அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் – ஓர் அண்ணாந்த பார்வை!

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் – ஓர் அண்ணாந்த பார்வை!

– நாவலாசிரியர் சுபா

ள்ளிப் பருவம். பாலாவும், சுரேஷும் ஒருவருக்கொருவர் அறிமுகம் கூட ஆகியிருக்கவில்லை. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாலா அப்போது இருந்தது திருவல்லிக்கேணியில் ஓர் ஒண்டுக் குடித்தன வீட்டில். அப்போதுதான் மோகனாக்கா பாலாவுக்கு அறிமுகமானார். மோகனாக்காவுக்கு நாற்பது வயது. இன்னோர் ஒண்டுக்குடித்தன வாசி. பிற்பகல் நேரங்களில் பாலாவின் வீட்டுக்கு வந்துவிடுவார். கையில் ஒரு கல்கி வார இதழ். சூரிய ஒளி மிகுந்திருக்கும் வராந்தாவில் அமர்ந்து, கல்கியைப் பிரிப்பார். கண்களை இடுக்கிக்கொண்டு படிக்கத் தொடங்குவார்.

அவரது தலை பெண்டுலம் போல் ஒரே சீராக இடதும் வலதுமாகப் போய் வரும். வாசிக்கும்போதே கல, கலவென்று சிரிப்பார். பதறுவார். தன்னை மறந்து ஓர் ஆனந்த உலகில் லயித்திருப்பார். 'இந்த 'ஆழ்வர்க்காடியான்' பண்ற கூத்து இருக்கே' என்று சொல்லியபடி விழுந்து விழுந்து சிரிப்பார். பாலாவுக்குப் பூனை ஆர்வம். அவர் அப்படி என்னதான் படிக்கிறார். மோகனாக்காவிடம் கேட்டார். அப்படித்தான் பொன்னியின் செல்வன் பாலாவுக்கு அறிமுகமானார். மோகனாக்கா ஆழ்வார்க்கடியான் பெயரை உச்சரிப்புப் பிழையோடு 'ஆழ்வர்க்காடியான்' என்றுதான் கூறுவார். மற்ற கதாபாத்திரங்களையும் அவர் பாணியில்தான் உச்சரிப்பார். ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தால்தான் என்ன? ரோஜா, ரோஜாதானே?

பாலாவின் விடாத பிடிவாதத்தால் கல்கி இதழ் வாராவாரம் வீட்டுக்கு வரத் தொடங்கியது. அப்படி வந்த முதல் இதழில் வந்தியத்தேவன் சோழ அரசின் நிலவறைக்குள் மாட்டிக் கொண்டிருந்த பகுதி வெளியாகி இருந்தது. நிலவறையில் வந்தியத்தேவன் நவரத்தினங்களையும், பொற்காசுகளையும் கண்டு விழிகளை விரித்து, ஒன்றிரண்டு எலும்புக்கூடுகளைக் கண்டு பதறி, வெளியே வர வழி தெரியாமல் திகிலில் ஆழ்ந்து, அவனுடைய தோழன் கந்தமாறன் முதுகில் கத்தியால் குத்தப்படும் காட்சியைக் கண்டு பதைத்து – என பாலா வாசித்த அந்தப் பகுதி மயிர்க்கூச்செரிய வைத்து, பொன்னியின் செல்வன் மேல் கண்டதும் காதல் கொள்ள வைத்தது.

அதுதான் அமரர் கல்கியின் வார்த்தை வர்ணனை ஜாலம். வாசிப்பவரைக் கைப்பிடித்துத் தன்னோடு அழைத்துச் சென்று கதைக்களத்திலேயே நம்மை ஓர் ஓரத்தில் பிளந்த வாயுடன் நிறுத்தி விட்டு, அவர் மட்டும் விலகிச் சென்றுவிடுவது!

