0,00 INR

No products in the cart.

பிரம்மாண்டத்தின் அடையாளம்!

– ஓவியர் ஸ்யாம்

நாவல் உலகின் பிரம்மாண்டமாக ‘பொன்னியின் செல்வன்’ இன்றளவும் பேசப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ கதையை பல பேர் என்னிடம் பலவாறாக, பலவிதங்களில் கூறக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். எத்தனை விதமாக யார் கூறினாலும் அதில் உள்ள பிரம்மாண்டத்தையும் அழகையும் அவர்கள் குறிப்பிடாமல் இருந்ததில்லை. என் சிறுவயதில் கல்கியில் ‘பொன்னியின் செல்வன்’ தொடராக வந்தபோது நான் ஓவிய ஆர்வம் கொண்டவன் என்பதால் அந்த ஓவியங்களை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் மனம் லயிப்பேன்.

அந்த வரலாற்றுக் காவியத்திற்குப் பல பேர் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு மணியம் அவர்கள் வரைந்த ஓவியங்களே மிகவும் பிடிக்கும். ஏனென்றால், கல்கி அவர்கள் கற்பனையால் தனது எழுத்தில் வடித்த கதாபாத்திரங்களுக்கு, சொற்களில் அவர் வர்ணித்திருந்த அந்த குணச்சித்திரங்களுக்கு தனது தூரிகையால் முதன்முதலில் உருவம் கொடுத்தவர் மணியம் அவர்கள்தான். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள் வரும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் வெவ்வேறு வடிவில் உருவம் கொடுத்திருக்கிறார். எனவேதான், ‘பொன்னியின் செல்வன்’ கதையோடு மணியம் அவர்களின் ஓவியங்களையும் சேர்த்துதான் வாசகர்கள் ரசித்தார்கள். அந்தக் காலத்தில் அந்தக் கதையையும் ஓவியத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இணைத்தே ரசித்தார்கள். ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு வினு அவர்களும் ஓவியங்கள் வரைந்து இருக்கிறார். அவர் எங்கள் பக்கத்து வீட்டில்தான் வசித்தார். அப்போது நான் இதுபற்றி அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன்.

‘பொன்னியின் செல்வன்’ தொடருக்கு ஓவியம் வரையும்படி எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போதைய சூழலின் காரணங்களால் என்னால் அதைச் செய்ய இயலவில்லை. இப்போது அதை நினைத்தாலும் எனக்கு வருத்தமாக உள்ளது. அதேவேளை, அமரர் கல்கி அவர்களின் ‘தியாக பூமி’ தொடருக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு எனக்கு 17 வயதில் கிடைத்தது. அதன் பிறகு ‘பார்த்திபன் கனவு’ நாவலுக்கும் நான் ஓவியங்கள் வரைந்தேன்.

‘பொன்னியின் செல்வன்’ நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு ஏராளமானோர் அதைப் பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிறைய பதிப்பகங்களுக்கு நான் அட்டை ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கிறேன். 67 வகையில் பதிப்பகங்களுக்கு அட்டை ஓவியங்கள் வரைந்து கொடுத்திருக்கிறேன்! தமிழில் மட்டுமல்ல; வரலட்டி ரங்கசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொன்னியின் செல்வனுக்கும் நான் அட்டை ஓவியங்கள் வரைந்து இருக்கிறேன். அப்போது, ‘பொன்னியின் செல்வன்’ என்கிற பிரம்மாண்டத்தில் நாமும் ஆழ்ந்து இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்.

