அந்த ஏரியை எனது செல்போனில் படமெடுத்தேன்.  கரையோரமாக நடக்கும் போது எதிரே  வந்தியத்தேவன் குதிரையில்  வருவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.  மனக்கண்ணில் ஆடிப்பெருக்கு விழா காட்சிகள் தெரிந்தன. திடீரென்று ஆழ்வார்க்கடியான் வந்து குதித்து 'நாவலோ நாவல்' என்று கூச்சல் போடுவாரோ என்றும் மனசு நினைத்தது.

காலம் கடந்தும் ஒரு வரலாற்று நாவல் மனதில் நிற்கிறது என்றால் அதை எவ்வளவு சிறப்பாக கல்கி அவர்கள் எழுதி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்னும் படிக்காதவர்கள் படித்துவிட்டு ஒரு முறை வீராணம் ஏரிக்கு சுற்றுலா சென்று வாருங்கள்.  உங்களை வரவேற்க வந்தியத்தேவன் காத்திருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com