அமரர் கல்கியிடமே வேண்டினேன்!

அமரர் கல்கியிடமே வேண்டினேன்!

– ஒரு அரிசோனன்

ன்றளவும் ஒவ்வொரு சரித்திர எழுத்தாளரும் அமரர் கல்கியைத்தான் முன்மாதிரியாக வைத்து, தமது எண்ணங்களில் எழுந்து நடமிடும் கதாபாத்திரங்களை எழுத்தில் வடிக்க முற்படுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இல்லையேல் வரலாற்றுப் புதினங்களே உருவாகியிருக்க மாட்டா என்பதே எனது அசைக்க முடியாத துணிபு. இன்னும் அவரையொத்த எழுத்தாளரை யான் கண்டதில்லை. இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. அதுமட்டுமின்றி, வரலாற்றுப் புதினங்களின் பிதாமகராக விளங்கிய அவரால்தான் தமிழர்தம் பழம்பெரும் மன்னர்களின் பெருமை வெளிவந்தது.

முதன்முதலில் அமரர் கல்கியின் எழுத்துக்கு நான் அறிமுகமானது அவரது, 'பார்த்திபன் கனவு' மூலமாகத்தான். அந்தப் புதினத்தைத் திரைப்படமாக ஜுபிலி ஃபிலிம்சார் வெளியிட்டபோது, அதைச் சென்று பார்த்தேன். அதற்கு முன்னர் அப்படம் வெளிவருகிறது என்று தெரிந்ததும், நூல் நிலையத்தில் அப்புதினைத்தைப் படித்தேன். அதில் இறுதிப்புதிர் (சஸ்பென்ஸ்) சிவனடியார் வேடத்தில் வருபவர் பல்லவர் கோமான் மாமல்லர் என்பதே. திரைப்படத்தைப் பார்த்ததும் பிரமித்துப்போனேன். அமரர் கல்கியின் ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்றுத் திரையில் மின்னியது. முதல் காட்சியில் பொன்னன் ஓடத்தை ஓட்டும் காட்சியை எப்படி அமரர் விவரித்திருந்தாரோ, அப்படியே திரையில் கண்டேன். ஒவ்வொரு நடிகரும் புதினத்தின் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர்.

ஆனால், இவ்வளவு தூரம் உயிரைக் கொடுத்து, முழுமுயற்சியுடன் எடுத்த படம், புதினம் அளவுக்கு ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொள்ளவில்லை. ஏன் அப்படியானது என்று சிந்தித்ததும் என் மனதுக்குக் கிடைத்த விடை இதுதான்: பல்லவர் கோமான் மாமல்லன்தான் சிவனடியார் என்பது ரங்காராவ் அவர்களின் குரலாலும், உருவத்தாலும், முதலிலேயே ஊகிக்க முடிவதால், அமரர் கல்கி இறுதிப் புதிராக வைத்தது அடிபட்டுப்போய், படத்தின் சுவாரசியம் குறைந்துவிட்டது. அதிலிருந்து ஒரு காவியத்தைத் திரைப்படமாக மாற்றி, வெற்றி பெறுவதென்றால், திரைக்கதை எவ்வளவு முக்கியம்? அதன் முக்கியமான விவரம் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன்.

அதன் பிறகு, தேடித்தேடி அமரர் கல்கியின் புதினங்களைப் படிக்கத் தொடங்கினேன். 'பொன்னியின் செல்வன்' என் இதயத்தைக் கவர்ந்தது. வந்தியத்தேவனும், அருள்மொழிவர்மனும், பழுவேட்டரையரும், குந்தவையும், நந்தினியும், ஆழ்வார்க்கடியானும் என் மனக்கண்முன் திரைப்படக் கதாபாத்திரங்களாகத் தோன்றி நடமிட்டனர். 'இது திரைப்படமாக, அமரர் கல்கியின் எழுத்து நயம் சிறிதும் குறையாது, ஜுபிலி ஃபிலிம்ஸார் 'பார்த்திபன் கனவை' எடுத்தது போல எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்' என்று ஏங்கினேன்.

இதற்கிடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்கும் திரைப்படமாகப் பொன்னியின் செல்வன் வரவிருக்கிறது என்ற விளம்பரம் என்னை ஈர்த்தது. என் மனக்கண்ணில் மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன், பானுமதி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, எஸ்.வி.ரங்கா ராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் பொன்னியின் செல்வனின் பல பாத்திரங்களாகத் தோன்றி வலம் வந்தனர்.