அதன் பின் பொன்னியின் செல்வனை, மூன்று முறை வாசித்தும் அந்தக் காதல் குறையவே இல்லை. பாலாவுக்கு ஏற்பட்ட அதே காதல்தான் சுரேஷுக்கும் ஏற்பட்டது என்று பின்னாளில் தெரிய வந்தபோது (அங்கே சுரேஷின் அம்மா கல்கியின் பரம ரசிகை. பாட்டி பொன்னியின் செல்வனின் தொடர் ரசிகை!) அமரர் கல்கியின் எழுத்துக்கள் மீது நாங்கள் கொண்ட மரியாதைச் சிகரம், இமயத்தின் மிக உயரந்த சிகரத்தை விடவும் இன்றளவும் உயர்ந்து கொண்டே உள்ளது.

வ்வொரு முறை வாசிக்கும்போதும் மன முதிர்ச்சிக்கு ஏற்றவாறு பொன்னியின் செல்வன் வாசிப்பு அனுபவம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஆனந்த அனுபவமாகவே அமைவது பொன்னியின் செல்வனின் தனிச்சிறப்பு.

விடலைப் பருவத்தில் ரசித்த சில எழுத்துகள் பின்னாட்களில் வாசித்தபோது, 'இந்த எழுத்தையா நாம் அப்படி விழுந்து விழுந்து படித்தோம்?' என்று சூள் கொட்ட வைத்திருக்கின்றன.

பொன்னியின் செல்வன் அப்படி இல்லை. எந்தப் பருவத்திலும் அந்த அபூர்வப் படைப்பை வாசித்து ஆனந்தத்தில் திளைக்க இயலும்.

நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சியைப் போல மர்ம மங்கை பூங்குழலியின் பாத்திரம் இன்றளவும் வசீகரித்துக் கொண்டே உள்ளது.

தழும்புகளால் ஆன உடலைக் கொண்ட பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் கம்பீரமாக உலா வந்து, திருப்புறம்பியம் வெள்ள அலைக்கழிப்பிற்குப் பின் பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பாத்திரமாக உருமாறும் போது, நம்மையே அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து நொந்து கொள்ள வைக்கும் தன்மை கொண்டது.

சேந்தன் அமுதன் மற்றும் அவனுடைய ஊமைத்தாய் – இருவரும் கதையில் வரும் போதெல்லாம், எப்படியோ இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து அவர்கள் மீது கருணை சுரப்பதைத் தவிர்க்கவே இயல்வதில்லை.

வந்தியத்தேவன்தான் கதாநாயகன் என்றாலும், நட்புக்கு இலக்கணம் படைப்பதன் மூலம் அருள்மொழிவர்மர் அந்தக் கதாநாயக அந்தஸ்தை எப்படியோ தானும் பெற்று வானளாவ உயர்ந்து விடுகிறார்.

ஒருவரை ஒருவர் ஸ்பரிசித்துக் கொள்ளாமலேயே, ஸ்வீட் நத்திங் உளறல்களை உதிர்க்காமலேயே குந்தவையும், வந்தியத்தேவனும் காதல் வயப்படும் விதமானது, அவர்கள் ஜன்ம, ஜன்மங்களாக காதல் கொண்டு, அந்தக் காதல் அழியாமலே, இந்தப் பிறவிக்கும் இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்களோ என்ற உணர்வினை நம்மில் ஏற்படுத்துகிறது!

நந்தினி என்னும் நாகக்கன்னிகைதான் எவ்வளவு வசீகரம்! ஒரு பக்கம் பெரிய பழுவேட்டரையரைச் சமாளித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் தனது வேல் விழிகளின் சாகசத்தால் தன்னை அண்டுவோரை அடிமைப்படுத்தி, ரவிதாஸன், தேவராளன் கூட்டணியோடு சோழ சாம்ராஜ்யத்தின் மூத்த வாரிசை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு, அதற்காகவே தன் வாழ்நாள் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அந்த வனிதை மீது பரிதாபமும், வெறுப்பும் ஒரு சேர உண்டாவது வியப்புக்குரிய விஷயம்.