நான் அட்டைப் படத்திற்காக அதிகம் வரைந்தது குந்தவைதான். பிற கதாபாத்திரங்களையும் வரைந்திருக்கிறேன். ஆனாலும், வருகிறவர்கள் அனைவரும் குந்தவையையே வரைந்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்போதெல்லாம் நான் மணியம் அவர்களின் ஓவியங்களையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு எனது பாணியில் அதை வரைந்திருப்பேன். இப்போதும் வரைந்து வருகிறேன். சுருக்கமாகச் சொன்னால் அவர் போட்ட அஸ்திவாரத்தில்தான் நாங்கள் கட்டடம் கட்டி வருகிறோம். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் வரும் கதாபாத்திரங்களில் அழகுக்கும் கம்பீரத்திற்கும் வீரத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் ஆளுமைக்கும் புத்திசாலித்தனத்திற்கும் தியாகத்திற்கும் ஏன் நகைச்சுவைக்கும் கூட இடம் உண்டு. அந்த வகையிலான கதாபாத்திரங்கள் அதில் ஏராளம்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலில் பிரதான நாயகன் போல் வந்தியத்தேவன்தான் வருவார். ஆனால், அந்நாவலின் பிரதான நாயகன் அருள்மொழி வர்மன்தான் என்பது நாவலை முழுமையாக வாசித்தவர்களுக்கே புரியும். ‘அழகில் சிறந்தவர் பூங்குழலியா? குந்தவையா?’ என்று வாசகர் மத்தியில் பட்டிமன்றமே நடக்கும். அதேமாதிரி, ‘அருள்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், சுந்தர சோழர் இவர்களில் அறிவில், வீரத்தில் சிறந்தவர் யார்’ என்றும் பேசப்படுவார்கள். இவர்கள் தவிர, வானதி, பெரிய பழுவேட்டரையர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் நம்பி என்று   முக்கியமான கதாபாத்திரங்களே ஏராளமாக இருக்கும். துணை கதாபாத்திரங்களுக்கும் பஞ்சமில்லை.

ண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும்போது விற்பனையில், ‘பொன்னியின் செல்வன்’ அடையும் வெற்றியைக் கேள்விப்படும்போது ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் சூப்பர் ஸ்டாராக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது, ‘பொன்னியின் செல்வன்.’

கால ஓட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ என்கிற நாவல் பற்றி இந்தக் கால இளைஞர்களும் பேசுகிறார்கள். இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று பேசுகிற அதே நேரத்தில் விற்பனையில் இந்த நாவல் சூப்பர் ஸ்டாராக இருப்பது ஆச்சரியமான விஷயம். அப்படிப்பட்ட மேஜிக் படைப்பதுதான், ‘பொன்னியின் செல்வன்.’ அந்நாவல் திரைப்பட வடிவில் எப்படி வரப்போகிறது என்பதைக் காண நானும் ஒரு ரசிகனாக ஆவலோடு காத்திருக்கிறேன்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

கல்கியின் எழுத்தில் ஒரு மணிமகுடம்!

- எழுத்தாளர், பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் `பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை...

அமர காவியம் பொன்னியின் செல்வன்!

0
- ஐங்கரன் “பக்தி மேலீட்டால் கடவுளையே மறந்து விடுவார்கள் சில பக்தர்கள்” என்று சொல்வதுண்டு. பலரின், ‘பொன்னியின் செல்வன்‘ அனுபவமும் இப்படித்தான் இருக்கிறது. எழுதியவரைக்கூட மறந்து, கதையில் ஆழ்ந்து விடுவார்கள். படித்து முடிந்த பிறகு...

அமரர் கல்கியிடமே வேண்டினேன்!

- ஒரு அரிசோனன் இன்றளவும் ஒவ்வொரு சரித்திர எழுத்தாளரும் அமரர் கல்கியைத்தான் முன்மாதிரியாக வைத்து, தமது எண்ணங்களில் எழுந்து நடமிடும் கதாபாத்திரங்களை எழுத்தில் வடிக்க முற்படுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இல்லையேல்...

வரலாற்று ஆர்வத்தைத் தூண்டிய நாவல்!

- பேராசிரியை கே.பாரதி பொன்னியின் செல்வன் புதினம் எனது இளம் வயது வாசிப்பு அனுபவத்தில் ஒரு மைல் கல். அந்தக் காலத்தில் வானொலியில் சினிமாப் பாட்டு கேட்பது கூட தவறு என்று கருதிய ஒரு...

தாளெடுத்து செய்த சாதனை!

2
- கல்வியாளர் பேராசிரியர் வவேசு நான் முழுக்க முழுக்க ஒரு சென்னைவாசி. திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் பிறந்து, தி.நகர் எனப்படும் மாம்பலத்தில் வளர்ந்தவன். நான் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே என் தந்தையார் எங்கள் பூர்வீகமான...