கற்பனையில் அத்தனை பேருக்கும் என் மனதில் எந்தப் பாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குள்ளேயே விவாதம் செய்வேன்; நண்பர்களுடனும் விவாதிப்பேன். வாரம் மாறினால் நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களும் மாறும். ஒருவருக்கொருவர் காரசாரமாக விவாதம் செய்வோம். அத்துடன், 'பொன்னியின் செல்வன்' திரைப்படக் கனவும் கனவாகியே போனது. மீண்டும் அது நனவாக மாறுவது மிகழ்வும் மகிழ்வைத் தருகிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ல்லூரி, வேலை, குடும்பம், அயல்நாட்டுக் குடியேற்றம் எனப் பல எனது கற்பனைக்கும், எழுத்தாளனாகும் இலட்சியத்திற்கும் தாற்காலிகமான முற்றுப்புள்ளி வைத்தன. இருப்பினும், அது முற்றுப்புள்ளியாக இல்லை. சாம்பலுக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் அனலாகத்தான் இருந்தது. மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற நான் தமிழகம் திரும்ப பல ஆண்டுகள் ஆயின. தமிழகத்தில் பலவிடங்களிலும் சுற்றினேன். என்னைக் கவர்ந்தவை புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களோ, அடுக்குப்பாலங்களோ, மாளிகைகளோ அல்ல. தஞ்சைப் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலும்தான். அதிலும், கங்கைகொண்ட சோழபுரம் சென்றபோது அங்கு கோயில் சன்னிதியில் என்னுடன் அங்கிருந்தவர் என் மனைவியும், சகோதரியும்தான்; எதிரில் பிரம்மாண்டமான பெருவுடையார்.

நான் நின்றிருந்த இடத்தில்தானே, கோப்பரகேசரி இராஜேந்திர சோழன் நின்று தரிசனம் செய்திருப்பான், கங்கையிலிருந்து நீர் கொணரச் செய்து புனிதக் குடமுழுக்கு செய்திருப்பான், அதில் எத்தனை புளகாங்கிதமடைந்திருப்பான், தமிழர்தம் பெருமையை இப்பாரத பூமி மட்டுமன்றி; கடாரம், சாவகம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாடுகளைப் பரப்பியிருப்பான் என்றெண்ணி என் நெஞ்சு விம்மியது.  அவன் கால் பட்ட இடத்தில் நின்று இறைவனைத் தரிசிக்கிறோமே என்று உவகை கொண்டது. ஆயினும், வெளிவந்தவுடன் அந்த உணர்வுகள் நீங்கிப் பெருமூச்சே வந்தது. தமிழர்தம் பெருமையைப் பறைசாற்றிய கங்கைகொண்ட சோழபுரம் சிற்றூராகக் களையிழந்து கிடக்கிறது. இப்பொழுது தஞ்சை பெருவூராகப் பரிமளித்தது மராட்டிய சரபோஜி மன்னர்களால்தான். அதற்குமுன் அதுவும் அழிவைச் சந்தித்தது என்று எண்ணியபோது இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தது.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வரலாற்றைத் தமிழுலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆழ்ந்த வேட்கை, தாற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்த என் எழுத்து இலட்சியத்தைத் தட்டி எழுப்பி எரிமலையாக் வெடித்துக் கிளம்பியது. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து, பல பெரிய எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்கள் வடித்துள்ளனரே, வரலாற்றுப் புதினங்களை எப்படி வடிப்பது என்று சிந்தித்தேன். அமரர் கல்கியை என் மனக்கண் முன்னிருத்தி உதவி செய்யும்படி கேட்டேன். அவரே மௌன குருவாக, 'பொன்னியின் செல்வனை'யே துணைக்கழைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியதுபோலத் தோன்றியது.

என் மனதுள், 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு' மெல்ல மெல்ல உருவெடுத்தது. அமரர் கல்கி எப்படி முனைந்து ஆய்வு செய்து தமிழின் முதல் வரலாற்று நாவலைப் படைத்தாரோ, அப்படியே ஆய்வு செய்து பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவைத் தமிழன்னையின் வரலாற்றுப் புதினமாக எதிர்காலத்திற்கும், கடந்த காலத்துக்கும் ஒரு பாலமாக வடித்தெடுத்தேன்.

அதுவே, இன்று கல்கி குழும இணைய தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. கல்கியை வணங்குகிறேன். அவருக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com