ஆழ்வார்க்கடியான் – ஓர் அற்புதக் கதாபாத்திரம்! சர்க்கஸ்களில் கோமாளிகள் சர்க்கஸ் சாகசங்கள் அனைத்தும் கைவரப் பெற்றிருப்பார்கள் என்னும் விதிக்கு ஏற்ப வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் திறனைக் கொண்டிருந்தாலும் முதல் மந்திரி அநிருத்தரின் ஒற்றன், நந்தினியின் வளர்ப்புச் சகோதரன், கதாநாயகன் வந்தியத்தேவனை தன் வாக்கு சாதுர்யத்தாலேயே பல இடர்களில் இருந்து மீட்பவன் என்ற வகையில் பன்முகத் திறமை பெற்றிருக்கும் ஆழ்வார்க்கடியான் கதையில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் உள்ளம் கொள்ளை போவது என்னவோ உண்மை!

அதீத உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் மயங்கி விழும் மங்கை வானதி, சிம்ம கர்ஜனை புரியும் ஆதித்த கரிகாலன், ஊமைப் பெண்ணைக் காண நேரும் போதெல்லாம் செயல் இழந்து போகும் சுந்தர சோழர், அரச குடும்பத்து மகளிர் ஏறும் மூடுபல்லக்கில் ஒளிந்து உலா வரும் மதுராந்தகத் தேவர், துடிக்கும் மெல்லிய நீளமான மீசை கொண்ட, கோபக் கொந்தளிப்பான சின்னப் பழுவேட்டரையர் என்று எந்தப் பாத்திரப் படைப்பும் பொன்னியின் செல்வனில் ஏப்பை, சப்பையான கதாபாத்திரங்கள் அல்ல.

தேபோல் எதிர்பாராத சம்பவங்கள் அடுக்கடுக்காய் நிகழும்போது வாசிப்பவர் யாராயினும் அந்தக் காலகட்டத்திற்கே போய் சம்பவ மாந்தர்களின் ஊடே தானும் ஒரு மாந்தராய் மாறிப்போகும் ரசவாத வித்தையை பொன்னியின் செல்வனை வாசித்து முடித்த பின்பே உணர இயலும். ஒப்புவமை சொல்ல இயலாத பிரமிப்பை எய்த இயலும்!

தேவராளன் தேவராட்டி ஆட்டத்தை ஒட்டி நிகழும் சதி ஆலோசனையின்போதும், கொள்ளி வாய்ப்பிசாசுகளை பூங்குழலியுடன் சேர்ந்து வந்தியத்தேவன் கண்ணுறும் போதும், இலங்கைக் காட்டினில் யானையிடம் சிக்கி ஆழ்வார்கடியான் பள்ளத்தாக்கில் வீழும் போதும், நடுக்கடலில் புயலில் சிக்கி அருள்மொழியும், வந்தியத்தேவனும் போராடும் போதும், திருப்புறம்பியத்தில் வெள்ளத்தில் சிக்கும் பழுவேட்டரையரையர் எதிர்பாரா இடர்களை எதிர்கொள்ளும் போதும், நிலவறை ரகசியச் சுரங்க வழியே ஊமைப் பெண் எட்டிப் பார்க்கும்போதும், ஆதித்த கரிகாலன் படுகொலையுறும்போதும் – இன்னும் இது போல எதிர்பாராத எக்கச்சக்கமான அதிரடி சம்பவ நிகழ்வுகளின்போது… வாசகர் கதை மாந்தர்களில் தாங்களும் ஒருவராக மாறி அந்தக் காலகட்டத்திலேயே பயணித்ததை பிரமிப்புடன் நினைவு கூர இயலும்.

சேந்தன் அமுதன் யார், நந்தினி யார், ஊமைப் பெண் யார் என்ற மர்ம முடிச்சுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவிழும்போது நம்முள் எழும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

பாமரர் முதல் படிப்பாளர்கள் வரை தன் வசம் ஈர்த்துப் பிடித்துத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பொன்னியின் செல்வனைப் படைத்திருக்கும் அமரர் கல்கியின் மீது நாங்கள் என்னதான் புகழாரம் சூட்டினாலும் அது மாலை கட்டத்தெரியாதவர்கள் கட்டிய அரை குறை மாலையாகத்தான் இருக்கும். எந்நாளும் நாங்கள் அண்ணாந்தே பார்த்து, பிரமித்துக் கொண்டிருக்கும் அமரர் கல்கியைப் பாராட்டும் அளவுக்கான தகுதி இன்னும் எங்களுக்கு வரவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com