கல்கி படைத்த காவியம்!

கல்கி படைத்த காவியம்!

– அரசியல் தலைவர் வைகோ

சோழ நாட்டின் பெருமையை, வரலாற்றுச் சுவடுகளில் முறையாகப் பதிவு செய்ய நமது முன்னோர்கள் தவறி இருந்தாலும் செப்பேடுகளில், கல்வெட்டுகளில் தமிழ் மக்கள் பொறித்து வைத்திருக்கின்ற செய்திக் குறிப்புகளைக் கொண்டு, 'பொன்னியின் செல்வன்' எனும் ஒரு காவியத்தை, ஒரு வரலாற்றுப் புதினத்தைப் படைத்தார் அமரர் கல்கி.

வரலாறு முறையாக எழுதப்பட வேண்டும். இது சோழர்களின் வரலாறைக் குறிக்கின்ற நாவல். இதில் வருபவை உண்மைக் கதாபாத்திரங்கள். எனவே, ஆனைமங்கலத்துச் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மற்றும் திருச்சி மாவட்டம் அன்பில் கிராமத்துச் செப்பேடுகளில் இருந்தும், இன்னும் பல இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியும், உண்மைச் சம்பவங்களை வைத்துக்கொண்டு கள ஆய்வு செய்து, அத்துடன் கற்பனையும் கலந்து ஓர் அரிய காவியமாக, 'பொன்னியின் செல்வனை' படைத்திருக்கின்றார் அமரர் கல்கி.

ந்தத் தமிழ் மண்ணில் இசை பிறந்து, கூத்து நிகழ்ந்து, பின்னர் இயல் வளர்ந்து, குறுங்கதையும், நெடுங்கதையும் உரைநடை இலக்கியத்தின் பகுதிகளாக வளர்ந்துவந்த நாட்களில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் போற்றிய நெறிகளை, வரலாறை கல்கி அவர்கள் சரித்திர நவீனங்களாகத் தந்தார்.

நான் மிகச் சிறிய வயதில், பள்ளி மாணவனாக இருந்த பருவத்தில் என் இல்லத்துக்கு, 'சுதேசமித்திரன்' நாளேடும் 'கல்கி' வார ஏடும் வந்தன. கல்கியில் வெளியான 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' தொடர்கள் தொகுக்கப்பட்ட பைண்டு வால்யூம்களை அரிக்கன் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் நான் ஆர்வத்துடன் படித்தேன். அவற்றில் இலயித்துப் போனேன். கல்கி அவர்கள் தமக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் எழுதி முடித்து, அதன் பிறகு பொன்னியின் செல்வனுக்கு வருகிறார். 1950 அக்டோபர் 29இல் 'பொன்னியின் செல்வன்' எழுதத் தொடங்கி, 1954ஆம் ஆண்டு மே திங்களில் முடிக்கிறார்.

சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப் போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து. கல்கியின் எழுத்துகளைப் படித்ததன் விளைவாகத்தான் தமிழர் வரலாற்றின் மீது, தமிழர்களின் நாகரிகம், கலாசாரத்தின் மீது, கடந்த கால மகோன்னதமான சாதனைகள் மீது சிறிய வயதில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அதன் காரணமாகவே கல்லூரிக்குச் சென்றபோது அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் என் உள்ளத்தைத் தந்து, நான் திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன்.

ஆகஸ்ட் 03,2014 தேதியிட்ட 'கல்கி' வார இதழில் வெளியானது…
நன்றி: கல்கி களஞ்சியம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com